தெருநாய்கள் தொடர்பான வழக்கு: அவசர விசாரணை கோரிய புதிய மனு மீது இன்று விசாரணை

  தினத்தந்தி
தெருநாய்கள் தொடர்பான வழக்கு: அவசர விசாரணை கோரிய புதிய மனு மீது இன்று விசாரணை

புதுடெல்லி, டெல்லியில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. நாய்க்கடியால் ‘ரேபிஸ்’ என்ற நோய் பரவி வருவதாக பத்திரிகைகளில் செய்தி வெளியானது. பத்திரிகை செய்தி அடிப்படையில், இப்பிரச்சினையை சுப்ரீம் கோர்ட்டு தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இதை விசாரித்த நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, டெல்லியில் உள்ள தெருநாய்கள் அனைத்தையும் பிடித்து காப்பகங்களில் அடைக்குமாறு டெல்லி அரசுக்கும், உள்ளாட்சி அமைப்புகளுக்கும் கடந்த 11-ந் தேதி உத்தரவிட்டது. தெருநாய்களை பிடிப்பதற்கு யாராவது குறுக்கே நின்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தது. இந்நிலையில், மனித உரிமைகள் மாநாடு (இந்தியா) என்ற அமைப்பு சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனு தாக்கல் செய்துள்ளது. அதில், ‘‘தெருநாய்களின் பிறப்பை கட்டுப்படுத்த அவற்றுக்கு கருத்தடை செய்வதை கட்டாயமாக்கும் 2001-ம் ஆண்டின் விதிமுறைகள் சரிவர பின்பற்றப்படவில்லை’’ என்று கூறப்பட்டுள்ளது. தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதி வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று மனித உரிமைகள் மாநாட்டின் வக்கீல் ஆஜரானார். அதற்கு தலைமை நீதிபதி, ‘‘ஏற்கனவே வேறு ஒரு அமர்வு இவ்வழக்கில் உத்தரவு பிறப்பித்து விட்டது’’ என்று கூறினார். அதற்கு வக்கீல், தெருநாய்கள் தொடர்பான மனுக்களை கடந்த ஆண்டு மே மாதம் நீதிபதி ஜே.கே.மகேஸ்வரி தலைமையிலான அமர்வு அந்தந்த ஐகோர்ட்டுகளுக்கு மாற்றியதை சுட்டிக்காட்டினார். தங்களது மனுவை அவசர விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். அதற்கு தலைமை நீதிபதி, ‘‘கவனிக்கிறேன்’’ என்று உறுதி அளித்தார். பின்னர் தெருநாய்கள் தொடர்பான வழக்கை விசாரிக்க நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா, அஞ்சாரியா ஆகியோரை கொண்ட புதிய அமர்வை தலைமை நீதிபதி அமைத்தார். இந்நிலையில் அந்த அமர்வு முன் இன்று (வியாழக்கிழமை) இந்த வழக்கு விசாரணை நடைபெற உள்ளது.

மூலக்கதை