அம்பலமானது இலங்கையின் கோர முகம்! டாக்டர் ராமதாஸ்

NEW INDIA NEWS  NEW INDIA NEWS
அம்பலமானது இலங்கையின் கோர முகம்! டாக்டர் ராமதாஸ்

இலங்கையின் கோர முகத்தை ஐ.நா மனித உரிமை ஆணைய தலைவர் நவநீதம் பிள்ளை அம்பலமாக்கியுள்ளதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுகுறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் குறித்து கடந்த ஒரு வாரமாக அந்நாட்டில் விசாரணை நடத்திய ஐ.நா. மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை, அங்கு நிலவும் சூழல் குறித்து அதிர்ச்சி நிறைந்த உண்மைகளை கூறியுள்ளார்.

அதன் மூலம் இலங்கையின் கோர முகம் அம்பலமாகியுள்ளது. இலங்கயில் போர் வேண்டுமானால் முடிவடைந்திருக்கலாம், ஆனால் அங்கு ஜனநாயகம் தொடர்ந்து நசுக்கப்படுகிறது.

சட்டத்தின் ஆட்சி அழிந்து வருகிறது. இலங்கை சர்வாதிகார ஆட்சி முறையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

இலங்கையின் நிலை குறித்து என்னிடம் புகார் கூறிய மனித உரிமை ஆர்வலர்களும், பொதுமக்களும் இராணுவத்தினரால் மிரட்டப்பட்டிருக்கிறார்கள்.

இலங்கையில் நான் இருக்கும்போதே இந்த அளவுக்கு மனித உரிமை மீறல்கள் நடந்திருப்பது கண்டிக்கத்தக்கது என்றும் அவர் குற்றப்பத்திரிகை வாசித்திருக்கிறார்.

மேலும் இலங்கைப் போரின் போது அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டது, விடுதலைப் புலிகளுக்கும், அவர்களின் ஆதரவாளர்களுக்கும் விசாரணையின்றி மரண தண்டனை அளிக்கப்பட்டது, வெள்ளை வேனில் ஆட்கள் கடத்தப்பட்டது, ராணுவமயமாக்கலால் தமிழ் பெண்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு, பத்திரிகையாளர்களுக்கு எதிரான அடக்குமுறை ஆகிய மனித உரிமை மீறல்கள் குறித்து நம்பகமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் நவநீதம்பிள்ளை வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் போர் முடிவடைந்து 4 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், அங்கு நிலைமை சீரடைவதற்கு மாறாக சீரழிந்து வருகிறது என்பது நவநீதம் பிள்ளையின் அறிக்கையின் மூலமாக உறுதியாகியிருக்கிறது.

இலங்கையில் நிலவும் மிக மோசமான மனித உரிமைச் சூழல் குறித்து சான்றளிக்க ஐ.நா. மனித உரிமை ஆணையரை விட சிறந்த ஒருவர் இருக்க முடியாது. போருக்குப் பிறகு இலங்கையில் நிலைமை மேம்பட்டு வருவதாக கூறி வந்த இந்திய வெளியுறவுத் துறையினரின் முகமூடி இதன் மூலம் கிழிக்கப்பட்டிருக்கிறது.

கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் பேசும்போது நவநீதம் பிள்ளை முன்வைத்த குற்றப்பத்திரிக்கையில் இடம் பெற்றுள்ள குற்றச்சாற்றுகள் மிகவும் கடுமையானவை.

இதற்கான ஆதாரங்கள் தெளிவாக இருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார். இலங்கை மீது சர்வதேச போர்க்குற்ற விசாரணை நடத்துவதற்கு இவற்றைவிட வலிமையான ஆதாரங்கள் தேவையில்லை.

இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் குறித்து அந்நாட்டு அரசே விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் மூலம் இரண்டு ஆண்டுகள் காலக்கெடு கொடுத்த பிறகும் ராஜபக்சே அரசு இன்றுவரை ஆக்கபூர்வமாக எதையும் செய்யவில்லை.

எனவே இலங்கை அரசை காப்பாற்றும் முயற்சிகளில் ஈடுபடுவதை இந்தியா கைவிட வேண்டும். மாறாக, இலங்கை மீது பன்னாட்டு போர்க்குற்ற விசாரணை நடத்துவதற்கான தீர்மானத்தை அடுத்த ஆண்டு பிப்ரவரி - மார்ச் மாதங்களில் கூடும் ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் இந்தியா கொண்டுவர வேண்டும்.

அதுமட்டுமின்றி, மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட ராஜபக்சே அரசை கண்டிக்கும் வகையில் காமன்வெல்த் அமைப்பிலிருந்து இலங்கையை நீக்கவும், கொழும்பில் வரும் நவம்பர் மாதம் நடைபெற விருக்கும் காமன்வெல்த் ஆட்சித் தலைவர்கள் மாநாட்டை வேறு நாட்டிற்கு மாற்றவும் இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

மூலக்கதை