சுங்கச்சாவடிகளில் ரூ.3 ஆயிரம் கட்டணத்தில் ஓராண்டுக்கான பாஸ்: நாளை முதல் அமல்

  தினத்தந்தி
சுங்கச்சாவடிகளில் ரூ.3 ஆயிரம் கட்டணத்தில் ஓராண்டுக்கான பாஸ்: நாளை முதல் அமல்

புதுடெல்லி,தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்கள், 3,000 ரூபாய் கட்டணம் செலுத்தி பாஸ் வாங்கினால், ஓராண்டில், 200 சுங்கச்சாவடிகளை கடந்து செல்ல முடியும் என்ற அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை, நாளை(ஆகஸ்ட் 15) முதல் செயல்படுத்த உள்ளதாக, மத்திய சாலை போக்குவரத்து மந்திரி நிதின் கட்கரி அறிவித்து இருந்தார். அதன்படி, நாளை முதல் இந்த திட்டம் நடை முறைக்கு வருகிறது. இந்த ஆண்டு பாஸ் பெறுவதற்கு முதலில் வாகனமும், அதனுடன் இணைக்கப்பட்ட பாஸ்டேக் தகுதியும் சரிபார்க்கப்படும். பின்னர் ரூ.3 ஆயிரம் கட்டணத்தை ‘ராஜ்மார்க்யாத்ரா’ செல்போன் செயலி அல்லது தேசிய நெடுஞ்சாலை இணையதளம் மூலம் செலுத்த வேண்டும். 2 மணி நேரத்திற்குள் ‘பாஸ்’ செயல்படுத்தப்படும். இந்த பாஸ், தனியார் கார், ஜீப், வேன்களுக்கு மட்டுமே பொருந்தும். வணிக பயன்பாட்டுக்கான வாகனங்களில் பயன்படுத்தினால், முன் அறிவிப்பு இல்லாமல் உடனடியாக பாஸ் செயலிழக்கப்படும். இது தேசிய நெடுஞ்சாலை மற்றும் தேசிய விரைவுச்சாலையில் மட்டுமே செல்லுபடியாகும். மாநில நெடுஞ்சாலை, மாநில-உள்ளாட்சி நிர்வாக கட்டண மையங்கள், ‘பார்க்கிங்’ போன்ற இடங்களில் வழக்கமான முறையில் செயல்படும். அதற்கு கட்டணங்கள் வழக்கம்போல் வசூலிக்கப்படும்.

மூலக்கதை