கார்த்தி என் கேள்விகளுக்கு பதில் சொல்லாவிட்டால்...: ராதிகா சரத்குமார்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கார்த்தி என் கேள்விகளுக்கு பதில் சொல்லாவிட்டால்...: ராதிகா சரத்குமார்

சென்னை: சரத்குமார் சிவக்குமாரை பற்றி முன்பு பேசியதால் கார்த்திக்கு அவர் மீது கோபம். கார்த்தி என் கேள்விகளுக்கு பதில் அளிக்காவிட்டால் மீடியாவை கூட்டி சரத் மீதான புகார்களை நிரூபிக்குமாறு அவர்களை கேட்பேன் என நடிகை ராதிகா தெரிவித்துள்ளார்.

நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவர் சரத்குமார் மீது ஊழல் புகார் சுமத்தி அவரை சங்கத்தில் இருந்து நிரந்தரமாக நீக்கியுள்ளனர். இந்த நீக்கத்திற்கு தனிப்பட்ட விரோதம் காரணம் என நடிகை ராதிகா சரத்குமார் தெரிவித்து வருகிறார்.

இந்நிலையில் இது குறித்து அவர் கூறுகையில்,

சரத்குமார் சிவக்குமாரை பற்றி முன்பு பேசியதால் கார்த்திக்கு அவர் மீது கோபம். அவரின் தந்தை மீது தப்பு என்பதை கார்த்தியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

கார்த்தியிடம் கேள்வி கேட்டு ட்வீட் செய்துள்ளேன். ஆனால் அவர் ஒரு கேள்விக்கு கூட பதில் அளிக்கவில்லை. ஒரு கிரிக்கெட் போட்டி நடத்த அவர்கள் எதற்காக கோடிக் கணக்கில் செலவு செய்தார்கள் என தெரியவில்லை.

நானும் சிபிஎல்-ல் பங்கேற்றேன். ஒரு போட்டியை நடத்த நாங்கள் எவ்வளவு செலவு செய்தோம் என எனக்கு தெரியும். இது பற்றி எல்லாம் நான் நிச்சயம் கேள்வி கேட்பேன். கார்த்தி என் கேள்விகளுக்கு பதில் அளிக்காவிட்டால் மீடியாவை கூட்டி சரத் மீதான புகார்களை நிரூபிக்குமாறு அவர்களை கேட்பேன்.

போலீஸ் அறிக்கையில் கூட இதற்கு எல்லாம் தனிப்பட்ட விரோதம் காரணம் என தெளிவாக எழுதப்பட்டுள்ளது. நான் மீடியாவை அழைக்கப் போவது விரைவில் நடக்கும்.

மூலக்கதை