சுப்ரீம் கோர்ட்டின் அதிரடி தீர்ப்பால் ரபேல் வழக்கில் திடீர் திருப்பம்!!

PARIS TAMIL  PARIS TAMIL
சுப்ரீம் கோர்ட்டின் அதிரடி தீர்ப்பால் ரபேல் வழக்கில் திடீர் திருப்பம்!!

36 ரபேல் போர் விமானங்களை இந்திய விமானப்படைக்கு வாங்குவதற்காக மத்திய பாரதீய ஜனதா கூட்டணி அரசு, பிரான்ஸ் நாட்டுடன் ஒரு ஒப்பந்தம் போட்டது.

முறைகேடு புகார்

ரூ.58 ஆயிரம் கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளது என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புகார் கூறின.

இது தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைத்து, கோர்ட்டு மேற்பார்வையில் விசாரணை நடத்த வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் வக்கீல்கள் எம்.எல்.சர்மா, வினீத் தண்டா, ஆம் ஆத்மி கட்சி எம்.பி. சஞ்சய் சிங், முன்னாள் மத்திய மந்திரிகள் யஷ்வந்த் சின்கா, அருண் ஷோரி, மூத்த வக்கீல் பிரசாந்த் பூஷண் ஆகியோர் வழக்குகள் போட்டனர்.

வழக்குகள் தள்ளுபடி

இந்த வழக்குகளை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு விசாரித்து, ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் எந்த முறைகேடும் நடந்திருப்பதற்கு ஆதாரம் இல்லை, விசாரணைக்கு அவசியம் இல்லை என கூறி, அந்த வழக்குகளை தள்ளுபடி செய்து கடந்த டிசம்பர் மாதம் 14-ந் தேதி அதிரடியாக தீர்ப்பு அளித்தது.

அதைத் தொடர்ந்து ரபேல் பேரம் தொடர்பாக ஊடகங்களில் சில முக்கிய ஆவணங்கள் கசிந்தன.

மறு ஆய்வு மனுக்கள்

அந்த ஆவணங்களை ஆதாரமாகக் கொண்டு சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே வழங்கிய தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று கோரி சுப்ரீம் கோர்ட்டில் முன்னாள் மத்திய மந்திரிகள் யஷ்வந்த் சின்கா, அருண் ஷோரி, வக்கீல் பிரசாந்த் பூஷண் ஆகியோர் மனுக்கள் தாக்கல் செய்தனர்.

அந்த மனுக்கள், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் நீதிபதிகள் எஸ்.கே.கவுல், கே.எம்.ஜோசப் ஆகியோர் முன்னிலையில் கடந்த மாதம் 14-ந் தேதி விசாரணைக்கு வந்தன.

மத்திய அரசு எதிர்ப்பு

அப்போது மறு ஆய்வு மனுக்களுடன் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஊடகங்களில் கசிந்த ஆவணங்களை ஆதார ஆவணங்களாக ஏற்க மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

அந்த ஆவணங்கணை பாதுகாப்புத்துறையின் அனுமதியின்றி யாரும் கோர்ட்டில் தாக்கல் செய்ய முடியாது; அவை அதிகாரப்பூர்வ ரகசிய சட்டத்தின்கீழ் பாதுகாக்கப்பட்டவை என அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் வாதிட்டார். மேலும், அவை இந்திய சாட்சிய சட்டம் பிரிவு 123-ன் கீழும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 8 (1) (ஏ) படியும் ஆதாரங்களாக பரிசீலிக்கப்பட முடியாது எனவும் குறிப்பிட்டார்.

ஆனால் மத்திய அரசின் வாதத்தை மறுத்து மூத்த வக்கீல் பிரசாந்த் பூஷண் உள்ளிட்டவர்கள் வாதிட்டார்கள்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மறு ஆய்வு மனுக்கள் மீதான விசாரணைக்கு தொடக்கத்திலேயே மத்திய அரசு தெரிவித்துள்ள எதிர்ப்பு பற்றிய தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு

இந்தநிலையில், ரபேல் வழக்கு தீர்ப்பினை மறு ஆய்வு செய்வதற்கு, ஊடகங்களில் வெளியான ஆவணங்களை அடிப்படையாக கொள்ளக்கூடாது என்ற மத்திய அரசின் எதிர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் நிராகரித்து நேற்று தீர்ப்பு அளித்தனர்.

தீர்ப்பில், “மறு ஆய்வு மனுக்களை விசாரணைக்கு ஏற்பது தொடர்பான மத்திய அரசின் பூர்வாங்க எதிர்ப்பை நாங்கள் நிராகரிக்கிறோம்” என நீதிபதிகள் கூறி உள்ளனர்.

மறு ஆய்வு மனுக்களுடன் தாக்கல் செய்யப்பட்டுள்ள புதிய ஆவணங்களின் அடிப்படையில், மறு ஆய்வு மனுக்கள் விசாரிக்கப்படும் எனவும் தீர்ப்பில் சொல்லப்பட்டுள்ளது.

திடீர் திருப்பம்

இந்த தீர்ப்பை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தனக்காகவும், நீதிபதி எஸ்.கே. கவுலுக்காகவும் எழுதி வாசித்தார். மற்றொரு நீதிபதியான கே.எம்.ஜோசப் தனியாக ஒரு தீர்ப்பு வழங்கினார். ஆனால் மூவருமே, மறு ஆய்வு மனுக்களை புதிய ஆவணங்களின் அடிப்படையில் விசாரிக்கலாம் என்ற முடிவை ஒரு மனதாக எடுத்துள்ளனர்.

இந்த தீர்ப்பானது, ரபேல் போர் விமான கொள்முதல் விவகாரத்தில் விலை நிர்ணயம் செய்தது தொடங்கி, பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்தின் கூட்டாளியாக இந்திய நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டது வரையிலான அம்சங்களை மறு ஆய்வு மனுக்கள் மீதான விசாரணையின்போது சுப்ரீம் கோர்ட்டு கவனத்தில் கொள்ளும் என்பதை காட்டுகிறது.

மறு ஆய்வு மனுக்கள் மீதான விசாரணை தேதி முடிவு செய்யப்படும் என்றும் நீதிபதிகள் கூறி உள்ளனர்.

இதனால் இந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டு உள்ளது.

இந்த தீர்ப்பை, மறு ஆய்வு மனு தாக்கல் செய்த முன்னாள் மத்திய மந்திரி அருண் ஷோரி வரவேற்றுள்ளார்.

இதுபற்றி அவர் கருத்து தெரிவிக்கையில், “சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு, ஆதார ஆவணங்களை ஏற்பதற்கு மத்திய அரசு முன் வைத்த விசித்திரமான வாதத்தை நிராகரித்து வழங்கி உள்ள ஒரு முழுமையான தீர்ப்பு என்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்” என கூறினார்.

நாடாளுமன்றத்துக்கு இன்று (வியாழக்கிழமை) முதல் கட்ட தேர்தல் நடக்கிற தருணத்தில், ரபேல் தீர்ப்பினை புதிய ஆவணங்களின் அடிப்படையில் மறு ஆய்வு செய்யக்கூடாது என்ற மத்திய அரசின் வாதத்தை சுப்ரீம் கோர்ட்டு நிராகரித்து தீர்ப்பு வழங்கி இருப்பது பாரதீய ஜனதா கூட்டணி அரசுக்கு பின்னடைவாக கருதப்படு கிறது.

மூலக்கதை