பேரறிவாளன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்: தடா கோர்ட்டில் மனு தாக்கல்

NEW INDIA NEWS  NEW INDIA NEWS
பேரறிவாளன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்: தடா கோர்ட்டில் மனு தாக்கல்

ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கை மீண்டும் விசாரணை நடத்தக்கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்யவேண்டும் என்று சென்னை தடா நீதிமன்றில் பல்நோக்கு விசாரணை ஒழுங்கு முகமை பதில் மனு தாக்கல் செய்துள்ளது.ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்று, வேலூர் ஜெயிலில் இருப்பவர் பேரறிவாளன். இவர், சென்னை முதலாவது கூடுதல் செசன்சு (தடா) கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் அன்றைய காலக்கட்டத்தில் இருந்த ஆதாரங்களின் அடிப்படையில் எனக்கு தூக்குதண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், இந்த கொலை வழக்கில் விசாரணை இன்னும் முடியவில்லை. பலரை தேடப்படும் குற்றவாளியாக சி.பி.ஐ. அறிவித்துள்ளது.

மேலும், இந்த கொலை வழக்கில், பல உண்மைகள் புதைக்கப்பட்டுள்ளன. ராஜீவ் கொலையின் சதித்திட்டத்தில் ஈடுபட்ட சில அரசியல்வாதிகள், அதிகாரிகளின் செயல்பாட்டை சி.பி.ஐ. விசாரணை நடத்தவில்லை.

எனவே ராஜீவ் காந்தி கொலை வழக்கை மறுவிசாரணைக்கு உத்தரவிடவேண்டும். அந்த விசாரணையை இந்த கோர்ட்டு கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதி தண்டபாணி (பொறுப்பு) முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுவுக்கு சி.பி.ஐ.யின் கீழ் செயல்படும் பல்நோக்கு விசாரணை ஒழுங்குமுறை முகமை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- ராஜீவ் காந்தி 21-5-1991 அன்று மனித வெடிகுண்டு மூலம் படுகொலை செய்யப்பட்டார்.

இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு, நளினி உட்பட 26 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டு, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு கீழ் கோர்ட்டு மற்றும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பும் வழங்கிவிட்டது. மேலும், ஜெயின் கமிஷன் அறிக்கையின் அடிப்படையில், இந்த வழக்கை தொடர்ந்து கண்காணிக்க சி.பி.ஐ.யின் கீழ் பல்நோக்கு விசாரணை ஒழுங்குமுறை முகமை 2-12-1998 அன்று அமைக்கப்பட்டது.

இந்த அமைப்பு, ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தொடர்புடையவர்களை கண்காணிக்கவும், வழக்கை விசாரிக்கவும் செய்து வருகிறது. எனவே பேரறிவாளன், மீண்டும் விசாரணை கேட்டு மனு தாக்கல் செய்ய எந்த உரிமையும் இல்லை. எனவே அவரது மனுவை தள்ளுபடி செய்யவேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை வருகிற நவம்பர் 11-ந் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி தண்டபாணி உத்தரவிட்டார்.

மூலக்கதை