வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிக்கு எதிர்ப்பு.. பீகாரில் ராகுல்காந்தி யாத்திரை 17-ந் தேதி தொடக்கம்

புதுடெல்லி, பீகார் சட்டசபை தேர்தல் நெருங்குவதையொட்டி, அங்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி நடக்கிறது. 2003-ம் ஆண்டுக்கு பிறகு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டவர்கள் தங்கள் குடியுரிமையை நிரூபிப்பதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்ற தேர்தல் கமிஷன் உத்தரவு சர்ச்சையை ஏற்படுத்தியது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கடந்த 1-ந் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 65 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா வாக்கு திருட்டில் ஈடுபட்டதாக கூறி, அதற்கு எதிராக காங்கிரஸ் கட்சி பிரசாரத்தை தீவிரப்படுத்தி உள்ளது. இந்நிலையில், பீகாரில் யாத்திரை நடத்தும் அறிவிப்பை காங்கிரஸ் கட்சி நேற்று வெளியிட்டது. இதுகுறித்து காங்கிரஸ் அமைப்பு பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் தனது ‘எக்ஸ்’ வலைத்தள பக்கத்தில் கூறுகையில், “ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கான போராட்டம் தெருக்களில் நடக்கப்போகிறது. ஆபத்தான பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிக்கு எதிராக நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தியும், ‘இந்தியா’ கூட்டணி தலைவர்களும் பீகார் முழுவதும் ‘வாக்கு அதிகார யாத்திரை’ என்ற யாத்திரையை 17-ந் தேதி தொடங்குகிறார்கள். இதன்மூலம், வாக்கு திருட்டுக்கு எதிரான போராட்டத்தை ஒரு மக்கள் இயக்கமாக மாற்றுவோம். இந்த யாத்திரை, செப்டம்பர் 1-ந் தேதி பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் முடிவடையும். அங்கு பொதுக்கூட்டம் நடைபெறும். யாத்திரை தொடர்பாக சசாரமில் ‘இந்தியா’ கூட்டணி தலைவர்களை சந்தித்தேன். யாத்திரைக்கான ஏற்பாடுகள், தொண்டர்களை திரட்டுதல், சுமுகமாக ஒருங்கிணைத்தல் ஆகியவை தொடர்பாக ஆலோசித்தேன்” என்று தெரிவித்துள்ளார்.
மூலக்கதை
