அ.தி.மு.க. உயிர்வாழ போராடுகிறது: ப. சிதம்பரம்

TAMIL 24 NEWS  TAMIL 24 NEWS
அ.தி.மு.க. உயிர்வாழ போராடுகிறது: ப. சிதம்பரம்

தமிழ்நாட்டில் நடந்து வரும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு உயிர்வாழ போராடிக் கொண்டிருக்கிறது என்று ப. சிதம்பரம் கூறினார்.ப. சிதம்பரம் எம்.பி. எழுதிய புத்தகத்தின் வெளியீட்டு விழா பெங்களூரில் நடந்தது.

அப்போது ப. சிதம்பரம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-

தமிழ்நாட்டில் நடந்து வரும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசுக்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு உள்ளது. இந்த அரசு உயிர்வாழ போராடிக் கொண்டிருக்கிறது.

இந்த ஆட்சியை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.அந்த கட்சியில் உள்ள 130 எம்.எல்.ஏ.க்களும் இன்னும் 4 ஆண்டு காலம் எப்படியாவது பதவியில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

ஒற்றுமையாக இருந்தால் தான் இதை காப்பாற்ற முடியும் என்பதற்காக அவர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்குள் ஒற்றுமை குலைந்துவிட்டால் அரசும் தானாக கவிழ்ந்து விடும். எனவே ஆட்சியை நீடித்து கொண்டு செல்வது மிகக் கடினமானதாகவே இருக்கும்.

அ.தி.மு.க. அரசுக்கு மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி இருந்தாலும் ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் அது எதிரொலிக்கும் என்ற சொல்ல முடியாது. இடைத்தேர்தல் என்றாலே பண பலம், அதிகார பலம், போலீஸ் பலம் தான் எதிரொலிக்கிறது. அதை வைத்து தான் முடிவுகள் இருக்கும்.

ஆனால் உள்ளாட்சி தேர்தலோ அல்லது பொதுத்தேர்தலோ வந்தால் மக்களுடைய உண்மையான முடிவு வெளிப்படும். அ.தி.மு.க. பிரிந்து இருப்பதால், அது தி.மு.க.வுக்கு சாதகமாக இருக்குமா என்பதை பற்றி நான் சொல்ல முடியாது.

இவ்வாறு ப. சிதம்பரம் கூறினார்.

மூலக்கதை