உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ரவீந்திரன் தலைமையில் பெகாசஸ் விவகாரம் குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழு: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தமிழ் முரசு  தமிழ் முரசு
உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ரவீந்திரன் தலைமையில் பெகாசஸ் விவகாரம் குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழு: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

புதுடெல்லி: பெகாசஸ் விவகாரம் குறித்து உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ரவீந்திரன் தலைமையில், மூன்று பேர் கொண்ட சிறப்பு விசாரணைக் குழு அமைத்து உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இஸ்ரேல் நாட்டில் ‘என்எஸ்ஓ’ என்ற தொழில்நுட்ப நிறுவனம் உருவாக்கிய ‘பெகாசஸ்’ என்ற உளவு மென்பொருள் (செயலி) மூலம் 50 நாடுகளை சேர்ந்த ஆயிரத்துக்கு மேற்பட்ட பிரபலங்கள், அரசியல்வாதிகள், மூத்த அதிகாரிகள், பத்திரிகையாளர்கள், தனி நபர்களின் செல்போன் எண்கள் உளவு பார்க்கபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்தியாவிலும் பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல் கட்சிப் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட பிரபலங்களின் செல்போன்கள் ஒட்டுக் கேட்கப்பட்டதாக புகார்கள் எழுந்தன. இவ்விவகாரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் கடந்த நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் முழுவதும் முடங்கியது.

இதனிடையே, பெகாசஸ் விவகாரம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி அல்லது பதவியில் இருக்கும் நீதிபதி மூலம் சுதந்திரமான விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோர் சார்பில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என். வி. ரமணா, நீதிபதிகள் சூர்யகாந்த், ஹிமா ஹோலி ஆகியோர் கொண்ட அமர்வு விசாரணை நடத்தி வந்தது. இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிப்பது தொடர்பாக கடந்த செப்டம்பர் 13ம் தேதி ஒத்திவைத்தது.

முன்னதாக நடந்த விசாரணையின்போது, பெகாசஸ் விவகாரம் பற்றி விசாரிக்க தொழில்நுட்ப வல்லுனர்கள்  குழு அமைக்கப்படும் என்றும், இது தேச பாதுகாப்பு தொடர்புள்ள விஷயம்  என்பதால் மேற்கொண்டு விசாரணை நடத்த கூடாது எனவும் ஒன்றிய அரசின் சார்பில்  உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு மனுதாரர்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

அப்போது நீதிபதிகள் அமர்வு, பெகாசஸ் செயலி மூலம் சட்ட விரோதமான முறையில் ஒன்றிய அரசு சொந்த மக்களைக் கண்காணித்ததா? அல்லது இல்லையா? என்பதை மட்டும் தெரிந்துகொள்ள இருப்பதாக தெரிவித்தனர். இவ்வழக்கு விசாரணை கடந்த 13ம் தேதி முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கவுள்ளதாக உச்ச நீதிமன்றம் அறிவித்தது.


அதன்படி, தலைமை நீதிபதி என். வி. ரமணா, நீதிபதிகள் சூர்யகாந்த், ஹிமா ஹோலி ஆகியோர் கொண்ட அமர்வு, ‘அடிப்படை உரிமைகளை துஷ்பிரயோகம் செய்வதை ஏற்க முடியாது.

இவ்விசயத்தில் அனைவரையும் பாதுகாப்பதற்காக எதையும் நீதிமன்றம் மறைக்காது.

தனிமனித உரிமை மீறலில் இருந்து மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும். மற்ற அடிப்படை உரிமைகளைப் போலவே இதனையும் பார்க்க வேண்டும்.

சில கட்டுப்பாடுகள் இருக்க வேண்டும். ஆனால், இந்த கட்டுப்பாடுகள் அரசியலமைப்பிற்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.

பத்திரிகை செய்திகளின் அடிப்படையில் தொடரப்பட்ட ரிட் மனுக்களால் நீதிமன்றம் திருப்தி அடையவில்லை. அதேநேரம் பத்திரிகை செய்தியின் அடிப்படையில் தொடரப்படும் பொதுநல வழக்குகளை நீதிமன்றம் ஊக்கப்படுத்துகிறது.

பெகாசஸ் தொடர்பான அனைத்து தகவல்களையும் வெளியிட ஒன்றிய அரசுக்கு போதிய அவகாசம் அளிக்கப்பட்டது. இருப்பினும் வரையறுக்கப்பட்ட பிரமாணப் பத்திரம் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டது.

ஒன்றிய அரசு தெளிவான நிலைப்பாட்டை எடுத்திருந்தால், எங்களது சுமை குறைந்திருக்கும். ஒன்றிய அரசு தனது நிலைப்பாட்டை தௌிவுபடுத்த வேண்டும்.

நீதிமன்றத்தை வெறும் பார்வையாளராக வைத்திருக்க கூடாது. தனியுரிமை பாதிக்கப்படுவதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.

அதனால், ஒட்டுமொத்த மக்களும் பாதிக்கப்படுகின்றனர். ஒன்றிய அரசு, இவ்விவகாரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை.

ஒன்றிய அரசுக்கு ஓர் உத்தரவை பிறப்பிக்கிறோம். அதாவது, பெகாசஸ் விவகாரம் குறித்து விசாரிக்க ஒரு குழுவை நியமித்து உத்திரவிடுகிறோம்.



இந்தக் குழுவில் உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ரவீந்திரன் தலைமை வகிப்பார். அவருக்கு உதவியாக நிபுணரும் ஐபிஎஸ் அதிகாரியுமான அலோக் ஜோஷி உள்ளிட்டோர் செயல்படுவர்.

மேலும், குஜராத்தை சேர்ந்த தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகத்தின் டீன் நவீன் குமார் சவுத்ரி, கேரளாவின் அமிர்தா விஷ்வ வித்யா பீடத்தின் பேராசிரியர் பிரபாகரன், மகாராஷ்டிரா மாநிலம் இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தின் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை பேராசிரியர் அஷ்வின் அனில் குமாஸ்தே ஆகியோர் கொண்ட 3 பேர் குழு அமைக்கப்படுகிறது. இந்த குழு அடுத்த 8 வாரத்தில் பெகாசஸ் தொடர்பாக விசாரித்து.

விரைவில் அறிக்கை தாக்கல் செய்யும் என்று தீர்ப்பு வழங்கினர்.

.

மூலக்கதை