பா.ஜனதா தேர்தல் அறிக்கைக்கு நடிகர் ரஜினிகாந்த் வரவேற்பு !!!

PARIS TAMIL  PARIS TAMIL
பா.ஜனதா தேர்தல் அறிக்கைக்கு நடிகர் ரஜினிகாந்த் வரவேற்பு !!!

நடிகர் ரஜினிகாந்த் கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பரில் சென்னையில் ரசிகர்கள் சந்திப்பை நடத்தினார். அப்போது தான் புதிய கட்சியை தொடங்க இருப்பதாக பரபரப்பு அறிவிப்பை வெளியிட்டார். ஆனால் 2 ஆண்டுகளை கடந்தும் அவர் புதிய கட்சியை தொடங்கவில்லை. இந்தநிலையில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரஜினிகாந்த் அறிவிப்பை ஒன்றை வெளியிட்டார்.

அதில், நாடாளுமன்ற தேர்தலில் ரஜினி மக்கள் மன்றம் போட்டியிடவில்லை என்றும், சட்டசபை தேர்தல் தான் தங்கள் இலக்கு என்றும், வரும் தேர்தலில், தண்ணீர் பிரச்சினையை நிரந்தரமாக தீர்க்க யார் திட்டம் வகுத்து, உறுதியாக செயல்படுத்துவார்களோ அவர்களுக்கு வாக்களியுங்கள் என்றும் அவர் தெரிவித்து இருந்தார். அதன்பின்னர் ரஜினிகாந்த் கருத்து எதுவும் தெரிவிக்காமல் புதிய படத்தின் வேலையில் கவனம் செலுத்தினார்.

நட்பை கெடுத்து விடாதீர்கள்

இந்தநிலையில், ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தின் பெயர் (தர்பார்) நேற்று வெளியான நிலையில், ரஜினிகாந்த் போயஸ் கார்டனில் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:-உங்கள் புதிய படத்தின் பெயர், முதல் தோற்றம் வெளியாகியிருக்கிறது. இந்த தருணம் உங்களுக்கு எப்படி இருக்கிறது?

பதில்:-எல்லோரும் வரவேற்று இருக்கிறார்கள். மகிழ்ச்சி.

கேள்வி:-நாடாளுமன்ற தேர்தலில் உங்கள் நண்பர் கமல்ஹாசன் கட்சியின் வேட்பாளர்களுக்கு நீங்கள் ஆதரவு அளிப்பீர்களா?

பதில்:-என்னுடைய அரசியல் நிலைப்பாட்டை பற்றி ஏற்கனவே, நான் தெரிவித்து விட்டேன். அதில் எந்த மாற்றமும் இல்லை. இதற்கு மேல் இந்த விஷயத்தை பற்றி நான் எதுவும் பேச விரும்பவில்லை. இதை பெரிதாக்கி, எங்களுடைய நட்பை தயவு செய்து கெடுத்து விடாதீர்கள்.

ஆண்டவன் ஆசீர்வாதத்தால்...

கேள்வி:-பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் நதிநீர் இணைப்பு திட்டம் இடம் பெற்றுள்ளதே?

பதில்:-ரொம்ப நல்ல விஷயம். எல்லோரும் இதை வரவேற்று இருக்கிறார்கள். நான் ரொம்ப நாளாக நாட்டின் நதிகளை இணைக்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறேன். மறைந்த வாஜ்பாயின் கனவும் அதுவாக தான் இருந்தது. அவர் பிரதமராக இருந்தபோது அவரை சந்தித்து இது பற்றி நான் சொல்லியிருந்தேன். இந்த திட்டத்திற்கு பகீரதயோஜனா என்று பெயர் வையுங்கள் என்று சொல்லியிருந்தேன். பகீரதம் என்றால், செய்ய முடியாததை செய்வது தான் இதன் பொருள்.

இப்போது இந்த திட்டத்தை பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் நதிகளை இணைக்கிறோம், அதற்கு ஒரு ஆணையத்தை உருவாக்குவோம் என்று சொல்லியிருக்கிறார்கள். இது வரவேற்கத்தக்கது. ஆண்டவன் ஆசீர்வாதத்தால், மக்களின் தயவால், என்ன முடிவு வரப்போகிறது என்பது தெரியாது, தேசிய ஜனநாயக கூட்டணி (பா.ஜ.க.) மத்தியில் ஆட்சி அமைத்தால் முதலில் இந்த நாட்டுடைய நதிகளை இணைக்க வேண்டும்.

அதுமட்டும் செய்தால் நாட்டில் பாதி வறுமை தீர்ந்து விடும். பல கோடி மக்களுக்கு வேலை கிடைக்கும். விவசாயிகளின் வாழ்வு உயரும். இதை அவர்கள் செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

பரபரப்பு

தொடர்ந்து அவரிடம் நிருபர்கள், ஏற்கனவே மத்தியில் பா.ஜ.க. இருக்கும் நிலையில் நதிகளை இணைக்கவில்லையே? என்றும், தமிழக அரசியல் கட்சிகளில் சில கட்சிகள் நதிநீர் இணைப்பை வலியுறுத்தி இருக்கிறதே? என்று தொடர்ச்சியாக கேள்வி கேட்டனர். அதற்கு ரஜினிகாந்த், ‘தயவு செய்து யாரும் தப்பா நினைக்க வேண்டாம், இது தேர்தல் நேரம், ரொம்ப உணர்வுப்பூர்வமான நேரம், எனவே இதற்கு மேல் நான் எதையும் பேச விரும்பவில்லை’ என்று கூறி விட்டு, வீட்டிற்குள் சென்று விட்டார்.

வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை ஆதரித்து நடிகர் ரஜினிகாந்த் பேட்டி அளித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும், அரசியல் விவாத சூட்டையும் கிளப்பியிருக்கிறது.

மூலக்கதை