கனடாவில் கோழிக்கறி பிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

PARIS TAMIL  PARIS TAMIL
கனடாவில் கோழிக்கறி பிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

கோழிக்கறி மற்றும் வான்கோழி போன்ற மாமிச உணவு உண்பவர்களுக்கு கனேடிய சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
ஆறு கனேடிய மாகாணங்களில் சால்மோனெல்லா என்ற நோய்க்கிருமியின் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்தநிலையிலேயே குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கனேடிய சுகாதாரத்துறை குறிப்பிட்டுள்ளது.
 
இதுவரை கனடாவின் ஆறு மாகாணங்களில் 63 பேருக்கு குறித்த நோய்த்தொற்று ஏற்பட்டுள்ள நிலையிலும் எங்கிருந்து இந்த நோய்த்தொற்று பரவியது என்பது கண்டறியப்படவில்லை.
 
மேற்கு அட்லாண்டிக் பகுதியிலுள்ள அனைத்து மாகாணங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கனடா சுகாதாரத்துறை, ஒவ்வொரு மாகாணத்திலும் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரத்தையும் வெளியிட்டுள்ளது.
 
இதற்கமைய பிரிட்டிஷ் கொலம்பியாவில் 23 பேரும், ஆல்பேர்ட்டாவில் 10 பேரும், சாஸ்கட்ச்சேவன் மாகாணத்தில் 8 பேரும், மனித்தோபாவில் 10 பேரும், ஒன்ராறியோவில் 10 பேரும், கியூபெக்கில் 2 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
 
இந்நிலையில், நோய்த்தொற்றைத் தவிர்ப்பதற்காக சுகாதாரத்துறை சில அறிவுரைகளை வழங்கியுள்ளது.
 
தினமும் உணவு சமைக்கும்போது சுகாதாரமாக உணவு சமைப்பதை உறுதி செய்து கொள்ளுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
மேலும் உணவை சமைப்பதற்குமுன் வெதுவெதுப்பான நீரைக்கொண்டு கைகளை குறைந்தது 20 வினாடிகள் கழுவுமாறும், கோழி, மீன், பிற மாமிசம், நண்டு, இறால் போன்ற உணவு வகைகள் மற்றும் முட்டை போன்றவற்றை பச்சையாகவோ முழுவதும் வேக வைக்காமலோ உண்ண வேண்டாம் எனவும் சுகாதாரத்துறை வலியுறுத்தியுள்ளது.
 

மூலக்கதை