‛மைல் கல்லில் எழுதுவது இந்தி திணிப்பு அல்ல’: பொன் ராதாகிருஷ்ணன்

TAMIL 24 NEWS  TAMIL 24 NEWS
‛மைல் கல்லில் எழுதுவது இந்தி திணிப்பு அல்ல’: பொன் ராதாகிருஷ்ணன்

‛மைல் கல்லில் எழுதுவது இந்தி திணிப்பு அல்ல, இந்த விவகாரத்தில் தி.மு.க., இரட்டை வேடம் போடுகிறது’ என மத்திய இணை அமைச்சசர் பொன் ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டினார்.

காஷ்மீர்- கன்னியாகுமரி தங்க நாற்கர சாலை கன்னியாகுமரி அருகே நரிக்குளத்தில் ரூ.21 கோடி செலவில் பாலம் அமைக்கும் பணியை அடிக்கல் நாட்டி துவக்கி வைத்த மத்திய இணை அமைச்சசர் பொன் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: டில்லியில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகள் மூன்று முறை என்னை சந்தித்துள்ளனர். இரண்டு முறை விவசாயம், நிதி. நீர்வளத்துறை அமைச்சசர்களை சந்தித்துள்ளனர்.

தமிழக விவசாயிகள் கோரிக்கை அனைத்தும் மாநில அரசு சம்பந்தப்பட்டது. அவர்கள் பிரதமரை சந்திக்க வேண்டும் என்று கூறுகின்றனர். நாங்கள் மாநில முதல்வரை சந்திக்க ஏற்பாடு செய்து தருவதாக கூறியுள்ளோம்.

தமிழக அரசு வறட்சி நிவாரண நிதியாக 39 ஆயிரம் கோடி மற்றும் புயல் நிவாரண நிதியாக 22 ஆயிரம் கோடி ரூபாய் கேட்டது. மத்திய அரசு வறட்சி நிவாரணத்துக்கு 1,748 கோடியும், புயல் நிவாரணத்துக்கு 226 கோடியும் ஒதுக்கியுள்ளது.

ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தலை நிறுத்த கூடாது. பணம் கொடுக்கிறார்கள் என்பதற்காக தேர்தலை நிறுத்தக் கூடாது. அனைத்து அதிகாரமும் கொண்டு தேர்தல் ஆணையம் அதை தடுத்து நிறுத்த வேண்டும். தேசிய நெடுஞ்சாலை மைல் கல்லில் எழுதுவது இந்தி திணிப்பு அல்ல.

மைல் கல்லில் இந்தி எழுத கூடாது என்று தி.மு.க., செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகிறார். 2004-ல் தி.மு.க.,வை சேர்ந்த மத்திய அமைச்சசர் பாலு காலத்தில்தான் இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த விஷயத்தில் தி.மு.க., இரட்டை வேடம் போடுகிறது. லாரி ‛ஸ்டிரைக்’ பிரச்னையில் சுமூக தீர்வு ஏற்படும் என்று நான் நம்புகிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை