ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் இன்று துவக்கம்

தினமலர்  தினமலர்
ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் இன்று துவக்கம்

புதுடில்லி–மத்திய நிதியமைச்சர் தலைமையிலான, 47 வது ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் இன்று துவங்குகிறது.இன்றும் நாளையும் நடைபெறும் இக்கூட்டத்தில், வெகு சில பொருட்களுக்கான வரியில் மட்டுமே மாற்றங்கள் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இக்கூட்டத்தில், அதிகாரிகள் குழுவின் பரிந்துரைகள் குறித்த ஆலோசனைகளும் மேற்கொள்ளப்படும் என தெரிகிறது.இந்த கூட்டத்தில், மாநிலங்களுக்கான இழப்பீடு குறித்த ஆலோசனைகளும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநிலங்களுக்கு வழங்கப்படும் 5 ஆண்டு காலத்துக்கான இழப்பீடு ஜூன் மாதத்துடன் நிறைவடைகிறது. இதை தொடர வேண்டும் என, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் வலியுறுத்தி வருகின்றன. கூட்டத்தில் 215 பொருட்களுக்கான வரியில் எந்த விதமான மாற்றமும் செய்யப்படாது என அதிகாரப்பூர்வ மற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த கூட்டத்தில் முக்கியமான இரண்டு விஷயங்கள் குறித்த பரிந்துரைகள் ஆலோசிக்கப்படலாம். முதலாவது, வரி அடுக்குகளை மாற்றுவது சம்பந்தமான மாநில நிதியமைச்சர்கள் கூட்டத்தின் பரிந்துரைகள். அடுத்தது, குதிரை பந்தயம், சூதாட்டம், ஆன்லைன் கேமிங் ஆகியவற்றுக்கு, அதிகபட்ச 28 சதவீத வரியை விதிப்பது குறித்த அதிகாரிகள் குழுவின் பரிந்துரைகள். இவை இரண்டும் முக்கியத்துவம் பெற்றுள்ளன.மார்ச் 31ம் தேதி வரை மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய இழப்பீடுகள் அனைத்தையும், மத்திய அரசு அண்மையில் முழுமையாக வழங்கி விட்டது குறிப்பிடத்தக்கது.


மூலக்கதை