காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள 5 வாக்குறுதி: 2070-க்குள் ‘பூஜ்ஜியம் கரியமிலவாயு மாசு’ இலக்கு: கிளாஸ்கோ உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உரை

தமிழ் முரசு  தமிழ் முரசு
காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள 5 வாக்குறுதி: 2070க்குள் ‘பூஜ்ஜியம் கரியமிலவாயு மாசு’ இலக்கு: கிளாஸ்கோ உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உரை

லண்டன்: வரும் 2070ம் ஆண்டுக்குள் பூஜ்ஜியம் கரியமில வாயு மாசு என்ற இலக்கை இந்தியா எட்டும் என காலநிலை மாற்றம் தொடர்பான ஐ. நா-வின் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். இங்கிலாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற்றுவரும் சிஓபி-26 நாடுகளின் மாநாட்டில் காலநிலை மாற்றம் குறித்து பிரதமர் மோடி நிகழ்த்திய உரையில், ‘காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள இந்தியா கடுமையாக போராடி வருகிறது.

இதன் பலன்கள் விரைவில் தெரியும். காலநிலை மாற்றத்தை இந்தியா தனது அனைத்து கொள்கைகளிலும் மைய கருத்தாக கொண்டிருக்கிறது.

பாரிஸ் ஒப்பந்தத்தில் அளித்த வாக்குறுதிகளின்படி செயல்பட்ட ஒரே பெரிய நாடு இந்தியாதான் என்பதை உலக நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளன. காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள 5 வாக்குறுதிகளை முன்வைக்கிறேன்.

வரும் 2030ம் ஆண்டுக்குள் 500 ஜிகா-வாட் அளவுக்கு புதைபடிம எரிபொருள் அல்லாத வழிகளில் மின்சார உற்பத்தி திறன் பெருக்கப்படும்.

வரும் 2030ம் ஆண்டுக்குள் இந்தியா தனது மின்சாரத் தேவையில் 50 சதவிகிதத்தை புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் பெறும்.

இந்தாண்டு முதல் 2030ம் ஆண்டுக்குள் இந்தியா தனது கரியமிலவாயு மாசை ஒரு பில்லியன் டன் அளவுக்கு குறைக்கும். பொருளாதாரத்தில் கார்பனின் பங்களிப்பை 45 சதவீதம் என்ற அளவில் இந்தியா குறைக்கும்.

வரும் 2070ம் ஆண்டுக்குள் பூஜ்யம் கரியமில வாயு மாசு என்ற இலக்கை இந்தியா அடையும். சுற்றுச்சூழல் மாசை குறைப்பதற்கு இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது.

உலக மக்கள் தொகையில் 17 சதவீதம் பேர் இந்தியாவில்தான் உள்ளனர். ஆனால் இந்தியாவின் கார்பன் வெளியேற்றத்திற்கான பங்களிப்பு, ஐந்து சதவீதம் மட்டுமே’ என்று தெரிவித்தார்.

தொடர்ந்து காலநிலை மாற்றம் இந்தியா எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து சில விபரங்களை பட்டியலிட்டார்.

''போரிஸ் ஜான்சன் இந்தியா வருகை''
கிளாஸ்கோ மாநாட்டின் போது, பிரிட்டீஷ் பிரதமர் போரிஸ் ஜான்சனுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பசுமை ஹைட்ரஜன், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பொருளாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் இருநாடுகள் உறவை வலுப்படுத்துவது குறித்து இரு நாட்டு தலைவர்களும் பேசினார்கள்.

இந்த ஆண்டு போரிஸ் ஜான்சன் இந்தியா வரும் திட்டத்தை இரண்டு முறை ஒத்தி வைத்தபிறகு இரண்டு தலைவர்களுக்கிடையில் நடைபெறும் முதல் சந்திப்பாக இது இருந்தது. சந்திப்பின்போது இந்தியாவுக்கு வருமாறு பிரதமர் மோடி விடுத்த அழைப்பை போரிஸ் ஜான்சன் ஏற்றுக்கொண்டதாக வெளியுறவுத்துறை செயலாளர் தெரிவித்தார்.

கிளாஸ்கோ மாநாடு முடிவுற்றதால் பிரதமர் மோடி இன்று நாடு திரும்புகிறார்.

.

மூலக்கதை