அடுத்த நிர்வாகியைத் தேடும் யுனைடெட்: முடிவெடுக்காத அமோரிம்
மான்செஸ்டர்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துக் குழுவான மான்செஸ்டர் யுனைடெட் அதன் அடுத்த நிர்வாகியை நியமிக்கும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.போர்ச்சுகீசியக் குழுவான ஸ்போர்ட்டிங் லிஸ்பனின் நிர்வாகியான ரூபன் அமோரிம், அடுத்த யுனைடெட் நிர்வாகியாக பொறுப்பேற்பார் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்போர்ட்டிங்குடன் அவருக்கிருக்கும் ஒப்பந்தத்தை முடித்துக்கொள்ளத் தேவையான 8.3 மில்லியன் பவுண்ட் (14.3 மில்லியன் வெள்ளி) தொகையை செலுத்த யுனைடெட் தயாராய் இருக்கிறது என்று முன்னதாகத் தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில், தனது வருங்காலம் குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என்று அமோரிம் தெரிவித்துள்ளார். போர்ச்சுகீசிய லீக் கிண்ணப் (Portuguese League Cup) போட்டியில் நேசியனல் குழுவுக்கு எதிரான ஆட்டத்தில் ஸ்போட்டிங் 3-1 எனும் கோல் கணக்கில் வென்ற பிறகு அமோரிம் அவ்வாறு கூறினார்.“இன்னும் எதுவும் முடிவாகவில்லை. இதுவே (ஸ்போர்ட்டிங்கில்) எனது கடைசி ஆட்டமா என்பது எனக்குத் தெரியாது,” என்று செவ்வாய்க்கிழமையன்று (அக்டோபர் 29) அந்த ஆட்டத்திற்குப் பிறகு நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் சொன்னார் அமோரிம்.ஸ்போர்ட்டிங்கின் அடுத்த லீக் ஆட்டத்தை முன்னிட்டு புதன்கிழமையன்று (அக்டோபர் 30) நடைபெறவிருக்கும் பயிற்சியைத் தான் நடத்தவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.