அந்தப் பக்கம் நாடா.. இந்தப் பக்கம் நாம விளையாடலாம் வாடா.. மெரீனாவில் குழந்தைகளோடு குதூகலித்த மக்கள்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அந்தப் பக்கம் நாடா.. இந்தப் பக்கம் நாம விளையாடலாம் வாடா.. மெரீனாவில் குழந்தைகளோடு குதூகலித்த மக்கள்!

சென்னை: நாடா புயல் உருவாகியுள்ளதால் இரவில் இருந்து சென்னையில் விட்டு விட்டு கன மழை பெய்து வருகிறது. இதனால் மெரினா, திருவொற்றியூர் பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. எப்போதாவது ஒரு முறைதான் கடல் சீற்றம் ஏற்படும் என்பதால், அதனைக் கண்டு களிக்க குழந்தைகளுடன் மெரினா கடற்கரைக்கு மக்கள் சென்று வருகின்றனர்.

சென்னைக்கு தென்கிழக்கே வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி, அது நேற்று காலை புயலாக மாறியது. நாடா என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த புயல், சென்னைக்கு தென்கிழக்கே 350 கி.மீ. தூரத்திலும் புதுவையிலிருந்து 290 கி.மீ. தூரத்திலும் மையம் கொண்டுள்ளது.

இதனால் சென்னையின், முக்கிய பகுதிகளான, திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், ராயப்பேட்டை, தியாகராயர் நகர், கிண்டி, கே.கே. நகர், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் பரவலாக விட்டு விட்டு கன மழை பெய்து வருகிறது. மேலும், சென்னையில் தரைக்காற்றும் வீசி வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, மெரினா, பெசண்ட் நகர், பட்டினம்பாக்கம், திருவொற்றியூர் ஆகிய பகுதிகளில் கடல் அலைகள் சீற்றத்துடன் மேலேழுவதும் விழுவதுமாக உள்ளது.

இது பார்ப்பதற்கு சற்று அச்சத்தை ஏற்படுத்தும். என்றாலும், இதனை சாதாரண நாட்களில் காண முடியாது. புயல், மழை நேரங்களில் மட்டுமே கடல் சீற்றத்தோடு இருப்பதையும் அலைகள் சில அடி தூரத்திற்கு மேலெழுந்து விழுவதையும் காண முடியும்.

எனவே, நாடா புயலை சாக்காக வைத்து கொந்தளிக்கும் கடலைக் காண மெரினா கடற்கரைக்கு மக்கள் வந்து செல்கின்றனர். குழந்தைகளுக்கு பள்ளி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு பெற்றோர்கள் மெரினாவிற்கு செல்கின்றனர். அங்கு சீறும் அலைகளோடு சற்று நேரம் விளையாடிவிட்டும் செல்கின்றனர்.

சில அடி தூரத்திற்கு அலைகள் மேலேழுவதையும், அதில் தங்களது குழந்தைகள் விளையாடுவதையும் செல்போன்களில் சிலர் படம் எடுத்து மகிழ்கின்றனர். பலர் கடற்கரையில் செல்பிக்களை எடுத்து நினைவுகளை பத்திரப்படுத்திக் கொள்கிறார்கள்.

மெரீனா கடற்கரையில் உள்ள சர்வீஸ் சாலையில் மழை நீர் தேங்கி பார்ப்பதற்கு கடல் சற்று நகர்ந்து முன்னுக்கு வந்துவிட்டது போல் தோன்றும். அவ்வளவு அழகு. இந்த சாலையிலும் வாகன போக்கு வரத்து அதிகம் இருக்கும். இருந்தாலும் வாகன ஓட்டிகள் வண்டியை நிறுத்திவிட்டு கடலையும் அதன் அலைகளையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் சிலர், தங்களது வாகனங்களை அங்கே கழுவி வாட்டர் வாஷ் செய்துவிட்டும் செல்கின்றனர்.

மூலக்கதை