தயார் நிலையில் தேசிய பேரிடர் மீட்பு படையினர்: கேரளாவுக்கு 2 நாள் மழை எச்சரிக்கை

தமிழ் முரசு  தமிழ் முரசு
தயார் நிலையில் தேசிய பேரிடர் மீட்பு படையினர்: கேரளாவுக்கு 2 நாள் மழை எச்சரிக்கை

திருவனந்தபுரம்: கேரளாவில் பெரும்பாலான மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிக பலத்த மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் மாநிலம் முழுவதும் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கேரளாவில் கடந்த வாரம் பெய்த கன மழையால் நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி 30க்கும் மேற்பட்டோர் இறந்தனர்.

ஏராளமான வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. பயிர்களும் நாசமாகின.

தொடர்ந்து இடுக்கி, பம்பை, இடமலையார், செம்மலை உள்பட பெரும்பாலான அணைகள் திறந்து விடப்பட்டன. இதனால் அனைத்து ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த 3 நாட்களாக மழையின் தீவிரம் குறைந்தது. ஆனாலும் இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு மீண்டும் மழை பெய்யும் என்று மத்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

குறிப்பாக இன்றும், நாளையும் மிக பலத்த மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் உள்ள 14 மாவட்டங்களில் காசர்கோடு, ஆலப்புழா, கொல்லம் ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் மீதமுள்ள 11 மாவட்டங்களுக்கும் ஆரஞ்ச் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

நாளை காசர்கோடு, கண்ணூர் மாவட்டங்களில் மஞ்சள் எச்சரிக்கையும், மீதமுள்ள 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் 24 மணி நேரத்தில் 115 மி. மீ.

முதல் 220 மி. மீ. வரை மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.



இதையடுத்து கேரளா முழுவதும் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளை சமாளிக்கும் வகையில் அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். ஆற்றின் கரையோரங்கள், மலையடிவாரங்களில் வசிக்கும் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

தேசிய பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். கனமழையை தொடர்ந்து கேரளா, கோழிக்கோடு, கொச்சி, பல்கலைக்கழகங்களில் இன்று முதல் 23ம் தேதி வரை நடத்த இருந்த அனைத்து தேர்வுகளும் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

தொழில்நுட்ப பல்கலைக்கழகம், மீன்வள பல்கலைக்கழக ேதர்வுகளும் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. கடந்த 18ம் தேதி கல்லூரிகளை திறக்க தீர்மானிக்கப்பட்டிருந்தது.

கனமழை காரணமாக கல்லூரிகள் திறப்பு அடுத்த வாரம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

''இடுக்கி அணைக்கு தினமும் 6 கோடி நஷ்டம்''
இந்தியாவிலேயே மிகப்பெரிய இடுக்கி அணை நீர்மின்சாரம் தயாரிப்பதற்காகவே கட்டப்பட்டதாகும். இதேபோல் கேரளாவில் மேலும் 35 அணைகள் மூலம் நீர்மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.

இதன்மூலம் மின்வாரியத்துக்கு வருடத்துக்கு ரூ. 12 ஆயிரம் கோடி லாபம் கிடைக்கிறது. இங்கு தயாரிக்கப்படும் மின்சாரத்தை அரசு ஒரு யூனிட் ரூ. 4 என விற்பனை செய்து வருகிறது.

கடந்த 2 வாரத்தில் பெய்த மழை மூலம் கேரளாவில் உள்ள அனைத்து அணைகளிலும் ரூ. 421. 5 கோடி மதிப்புள்ள மின்சாரத்தை தயாரிக்கும் அளவுக்கு தண்ணீர் கிடைத்தது. இடுக்கி அணையில் மட்டும் ரூ. 188 கோடிக்கு மின்சாரம் தயாரிக்கும் அளவுக்கு தண்ணீர் பெருகியது.

நேற்று முதல் இடுக்கி அணையில் இருந்து ஒரு விநாடிக்கு 1 லட்சம் லிட்டர் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. ஒரு நாளில் இந்த தண்ணீரை பயன்படுத்தி 1. 35 கோடி யூனிட் மின்சாரத்தை தயாரிக்க முடியும்.

கேரள மின்வாரியம் ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 4. 5க்கு விற்பனை செய்து வருகிறது.

இதன்மூலம் மின்வாரியத்துக்கு ரூ. 6. 07 கோடி நஷ்டம் ஏற்படுகிறது என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். இதையடுத்து அணையின் நீர்மட்டம் குறைந்தால் அணையை மூட அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.

சமீபத்தில் நிலக்கரி பற்றாக்குறை காரணமாக நாடு முழுவதும் மின்தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவானது.

இதையடுத்து நீர்மின்சாரம் தயாரிப்பை அதிகரிக்க அனைத்து மாநிலங்களுக்கும் ஒன்றிய எரிசக்தி துறை செயலாளர் கடிதம் அனுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை