இந்திய குடியுரிமை பெறும் முன்பே சோனியா காந்தி வாக்காளர் ஆனது எப்படி? பாஜக சரமாரி கேள்வி

  தினத்தந்தி
இந்திய குடியுரிமை பெறும் முன்பே சோனியா காந்தி வாக்காளர் ஆனது எப்படி? பாஜக சரமாரி கேள்வி

புதுடெல்லி, தேர்தல் கமிஷனுக்கும், மத்திய அரசுக்கும் எதிராக வாக்கு திருட்டு குற்றச்சாட்டை காங்கிரஸ் தொடர்ந்து கூறி வருகிறது. இதற்கு கடுமையாக எதிர்வினையாற்றி வரும் பா.ஜனதா, தற்போது சோனியாவின் குடியுரிமையை வைத்து காங்கிரசுக்கு பதிலடி கொடுத்து உள்ளது. குறிப்பாக, இந்திய குடியுரிமை பெறுவதற்கு முன்னரே சோனியா காந்தி வாக்காளர் ஆனதாக குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் அதிகாரப்பூர்வ வீட்டு வாக்காளர் பட்டியலை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள கட்சியின் ஐ.டி. பிரிவு தலைவர் அமித் மால்வியா, 1980 ஜனவரி 1 என்ற தகுதி தினம் என்ற அடிப்படையில் தயாரிக்கப்பட்ட அந்த பட்டியலில் சோனியா காந்தியின் பெயர் இடம்பெற்றிருப்பதை சுட்டிக்காட்டி உள்ளார். அதில் அவர் கூறுகையில், ‘இந்திய வாக்காளர் பட்டியலில் சோனியா காந்தி இடம்பெற்றது, தேர்தல் சட்டத்தின் வெளிப்படையான விதிமீறல் ஆகும். ஒருவேளை தகுதியற்ற மற்றும் சட்டவிரோத வாக்காளர்களை முறைப்படுத்துவதில் ராகுல் காந்தியின் ஆர்வத்தையும், சிறப்பு தீவிர திருத்தத்திற்கு அவரது எதிர்ப்பையும் இது விளக்கக்கூடும்’ என சாடியுள்ளார். சோனியா காந்தி இந்திய குடியுரிமை பெறுவதற்கு 3 ஆண்டுகளுக்கு முன்பே, அதாவது இத்தாலி குடியுரிமையை வைத்திருக்கும்போதே 1980-ம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் அவரது பெயரும் இடம்பெற்று உள்ளது என்றும் அமித் மால்வியா குற்றம் சாட்டியுள்ளார். பின்னர் 1982-ம் ஆண்டு இதற்கு எதிர்ப்பு கிளம்பியதால் சோனியாவின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு பின்னர் 1983-ம் ஆண்டு மீண்டும் சேர்க்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

மூலக்கதை