இன்று குவாலிபயர் 2 போட்டி: கொல்கத்தா பவுலிங்கை சமாளிக்குமா டெல்லி?

தமிழ் முரசு  தமிழ் முரசு
இன்று குவாலிபயர் 2 போட்டி: கொல்கத்தா பவுலிங்கை சமாளிக்குமா டெல்லி?

ஷார்ஜா: நடப்பு ஐபிஎல் தொடரின் 2வது குவாலிபயர் போட்டியில் இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி, பைனலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து மோதும்.

கொல்கத்தா அணியின் ஸ்பின் பவுலர்கள், இத்தொடரில் தொடர்ந்து சிறப்பாக பந்து வீசி வருகின்றனர். அதே போல் இத்தொடரில் டெல்லி அணியின் பேட்ஸ்மென்கள், தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

எனவே இப்போட்டி இரு அணிகளுக்குமே கடும் சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். ஐபிஎல் டி20 கிரிக்கெட் 2021 தொடர் நிறைவடையும் தருவாயில் உள்ளது.



சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஏற்கனவே பைனலுக்கு தகுதி பெற்று விட்டது. இன்று நடைபெறும் குவாலிபயர் 2 போட்டியில் இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ரிஷப் பன்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதுகின்றன.

இதில் வெற்றி பெறும் அணி, வரும் 15ம் தேதி துபாயில் நடைபெற உள்ள பைனலில் சென்னை அணியை எதிர்த்து மோதும். நடப்பு தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி, லீக் சுற்றில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி (14 போட்டிகளில் 10 வெற்றிகள்), புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்து, பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது.



டெல்லி அணியின் பேட்ஸ்மென்களில் ஷிகர் தவான், பிரித்வி ஷா மற்றும் கேப்டன் ரிஷப் பன்ட் ஆகியோர் நடப்பு ஐபிஎல் தொடரில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். ஷிகர் தவான் இத்தொடரில் 15 போட்டிகளில் 551 ரன்களை குவித்துள்ளார்.

பிரித்வி ஷா 14 போட்டிகளில் 461 ரன்களையும், ரிஷப் பன்ட் 15 போட்டிகளில் 413 ரன்களையும் குவித்துள்ளனர். பந்துவீச்சில் நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் டெல்லி அணியின் வேகப்பந்து வீச்சாளர் அவேஷ் கான் 2ம் இடத்தில் உள்ளார்.

அவர் இத்தொடரில் 15 போட்டிகளில் 23 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இத்தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, லீக் சுற்றில் 14 போட்டிகளில் 7ல் வெற்றி பெற்று, ரன் ரேட் அடிப்படையில் பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது. கொல்கத்தா பேட்ஸ்மென்களில் ராகுல் திரிபாதி இத்தொடரில் 15 போட்டிகளில் 381 ரன்களையும், சுப்மான் கில் 381 ரன்களையும், நிதிஷ் ராணா 370 ரன்களையும் குவித்துள்ளனர்.

பவுலர்களில் ஸ்பின்னர்கள் சுனில் நரைனும், வருண் சக்ரவர்த்தியும் மிரட்டுகின்றனர். ஸ்பின் பவுலிங்கையே நம்பி அந்த அணி உள்ளது எனலாம்.

பெங்களூருக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் சுனில் நரைன், 4 விக்கெட்டுகளை வீழ்த்தி, அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

மொத்தத்தில் இன்றைய போட்டியில் பேட்ஸ்மென்களை நம்பி டெல்லி அணியும், பவுலர்களை நம்பி கொல்கத்தா அணியும் மோதவுள்ளன எனலாம்.

ஷார்ஜா ஆடுகளம் சற்று மந்தமாக உள்ளதால், பவுலர்கள் இன்றைய போட்டியில் ஆதிக்கம் செலுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

.

மூலக்கதை