தமிழ் தலிபான் பயங்கரவாதிகளுடன் கைகோர்த்திருக்கும் அனந்தியும் அரியமும் சிவாஜியும்: நக்கீரன்

தமிழ்நியூஸ்நெற்  தமிழ்நியூஸ்நெற்
தமிழ் தலிபான் பயங்கரவாதிகளுடன் கைகோர்த்திருக்கும் அனந்தியும் அரியமும் சிவாஜியும்: நக்கீரன்

இரண்டு நாட்களுக்கு முன்னர் தமிழ் ஒலி வானொலி (பிரான்ஸ்) என்னோடு தொடர்பு கொண்டு நேர்காணல் கண்டது. பிரான்சில் கடந்த 15 ஆண்டுகளாக தமிழர் புனர்வாழ்வுக் கழகம் யூலை முதல் வாரத்தில் விளையாட்டுப் போட்டியை நடத்தி வருகிறது. இந்த ஆண்டு அங்கு புலி அமைப்பு என்று சொல்லிக் கொள்ளும் Coordinating Committee of Tamils-France (CCTF) விளையாட்டுப் போட்டியை ஒன்றாகச் சேய்வோம் என்று கேட்டிருக்கிறது. அது பற்றிப் பேச்சு வார்த்தை நடந்தது. ஆனால் அது தோல்வியில் முடிந்தது. உடனே கரும்புலிகள் நாளில் நடக்கும் போட்டியைப் புறக்கணியுங்கள் என்று CCTF பரப்புரை செய்கிறது. பேச்சு வார்த்தை வெற்றி கண்டிருந்தால் நாள் பற்றி அந்த அமைப்புக்கு கவலை இருந்திருக்காது. பேச்சு வார்த்தை தோல்வி என்பதாலேயே இந்த மோதல் போக்கு. இந்தச் சண்டித்தனம்.

கடந்த ஆண்டு ரொறன்ரோவில் பெட்னா தமிழ்விழா நடந்தது. அதனை கனடிய தமிழர் பேரவை முன்னின்று நடத்தியது. ஆனால் அதனைச் செரித்துக் கொள்ள முடியாத கனடா தேசிய மக்கள் அவை (அந்த அமைப்பும் பெட்னாவில் உறுப்பினராக இருக்கிறது) பார் பார் கரும்புலி நாளில் தமிழ் விழா வைக்கிறார்கள் – இவர்கள் பாபிகள் – துரோகிகள் – மக்களே அந்த விழாவைப் புறக்கணியுங்கள் எனப் புலிக் கொடி தூக்கினார்கள். ஆனால் பெட்னா விழா வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இதில் பகிடி என்னவென்றால் கடந்த 25 ஆண்டுகளாக பெட்னா தமிழ்விழா அமெரிக்காவில் யூலை முதல் வாரத்தில்தான் நடைபெற்றது. காரணம் யூலை 4 அமெரிக்க சுதந்திர நாள். நீண்ட வாரவிடுமுறை. அதில் உலகத் தமிழர் இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டிருந்திருக்கிறார்கள்.

இந்தப் போலி புலி ஆதரவாளர்கள் ‘நாங்களே எல்லாவற்றையும் தீர்மானிப்போம். நாங்களே தமிழ்த் தேசியத்தை குத்தகைக்கு எடுத்துள்ளோம், நாங்களே வன்னியில் வாரிசுகள் மற்றவர்கள் வாய்பொத்தி கைகட்டி நாங்கள் சொல்வது போல் நடக்க வேண்டும் நாங்கள் சொல்வதை ஏற்றுக் கொள்ள வேண்டும்’ எனக் கட்டளை பிறப்பிக்கிறார்கள். ஏற்றுக் கொள்ளத் தவறினால் உடனே இருப்பில் இருக்கவே இருக்கிறது ‘தமிழ்த் துரோகி’கள் பட்டம்.

இப்படித்தான் தலிபான்கள் பெண்பிள்ளைகள் பள்ளிக் கூடம் போகக் கூடாது, பெண்கள் வேலை செய்யக் கூடாது, சிறு பிள்ளைகளுக்குத் தடுப்பூசி போடக் கூடாது, திரைப்படம் பார்க்கக் கூடாது, முடிதிருத்தும் நிலையம் நடத்தக் கூடாது, பெண்கள் காலில் இருந்து தலைவரை கருப்பு ஆடை அணிய வேண்டும் வேறு ஆடை அணியக் கூடாது எனத் தடை செய்கிறார்கள். பெண் மாணவிகள் படிக்கும் பள்ளிக் கூடங்களைக் குண்டு வைத்துத் தகர்க்கிறார்கள். தங்கள் கட்டளைகளை மீறுவோர் அல்லாவுக்கு எதிரானவர்கள் என்று சொல்லி சுட்டுக் கொல்லுகின்றார்கள். கொன்று வருகிறார்கள்.

