2018 இல் மீண்டும் சாதனை படைத்த சுற்றுலாப்பயணிகளின் வருகை!!

PARIS TAMIL  PARIS TAMIL
2018 இல் மீண்டும் சாதனை படைத்த சுற்றுலாப்பயணிகளின் வருகை!!

கடந்த வருடம், மீண்டும் உலகில் மிக அதிக சுற்றுலாப்பயணிகள் பயணித்த நாடாக பிரான்ஸ் மாறியுள்ளது. 
 
பிரான்சில் உள்ள அனைத்து அரச, தனியார் சுற்றுலா நிறுவனங்கள், தங்குமிடங்கள், விடுதிகள் என அனைத்திலும் கடந்த வருடங்களை விட அதிகமான சுற்றுலாப்பயணிகளை சந்தித்துள்ளதாகவும் பெரும் வருவாய் ஈட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 2018 ஆம் ஆண்டில் 438.2 மில்லியன் சுற்றுலாப்பயணிகள் பிரான்சுக்கு வருகை தந்துள்ளனர். இது 2017 ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில் 9 மில்லியன் அதிகமாகும். 
 
2018 ஆம் ஆண்டில் நடுப்பகுதியை தொடரூந்து மற்றும் விமான ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் மூலம் தகர்த்தும், இறுதி இரண்டு மாதங்களை மஞ்சள் மேலங்கி போராட்டம் மூலம் தகர்த்திருந்த போதும் இந்த சுற்றுலாப்பயணிகள் வருகை மிக அசாதாரணமாக உள்ளதாக சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது. 
 
மஞ்சள் மேலங்கி போராட்டம் இடம்பெற்ற நவம்பர்-டிசம்பர் மாதங்களில் சுற்றுலாப்பயணிகளின் வருகை 1.1 வீதத்தால் குறைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. பரிஸ் மற்றும் இல்-து-பிரான்சுக்கான விடுதிகள் சம்மேளனத்தின் (Umih) தலைவர் Franck Delvau தெரிவிக்கும் போது, <<2018 ஆம் ஆண்டு மிகச்சிறந்த ஆண்டாகும். பல தடைகளுக்கு மத்தியில் இந்த அளவு சுற்றுலாப்பயணிகள் வருகையை நாம் சந்தித்துள்ளோம்>> என குறிப்பிட்டார்.

மூலக்கதை