இந்தியாவிலேயே கட்டப்பஞ்சாயத்து செய்யும் ஒரே கட்சி தி.மு.க. தான் எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு

PARIS TAMIL  PARIS TAMIL
இந்தியாவிலேயே கட்டப்பஞ்சாயத்து செய்யும் ஒரே கட்சி தி.மு.க. தான் எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு

சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் எச்.ராஜா மற்றும் மானாமதுரை சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் எஸ்.நாகராஜன் ஆகியோரை ஆதரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று சிவகங்கை, இளையான்குடி பஸ் நிலையம், மானாமதுரை தேவர் சிலை, திருப்புவனம் ஆகிய பகுதிகளில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:-

ஆற்றல்மிக்க பிரதமர்

நடைபெறுகின்ற நாடாளுமன்ற தேர்தல் நாட்டிற்கு மிக முக்கியமான தேர்தல் ஆகும். நாடு முன்னேற்றம் அடைய மத்தியில் நிலையான, வலிமையான, திறமையான, உறுதியான பிரதமர் வேண்டும். அண்டை நாடுகள் இந்திய நாட்டின் வளர்ச்சியை பொறுத்துக்கொள்ள முடியாமல் தீவிரவாதிகள், பயங்கரவாதிகளை நாட்டிலே ஊடுருவச்செய்து, நம் நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்தும் சூழ்நிலை உருவாகி உள்ளது. இந்த நேரத்தில் இந்திய நாட்டிற்கு வலிமையான, திறமையான, உறுதியான பிரதமர் வேண்டும். அத்தகைய ஆற்றல் உள்ள பிரதமர் தான் நரேந்திரமோடி.

அவர் மீண்டும் இந்திய நாட்டின் பிரதமராக வரவேண்டும் என்பதற்காகத்தான், நாம் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திக்கிறோம். இந்தக்கூட்டணி மெகா கூட்டணி, வெற்றிக்கூட்டணி, கொள்கை பிடிப்புள்ள கூட்டணி, மக்கள் நலன் சார்ந்த கூட்டணி ஆகும்.

சந்தர்ப்பவாத கூட்டணி

தி.மு.க. தலைமையில் அமைக்கப்பட்டுள்ள கூட்டணி ஒரு அராஜக கூட்டணி, ஒரு சந்தர்ப்பவாத கூட்டணி. அந்த கூட்டணி மக்களிடத்தில் நம்பிக்கையை இழந்துவிட்டது. அந்த கூட்டணியில் உள்ள வைகோ, தி.மு.க.வில் குடும்ப ஆட்சி நடைபெறுகிறது என்று சொல்லி தான் வெளியே சென்றார். எந்த காலத்திலும் தி.மு.க. கட்சி ஆட்சிக்கு வரக்கூடாது எனவும், ஸ்டாலின் ஒரு கவுன்சிலருக்கு கூட தகுதி இல்லாதவர் எனவும் கூறினார். ஆனால் தற்போது மீண்டும் இந்த கூட்டணியுடன் சேர்ந்து கொண்டு, ஸ்டாலினை முதல்-அமைச்சராக்கி, ஆட்சி அதிகாரத்தில் அமர வைப்பேன் எனப் பேசிவருகிறார். அதுவும் தற்போது ஈரோட்டில் தி.மு.க. சின்னத்தில் வைகோ கட்சியின் வேட்பாளர் போட்டியிடுகிறார். இப்படிப்பட்ட சந்தர்ப்பவாத கூட்டணி தான், தி.மு.க. தலைமையிலான கூட்டணி.

மேலும், தந்தையின் செல்வாக்கில் பதவிக்கு வந்தவர் ஸ்டாலின். அடிமட்ட தொண்டர்களின் கஷ்ட, நஷ்டத்தைப் பற்றி அவருக்கு தெரியாது. ஆனால் நாங்கள் மக்களோடு மக்களாக பழகி படிப்படியாக கட்சியில் உயர்ந்த பதவிக்கு வந்தவர்கள். இந்தியாவிலேயே கட்டப்பஞ்சாயத்து செய்யும் ஒரே கட்சி தி.மு.க. தான். இந்த தேர்தலில் துரோகிகளுக்கு, பொதுமக்கள் தக்க பாடம் கற்பிக்கப்பட வேண்டும். நல்லாட்சி தொடர்ந்திட, சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் எச்.ராஜாவுக்கு தாமரை சின்னத்திலும், மானாமதுரை சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் எஸ்.நாகராஜனுக்கு இரட்டை இலை சின்னத்திலும் வாக்களித்து வெற்றிபெறச் செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

தூத்துக்குடி-நெல்லை

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், நெல்லை நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் மனோஜ் பாண்டியன் ஆகியோரை ஆதரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:-

பெண்கள் பாதுகாப்பு பற்றி எதிர்கட்சித்தலைவர் பேசுவது மிகுந்த வேடிக்கையாக இருக்கிறது. 1989-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் ஜெயலலிதா ஒரு பெண் என்றும் பாராமல் சட்டமன்றத்திலேயே தாக்கி அவமானப்படுத்தினார்கள்.

ஒரு மாநிலத்தின் எதிர்கட்சித் தலைவருக்கே அதுவும், சட்டமன்றத்திலேயே ஒரு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை தி.மு.க. ஆட்சியில் ஏற்பட்டிருந்தது. இவர்கள் மீண்டும் தற்போது ஆட்சிக்கு வர முயற்சிக்கிறார்கள். அது ஒருபோதும் நடக்காது. இவர்களா பெண்களின் பாதுகாப்பு பற்றி பேசுவது, அதைப்பற்றி பேசுவதற்கு இவர்களுக்கு என்ன தகுதியிருக்கிறது. இதை தாய்மார்களாகிய நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஏழை-எளிய, சிறுபான்மையின மக்கள் என அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பாதுகாப்பாக இருக்கின்ற ஒரே கட்சி அ.தி.மு.க தான். கற்பனையான குற்றச்சாட்டு சுமத்துவதில் ஸ்டாலினுக்கு நிகர் யாரும் இல்லை.

வெற்று அறிக்கை

இந்தியாவிலேயே கொலை, கொள்ளை, திருட்டு வழக்கில் ஈடுபடுபவர்களை ஜாமீனில் எடுப்பதும், அவர்களுக்காக நீதிமன்றத்திலே வாதாடுவதும், கூலிப்படைக்கு உதவி செய்வதும் என்று ஒரு கட்சி இருக்குமேயானால், அது தி.மு.க. மட்டும் தான்.

தி.மு.க. அளித்துள்ள தேர்தல் அறிக்கை வெற்று அறிக்கையாகும். அவர்கள் அளித்த தேர்தல் வாக்குறுதியை நிச்சயமாக நிறைவேற்ற முடியாது.

இவ்வாறு அவர் பேசினார்.

அப்போது அமைச்சர் கடம்பூர் ராஜூ உடனிருந்தார்.

மூலக்கதை