ஐதேகவில் ரணிலுக்கு இணையாக சரத் பொன்சேகாவுக்கு முக்கியத்துவம்

TAMIL 24 NEWS  TAMIL 24 NEWS
ஐதேகவில் ரணிலுக்கு இணையாக சரத் பொன்சேகாவுக்கு முக்கியத்துவம்

கிரிபத்கொடவில் நேற்று நடந்த ஐக்கிய தேசியக் கட்சியின் பேரணியில் கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு இணையாக, அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தது.

பேரணியைப் பார்வையிடும் மேடையில்,ஐதேகவின் ஏனைய தலைவர்களுடன்,  ரணில் விக்கிரமசிங்கவும், சரத் பொன்சேகாவும் அருகருகே அமர்ந்திருந்தனர்.

மேடையில் கட்டப்பட்டிருந்த பதாதையின் ஒரு பக்கத்தில் ரணில் விக்கிரமசிங்கவின் படமும், மற்றொரு பக்கத்தில் சரத் பொன்சேகாவின் படமும் பொறிக்கப்பட்டிருந்தது.

அத்துடன், பேரணி நடத்த பகுதியில் வைக்கப்பட்டிருந்த பதாதைகளிலும், இவர்கள் இருவரின் படங்களே பொறிக்கப்பட்டிருந்தன.

போரை வெற்றி கொண்ட பின்னர், அலரி மாளிகையில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச, முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச உள்ளிட்டோரின் முன்னிலையில், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கேக் வெட்டி கொண்டாடுவதை காட்டும் படமும் பதாதைகளில் இடம்பெற்றிருந்தன.

ஐதேகவில் பாரிய மறுசீரமைப்புகள் மேற்கொள்ளப்படவுள்ள நிலையில், சரத் பொன்சேகாவுக்கு கட்சியின் உப தலைவர் பதவி வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

நேற்றைய பேரணியில் சரத் பொன்சேகாவுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்ததானது, அவருக்கு முக்கிய பதவியை வழங்க ஐதேக தலைமை முடிவு செய்திருப்பதையே வெளிப்படுத்தியுள்ளது.

மூலக்கதை