ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு 36 மணிநேர உண்ணாவிரதம் துவங்கினார்: முதல்வர் ஜெகன் மீது பரபரப்பு குற்றச்சாட்டு

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு 36 மணிநேர உண்ணாவிரதம் துவங்கினார்: முதல்வர் ஜெகன் மீது பரபரப்பு குற்றச்சாட்டு

திருமலை: ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு இன்று காலை 36 மணிநேர உண்ணாவிரதத்தை தொடங்கினார். ஆந்திர மாநிலம் குண்டூரில் தெலுங்கு தேசம் கட்சி தேசிய செய்தி தொடர்பாளர் பட்டாபி நேற்று முன்தினம் முதல்வர் ஜெகன்மோகன் குறித்தும் அவர் தலைமையிலான அரசு குறித்தும் கடுமையாக விமர்சித்திருந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர், அன்றிரவு பட்டாபி வீடு உட்பட மாநிலம் முழுவதும் உள்ள தெலுங்கு தேச கட்சி முக்கிய நிர்வாகிகளின் வீடுகள், கட்சி அலுவலகங்கள் ஆகியவற்றை சூறையாடினர். இதில் காயமடைந்த பல நிர்வாகிகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையறிந்த தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரான சந்திரபாபு, சம்பந்தப்பட்ட வீடு, அலுவலகங்களுக்கு சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.

மேலும் பந்த்துக்கும் அழைப்பு விடுத்தார். இதனால் சந்திரபாபு மற்றும் அவரது கட்சி எம்பிக்கள், எம்எல்ஏக்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.

இந்நிலையில் சந்திரபாபு, அவரது மகனும் எம்எல்சியுமான லோகேஷ் உள்பட கட்சியினர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நேற்றிரவு கட்சி நிர்வாகிகளுடன் வீடியோகான்பரன்சிங் மூலம் சந்திரபாபு ஆலோசனை நடத்தினார். இதைத்தொடர்ந்து இன்று காலை 8 மணியளவில் மங்களகிரியில் உள்ள சூறையாடப்பட்ட தனது கட்சி அலுவலகத்தில் உண்ணாவிரதம் தொடங்கினார்.

அவருடன் முன்னாள் அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது சந்திரபாபு பேசுகையில், ‘ஆந்திராவில் இதற்கு முன்பு வரை அமைதியான ஆட்சி நடந்தது.

ஆனால் ஜெகன் பதவியேற்ற பிறகு சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. கட்டுக்கோப்பான தெலுங்கு தேசம் கட்சி, அரசின் தவறுகளை சுட்டிக்காட்டி வந்தது.

அந்த தவறுகளை திருத்திக்கொள்ளாமல் தவறுகளை சுட்டிக்காட்டுவோர் மீது தாக்குதல் நடத்துகிறது. இந்தியாவில் எந்த மாநிலத்தில் கஞ்சா விற்பனை நடந்தாலும், அதற்கு ஆந்திராதான் மூலக்காரணமாக உள்ளது.

இதுபோன்று நிலைக்கு காரணம் ஜெகன்மோகன் தலைமையிலான ஆட்சிதான்.

இந்த விவகாரம் குறித்து அமித்ஷாவிடம் நேரில் புகார் தெரிவிக்க உள்ளேன்’ என்றார்.
இதனிடையே ஜெகன் குறித்து விமர்சித்த தெலுங்கு தேச கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் பட்டாபி மீது நேற்று நள்ளிரவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை