காயத்தையும் பொருட்படுத்தாது தங்கம் வென்ற சதீஷ்குமார் சிவலிங்கத்திற்கு சமூக வலைத்தளங்களில் குவியும் பாராட்டுக்கள்...

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
காயத்தையும் பொருட்படுத்தாது தங்கம் வென்ற சதீஷ்குமார் சிவலிங்கத்திற்கு சமூக வலைத்தளங்களில் குவியும் பாராட்டுக்கள்...

கோல்டு கோஸ்ட் காமன்வெல்த் போட்டியில், தமிழகத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் சிவலிங்கம் இந்தியாவிற்கான மூன்றாவது தங்கத்தை வென்று அசத்தியுள்ளார்.

பளுத்தூக்குதலில் 77 கிலோ எடைப் பிரிவில் 144 கிலோ (Snatch), க்ளீன் அண்டு ஜெர்க் பிரிவில் 173 கிலோ என மொத்தம் 317 கிலோ எடை தூக்கி தங்கத்தைத் தன்வசப்படுத்தியுள்ளார்.

காமன்வெல்த் போட்டியில் சதீஷ்குமார் வெல்லும் இரண்டாவது தங்கம் இது. முன்னதாக 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியைச்  சேர்ந்த சதீஷ்குமாரின் தந்தை சிவலிங்கம், தாய் தெய்வானை. சிவலிங்கம் ராணுவத்தில் பணியாற்றியவர். இவரும் வெயிட் லிஃப்டர்தான். தேசிய அளவிலான பதக்கங்களை வென்றுள்ளார். ராணுவத்திலிருந்து விலகிய சிவலிங்கம், தற்போது வி.ஐ.டி பல்கலையில் காவலாளியாகப் பணிபுரிகிறார்.  

13 வயதிலிருந்தே பளுத்தூக்கும் பயிற்சியில் ஈடுபட்டார் சதீஷ்குமார். தினமும் காலை மாலை என இரு வேளைகளிலும் சுமார் 5 மணி நேரம் பயிற்சி மேற்கொள்வார். சதீஷ்குமாரை கொஞ்சம் கொஞ்சமாகப் பட்டைதீட்டினார் தந்தை சிவலிங்கம். சத்துவாச்சாரியில் உள்ள அரசுப் பள்ளியில் படித்த சதீஷ்குமார், வீட்டருகே உள்ள அட்லஸ் வெயிட் லிஃப்டிங் அகாடமியில் பயிற்சிக்காகச் சேர்ந்தார். கடும் பயிற்சி, உழைப்பு, அர்ப்பணிப்பு உணர்வு இருந்ததால் சதீஷ்குமார் எளிதாகவே மெருகேறினார். பளுத்தூக்குதலில் உள்ள நுணுக்கங்களைக் கற்றுத்தேர்ந்த அவர், முதலில் தேசிய அளவில் வெற்றிகளைக் குவித்தார். கல்லூரிப் படிப்பைப் பாதியில் கைவிட்டாலும், ரயில்வேயில் சதீஷ்குமாருக்கு வேலை கிடைத்தது. தென்னக ரயில்வேயில் சாதாரண க்ளார்க் பணி. வீட்டின் வறுமை ஓரளவுக்கு விலக ஆரம்பித்தது. ஆனால், சாம்பியனாக வேண்டும் என்ற கனவு மட்டும் உள்ளுக்குள் சுழன்று கொண்டே இருந்தது.

2014-ம் ஆண்டு, கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் சாம்பியன் கனவை எட்டினார். இந்தப் போட்டியில் 77 கிலோ எடைப் பிரிவில் சதீஷ்குமார் தங்கம் வென்றபோதுதான் தமிழகத்துக்கே இவரை அடையாளம் தெரிந்தது. 2016-ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் சதீஷ்குமார் பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது.  ஆனால், துரதிர்ஷ்டவசமாக ரியோ ஒலிம்பிக்கில் `பி' பிரிவில் போட்டியிட்ட அவரால் 11-வது இடத்தையே பிடிக்க முடிந்தது. ஒலிம்பிக் தோல்வியால் சதீஷ்குமார் துவண்டுவிடவில்லை. தொடர்ந்து தீவிரமாகப் பயிற்சி பெற்றுவந்த சதீஷ்குமார், கோல்டு கோஸ்டில் தங்கப்பதக்கத்தை அறுவடை செய்துள்ளார்.

இரண்டாவது முறையாக தங்கம் வென்றுள்ள தமிழகத்தின் தங்க மகனுக்கு, அரசியல் தலைவர்கள், கிரிக்கெட் வீரர்கள் என பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து கொண்டே இருக்கிறது.


சதீஷ் குமாருக்கு தமது வாழ்த்தை தெரிவித்துள்ள முதலமைச்சர் பழனிசாமி, அவருக்கு 50 லட்சம் ரூபாய் ஊக்கத் தொகையை அறிவித்துள்ளார். இரண்டாவது முறையாக தங்கம் வென்று நாட்டிற்கும், நம் மாநிலத்துக்கும் அவர் பெருமை சேர்த்துள்ளதாக முதல்வர் தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.


மூலக்கதை