தேர்தல் நடத்தை விதிகளை நிதி ஆயோக் துணைத்தலைவர் மீறியுள்ளார்: தேர்தல் ஆணையம்

PARIS TAMIL  PARIS TAMIL
தேர்தல் நடத்தை விதிகளை நிதி ஆயோக் துணைத்தலைவர் மீறியுள்ளார்: தேர்தல் ஆணையம்

வரும் 11ஆம் தேதி நாடாளுமன்ற முதற்கட்டத் தேர்தல் நடைபெறவுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பு கடந்த மார்ச் மாதம் 10-ஆம் தேதி வெளியானது. அன்று முதல் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. இதனால் தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகள் மற்றும் அதிகாரிகள் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறினால் அவர்களிடம் விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த சூழலில், அண்மையில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி, மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றால் நாடு முழுவதும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள 25 கோடி பேரின் குடும்பத்தினருக்கு மாதந்தோறும் தலா ரூ. 6 ஆயிரம் வழங்கப்படும் என வாக்குறுதி அளித்தார். ராகுல் காந்தியின் இந்த திட்டம் சாத்தியமற்றது  என நிதி ஆயோக் துணைத்தலைவர் ராஜிவ்குமார் தெரிவித்து இருந்தார்.  தேர்தலில் வெற்றி பெற்றால் நிலாவை தருவேன் என்றும் காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளிக்கும் எனவும் ராஜிவ் குமார் விமர்சித்தார்.

அரசு அதிகாரியான ராஜிவ்குமார் இவ்வாறு கூறியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில், ராஜீவ் குமாரின் செயல்பாடு குறித்து அதிருப்தி தெரிவித்துள்ள தேர்தல் ஆணையம் அவர், விதிகளை மீறி விட்டதாக கூறியுள்ளது.  இதுதொடர்பாக அவருக்கு எழுதியுள்ள கடிதத்தில், தேர்தல் ஆணையம் கூறியிருப்பதாவது- எந்தப் பக்கமும் சார்பில்லாமல்தான் அரசு அதிகாரிகள் பணியாற்ற வேண்டும். நீங்கள் தெரிவித்த கருத்துகள் தேர்தல் விதிமுறைகளை நீங்கள் மீறியுள்ளதை காட்டுகிறது. இதுபோன்று எந்தவொரு கருத்தையும் நீங்கள் எதிர்காலத்தில் தெரிவிக்க கூடாது”  இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

 

மூலக்கதை