விசா காலக்கெடு முடிவு எதிரொலி: 3 நாட்களில் 509 பாகிஸ்தானியர் வெளியேறினர்

புதுடெல்லி,பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு எதிரான பதிலடி நடவடிக்கைகளை இந்தியா எடுத்து வருகிறது. பல்வேறு விசாக்களில் வந்த பாகிஸ்தானியர் வெளியேற காலக்கெடு நிர்ணயித்தது.'சார்க்' விசாவில் வந்தவர்கள் ஏப்ரல் 26-ந் தேதிக்குள்ளும், இதர விசாக்களில் வந்தவர்கள் 27-ந் தேதிக்குள்ளும், மருத்துவ விசாவில் வந்தவர்கள் 29-ந் தேதிக்குள்ளும் வெளியேற கெடு விதிக்கப்பட்டது.அதன்படி, கடந்த 25, 26 மற்றும் 27-ந் தேதிகளில் ஏராளமான பாகிஸ்தானியர்கள் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள அட்டாரி எல்லை வழியாக பாகிஸ்தானுக்கு திரும்பிச் சென்றனர்.25-ந் தேதி, அந்த வழியாக 191 பாகிஸ்தானியர் வெளியேறினர். 26-ந் தேதி 81 பாகிஸ்தானியர் வெளியேறினர்.முதல் 2 நாட்களை விட நேற்று அதிகமானோர் வெளியேறினர். நேற்று 237 பாகிஸ்தானியர்கள் அட்டாரி எல்லை வழியாக வெளியேறினர். எனவே, 3 நாட்களில் மொத்தம் 509 பாகிஸ்தானியர்கள் பாகிஸ்தான் திரும்பிச் சென்றுள்ளனர். இவர்களில் 9 பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளும், சாதாரண அதிகாரிகளும் அடங்குவர்.சில பாகிஸ்தானியர்கள், விமானம் மூலம் வேறு நாடுகளுக்கு சென்று அங்கிருந்து பாகிஸ்தானுக்கு திரும்பி இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. அவர்களது எண்ணிக்கை தெரியவில்லை.நேற்று பாகிஸ்தானியர்களை வழியனுப்ப அட்டாரி எல்லையில் அவர்களின் இந்திய உறவினர்கள் கண்ணீர்மல்க திரண்டனர். இதனால், அட்டாரி எல்லை உணர்ச்சிமயமாக காணப்பட்டது.இதுபோல், பாகிஸ்தானுக்கு சென்றிருந்த இந்தியர்கள் வெளியேற பாகிஸ்தான் உத்தரவிட்டு இருந்தது. அதன்படி, கடந்த 3 நாட்களில் அட்டாரி எல்லை வழியாக 745 இந்தியர்கள் இந்தியா திரும்பி உள்ளனர். அவர்களில் 14 தூதரக அதிகாரிகளும், அதிகாரிகளும் அடங்குவர்.
மூலக்கதை
