ராகுல்காந்தி, மு.க.ஸ்டாலின் தொகுதிகளில் முறைகேடு; பாஜக குற்றச்சாட்டு

புதுடெல்லி, கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வாக்குகள் திருடப்பட்டதாக நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி கடந்த வாரம் சில ஆதாரங்களை வெளியிட்டார். கடந்த 11-ந் தேதி, நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து தேர்தல் கமிஷன் அலுவலகம் நோக்கி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஊர்வலமாக புறப்பட்டனர்.இந்நிலையில், காங்கிரசின் குற்றச்சாட்டுக்கு பா.ஜனதா பதிலடி கொடுத்துள்ளது. முன்னாள் மத்திய மந்திரி அனுராக் தாக்குர், டெல்லியில் பா.ஜனதா தலைமையகத்தில் வாக்காளர் பட்டியலை ஆய்வு செய்து திரட்டிய தரவுகளை பலகையில் காண்பித்து விளக்கினார். பீகாரில் நடந்து வரும் வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கு எதிராக காங்கிரஸ், தி.மு.க., சமாஜ்வாடி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் பொய் பிரசாரம் செய்து வருகிறார்கள். தேர்தல் கமிஷனுக்கு கேள்வி விடுத்துள்ளனர். அவர்கள் சட்டவிரோதமாக ஊடுருவிய வங்காளதேசத்தினரை ஓட்டு வங்கியாக கருதுகிறார்கள். அந்த ஓட்டு வங்கியை பாதுகாக்க பேசி வருகிறார்கள். ராகுல்காந்தி வெற்றி பெற்ற ரேபரேலி, பிரியங்கா வெற்றி பெற்ற வயநாடு, சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் வெற்றி பெற்ற கனோஜ், அபிஷேக் பானர்ஜி வெற்றி பெற்ற டயமண்ட் ஹார்பர் ஆகிய நாடாளுமன்ற தொகுதிகளில் வாக்காளர் சேர்ப்பில் முறைகேடுகள் நடந்துள்ளன. எதற்காக அவர்கள் போலி வாக்காளர்களை சேர்த்துள்ளனர்? வாக்கு திருட்டு மூலம் அவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். அவர்கள் ராஜினாமா செய்வார்களா?தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்ற கொளத்தூர் சட்டசபை தொகுதியிலும், சமாஜ்வாடி மூத்த தலைவர் டிம்பிள் யாதவ் வெற்றி பெற்ற மைன்புரி நாடாளுமன்ற தொகுதியிலும் வாக்காளர் சேர்ப்பு முறைகேடு நடந்துள்ளது. தேர்தல் முறைகேட்டுக்காக அவர்களும் ராஜினாமா செய்வார்களா? இவ்வாறு அவர் கூறினார்.
மூலக்கதை
