ஹெலிகாப்டரில் தப்பிச் சென்ற கனடா சிறைக்கைதிகள்

தமிழ்நியூஸ்நெற்  தமிழ்நியூஸ்நெற்
ஹெலிகாப்டரில் தப்பிச் சென்ற கனடா சிறைக்கைதிகள்

கனடா நாட்டின் கியுபெக் நகரத்தில் உள்ள காவல் தடுப்பு மையத்தில் வைக்கப்பட்டிருந்த மூன்று கைதிகள் நேற்று ஹெலிகாப்டர் ஒன்றில் தப்பிச் சென்றது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விசாரணை ஒன்றிற்காக அவர்கள் இந்த காவல் மையத்தில் சிறை வைக்கப்பட்டிருந்தனர்.

ஆர்சன்வில்லே தடுப்பு மையத்திலிருந்து மேற்கு நோக்கி அந்த ஹெலிகாப்டர் பறந்து சென்றதாக மாகாண காவல்துறையினர் கூறியுள்ளனர். கியுபெக் நகரத்திலும் அதனைச் சுற்றியுள்ள இடங்களிலும் உள்ள விமான நிலையங்கள், ராணுவத்தளங்கள் போன்றவற்றிலும் தேடுதல் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக இவர்கள் தெரிவித்தனர். அதுமட்டுமின்றி தரைவழித் தேடலிலும் ஈடுபட்டுள்ளதாக காவல்துறை தகவல் தொடர்பாளர் ஆட்ரே ஆன் பிலோடியு குறிப்பிட்டுள்ளார்.

டுவிட்டரில் வெளிவந்த தகவல்களின் மூலம் யுவெஸ் டெனிஸ், டெனிஸ் லேபெப்ரே, செர்கே போமெர்லியு என்று அவர்களின் பெயர்களை அறிவித்துள்ள காவல்துறையினர் அவர்களைக் காண நேருவோர் காவல்துறையினரை உடனடியாகத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

இது கடந்த இரண்டு ஆண்டுகளில் அங்கு நடைபெற்றுள்ள இரண்டாவது சம்பவமாகும். கடந்த வருடம் மார்ச் மாதம் அங்குள்ள செயின்ட் ஜெரோம் சிறையிலிருந்து இரண்டு கைதிகள் ஒரு ஹெலிகாப்டரில் தப்பிச் சென்றனர். பறந்துகொண்டிருந்த ஹெலிகாப்டரின் விமானியைத் துப்பாக்கி முனையில் மிரட்டி இந்த சம்பவம் நடைபெற்றதாகக் கூறப்பட்டது.

இவர்கள் தப்பிச் சென்ற சில மணி நேரங்களிலேயே கடத்தலில் சம்பந்தப்பட்ட சந்தேக நபர்கள் இருவரையும், தப்பிச் சென்ற கைதிகளையும் காவல்துறையினர் பிடித்தனர் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.

மூலக்கதை