மாரடைப்பால் காலமான கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் உடல் இன்று மாலை அடக்கம்: லட்சக்கணக்கானோர் கண்ணீர் மல்க அஞ்சலி

தமிழ் முரசு  தமிழ் முரசு
மாரடைப்பால் காலமான கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் உடல் இன்று மாலை அடக்கம்: லட்சக்கணக்கானோர் கண்ணீர் மல்க அஞ்சலி

பெங்களூரு: கன்னட திரையுலகில் லட்சக்கணக்கான ரசிகர்களால் பவர் ஸ்டார் என பெருமையுடன் அழைக்கப்பட்ட இளம்கலைஞர் புனித் ராஜ்குமார் (46) மாரடைப்பால் நேற்று காலமானார். அவரின் உடல் முழு அரசு மரியாதையுடன் இன்று மாலை நல்லடக்கம் செய்யப்படுகிறது.

கன்னட திரையுலகின் முன்னணி நடிகராக இருந்தவர் நடிகர் புனித் ராஜ்குமார். இவர், நேற்று காலை உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.

உடனடியாக அவரது குடும்ப டாக்டர் ரமணாவிடம் ெ்சன்றார்.

அவருக்கு இசிஜி உள்ளிட்ட பரிசோதனை செய்தபோது லேசான மாரடைப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது.

டாக்டர் ஆலோசனை பேரில் காலை 11. 30 மணிக்கு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது, அவரது இதயம் செயல்படாமல் இருப்பது தெரிந்தது.

உடனடியாக வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளித்தனர். ஆனால் உடல் ஒத்துழைக்கவில்லை என்றும் மாரடைப்பு தீவிரமாக இருந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.



புனித், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் கிடைத்ததும் சகோதரர்கள் சிவராஜ்குமார், ராகவேந்திர ராஜ்குமார் மற்றும் மனைவி அஷ்வினி ரேவந்தி உள்பட குடும்பத்தினர் வந்தனர். அவர்களுடன் டாக்டர்கள் ஆலோசனை நடத்தினர்.

புனித் ராஜ்குமாரின் நிலையை முழுமையாக விளக்கி காப்பாற்ற முடியவில்லை என்று தெரிவித்தபின், புனித் உயிரிழந்த தகவலை அதிகாரபூர்வமாக அறிவித்தனர். அதை தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் பெங்களூரு சதாசிவநகரில் உள்ள புனித்  ராஜ்குமார் வீட்டிற்கு உடல் கொண்டு செல்லப்பட்டது.



அங்கு முன்னாள் பிரதமர் தேவகவுடா, முன்னாள் முதல்வர் குமாரசாமி உள்பட அரசியல் கட்சி தலைவர்கள், கன்னட திரையுலகின் முன்னணி கலைஞர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், திரையரங்க உரிமையாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். பின் குடும்ப சம்பிரதாயப்படி பூஜைகள் நடத்தப்பட்டது.

அதை தொடர்ந்து மாலையில் ஆம்புலன்ஸ் மூலம் கண்டீரவா உள் விளையாட்டு அரங்கிற்கு உடல் கொண்டு வரப்பட்டது. அங்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் நீண்ட வரிசையில் நின்று கண்ணீர்மல்க அஞ்சலி ெசலுத்தி வருகிறார்கள்.



மாநிலத்தில் பல மாவட்டங்களில் இருந்து பஸ், ரயில், கார் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் ஆயிரகணக்கான ரசிகர்கள் வந்த வண்ணம் உள்ளனர். நேற்றிரவு முழுவதும் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்ததால் போலீசார் சமாளிக்க பெரும் அவதிப்பட்டனர்.

புனித் ராஜ்குமார் குழந்தை நட்சத்திரமாக இருந்தபோதே தேசிய விருது பெற்றுள்ளார். மாநில அரசின் சார்பிலும் சிறந்த நடிகருக்கான விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளதால், அவரது உடலை முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய மாநில அரசு முடிவு செய்துள்ளது.



அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது. அதை ெதாடர்ந்து நேற்றிரவு 10. 45 மணிக்கு புனித் ராஜ்குமார் உடல் வைக்கப்பட்டுள்ள இடத்திற்கு நேரில் வந்த முதல்வர் பசவராஜ் பொம்ைம, மாநில உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா, மாநகர போலீஸ் கமிஷனர் கமல்பந்த் ஆகியோர் அவரது உடல் மீது தேசிய கொடி போர்த்தி அஞ்சலி செலுத்தினர்.
புனித் ராஜ்குமாரியின் மூத்த மகன் த்ருத்தி, ஜெர்மனியில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார்.

விமானத்தில் இன்று பெங்களூரு வந்தார்.

அதை தொடர்ந்து இன்று மாலை புனித் ராஜ்குமார் உடல், பெங்களூரு கண்டீரவா ஸ்டுடியோ வளாகத்தில் உள்ள அவரது பெற்றோர் சமாதி அருகில் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. புனித் ராஜ்குமார் உடலுக்கு கன்னட திரையுலகினர் மட்டுமில்லமால் தமிழ், தெலுங்கு, மலையாளம் திரையுலகினரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

அதிர்ச்சியில் 3 பேர் பலி
கன்னட நடிகர் புனித் ராஜ்குமார், மாரடைப்பால் காலமான செய்தியை அறிந்ததும் கன்னட ரசிகர்கள் அதிர்ச்சியில் இருந்து மீளமுடியாத துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இந்நிலையில் அவரது தீவிர ரசிகர்களான முனியப்பன், பரசுராம் ஆகியோர் மாரடைப்பால் மரணமடைந்தனர். மேலும் பெல்காரம் பகுதியை சேர்ந்த ராகுல் (21) என்பவர், புனித் இறப்பை தாங்கி கொள்ள முடியாமல் தவித்தார்.

இதனால் விரக்தியின் உச்சத்துக்கே சென்ற அவர், இன்று காலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

.

மூலக்கதை