கரும்புலி நாளில் விளையாட்டுப் போட்டி நடத்தக் கூடாது, தமிழ்விழா கொண்டாடக் கூடாது என்று புலிகளின் பெயரைச் சொல்லி தடை செய்பவர்களைப் பார்க்கும் போது இவர்களையும் தலிபான்கள் – தமிழ்த் தலிபான்கள் – என்று அழைக்க வேண்டியுள்ளது!

ரொறன்ரோவில் தமிழர்கள் செறிந்து வாழும் றூச் றிவர் என்ற தொகுதியில் கரி ஆனந்தசங்கரி என்ற தமிழர் லிபரல் கட்சி சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட முன்வந்துள்ளார். இவர் ஒரு சட்டத்தரணி. நீண்ட காலம் மனித உரிமைகளுக்காக கனடாவிலும் ஜெனிவாவிலும் குரல் கொடுத்து வருபவர். வன்னியில் மருத்துவர் சத்தியமூர்த்தி நடத்தி வரும் தொண்டு நிறுவனத்துக்கு கல்வி கொனக்க்ஷன் என்ற அமைப்பு மூலம் கடந்த 3 ஆண்டுகளாக நிதி திரட்டி உதவி செய்து வருகிறார். கனடிய தமிழர் பேரவையின் சட்ட ஆலோகர். ஆனால் இங்குள்ள தமிழ்த் தலிபான்கள் கரி ஆனந்தசங்கரி என்ற தமிழரை எதிர்த்து வீடு வீடாகச் சென்று கதவுகளைத் தட்டிப் பரப்புரை செய்கிறார்கள். பொதுமக்களுக்குச் சொந்தமான ஆனால் அவர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் கனடிய தமிழ் வானொலி ஊடாகவும் உலகத்தமிழர் செய்தித்தாள் ஊடாகவும் பரப்புரை செய்கிறார்கள்.

கரி ஆனந்தசங்கரிக்கும் அவரது தந்தையாரின் அரசியலுக்கும் முடிச்சுப் போட்டு அவருக்கும் ‘துரோகிப் பட்டம்’ கட்டுகிறார்கள். கரி ஆனந்தசங்கரி முள்ளிவாய்க்காலில் நடந்தது இனப்படுகொலை என்பதை ஏற்க மறுக்கிறார் என்ற பொய்ப் பரப்புரையை கட்டவிழ்த்து விட்டிருக்கிறார்கள்.

வேலிக்கு ஓணான் சாட்சி என்பது போல ததேகூ யை சேர்ந்த அனந்தி சசிதரன், பா. அரியனேந்திரன், சிவாஜிலிங்கம், கஜேந்திரன் பொன்னம்பலம் (இவர்களுக்கு பொன்னம்பலத்தின் முதல்ப் பெயர் கூட சரியாகத் தெரியவில்லை) சாட்சிக்கு இழுத்துள்ளார்கள். இந்த நால்வரையும் விட வேறு யாருமே இந்த தமிழ்த் தலிபான்களுக்கு கிடைக்கவில்லை என்பது பெரிய சோகம்.

அதைவிடப் பெரிய சோகம் என்னவென்றால் கரி ஆனந்தசங்கரியை ‘அடையாளம் கண்டு பொதுவாழ்வில் இருந்து முற்று முழுதாக அப்புறப்படுத்துமாறு உரிமையோடு கேட்டுக்கொள்கின்றோம்’ என அறிக்கை விடும் இந்தத் தமிழத் தலிபான்கள் கரி ஆனந்தசங்கரிக்கு எதிராக ஒரு பஞ்சாபியை ஆதரித்து பரப்புரை செய்கிறார்கள். அவரை அழைத்துச் சென்று தமிழர்களது வீட்டுக் கதவைத் தட்டி வாக்குப் பிச்சை கேட்கிறார்கள். இதைவிடக் வெட்கக் கேடு, மானக்கேடு, பச்சைத் துரோகம், காட்டிக் கொடுப்பு அதுவும் தமிழ்த் தேசியத்தின் பெயரில் வேறு எதுவும் இருக்க முடியுமா?

நக்கீரன்

மூலக்கதை