ராகுல்காந்தி நாளை தமிழகம் வருகை 4 பொதுக்கூட்டங்களில் பேசுகிறார்

PARIS TAMIL  PARIS TAMIL
ராகுல்காந்தி நாளை தமிழகம் வருகை 4 பொதுக்கூட்டங்களில் பேசுகிறார்

தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் வருகிற 16-ந்தேதி மாலை 5 மணியுடன் ஓய்கிறது. எனவே அரசியல் கட்சி தலைவர்களும், வேட்பாளர்களும் அனல் பறக்கும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். தேசிய தலைவர்கள் பார்வையும் தமிழகம் பக்கம் திரும்பி உள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி நேற்றுமுன்தினம் கோவையில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். மேலும் அவர் வருகிற 13-ந்தேதி காலை ராமநாதபுரத்திலும், அன்றையதினம் மாலை தேனியிலும் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.

இந்தநிலையில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி தேர்தல் பிரசாரத்துக்காக நாளை(வெள்ளிக்கிழமை) தமிழகம் வருகை தர உள்ளார். கிருஷ்ணகிரி, சேலம், தேனி, திருப்பரங்குன்றம் ஆகிய 4 ஊர்களில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். இதற்காக அவர் பெங்களூருவில் இருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் கிருஷ்ணகிரி வருகிறார்.

கே.எஸ்.அழகிரி பேட்டி

இதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சென்னை சத்தியமூர்த்திபவனில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வருகிற 12-ந்தேதி(நாளை) காலை 10 மணிக்கு கிருஷ்ணகிரி, மதியம் 1 மணிக்கு சேலம், மதியம் 3 மணிக்கு தேனி, மாலை 5 மணிக்கு திருப்பரங்குன்றம் ஆகிய இடங்களில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் பேசுகிறார். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும் கலந்து கொள்கிறார்.

ரஜினிகாந்த் பலிகடா

காங்கிரஸ் கட்சி தேர்தல் வாக்குறுதியான மாதம் ரூ.6 ஆயிரம் வருமான உறுதி திட்டம் ‘கஜா’ புயலை விட வேகமாக பரவி இருக்கிறது.

நான் நடிகர் ரஜினிகாந்த் ரசிகன். நான் தேர்தலில் அவருடைய ‘அண்ணாமலை’ சைக்கிளை வைத்து வெற்றி பெற்றிருக்கிறேன். பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் நதிநீர் இணைப்பு அறிவிப்பை ரஜினிகாந்த் வரவேற்றிருப்பது, அவர் ஒரு சார்பாக இருக்கிறாரோ? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் நதிநீர் இணைப்புத்திட்டம் சாத்தியமில்லை. எதையாவது கவர்ச்சி அறிவிப்புகள் மூலம் வாக்குகளை பெற முடியாதா? என்று பா.ஜ.க. எண்ணுகிறது. இதில் ரஜினிகாந்த் பலிகடா ஆகிறார் என்பது தான் வருத்தம் அளிக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

காங்கிரஸ் பிரசார பாடல்

‘தேசம் காக்கும் கை’ என்ற தலைப்பில் காங்கிரஸ் பிரசார பாடலை கே.எஸ்.அழகிரி வெளியிட்டார். இதனை கவிஞர் ஜோதி ராமலிங்கம் பெற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் பொதுச்செயலாளர்கள் ஜி.கே.தாஸ், தணிக்காச்சலம், செய்தித்தொடர்பாளர் கோபண்ணா, எஸ்.சி.பிரிவு மாவட்டத் தலைவர் எம்.பி.ரஞ்சன்குமார் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மூலக்கதை