தனுஷுக்கு சினிமாவில் நடிக்க விருப்பமில்லை! - கஸ்தூரிராஜா

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தனுஷுக்கு சினிமாவில் நடிக்க விருப்பமில்லை!  கஸ்தூரிராஜா

தனுஷுக்கு சினிமாவில் நடிக்க விருப்பமில்லாமல்தான் நடிக்க வந்தார் என்று இயக்குநர் கஸ்தூரிராஜா கூறினார்.

நேற்று நடந்த பாரப்க்கத் தோணுதே படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அவர் பேசுகையில், "இந்த மாதிரி சிறியபடங்கள் ஒடினால்தான் சினிமா நன்றாக இருக்கும்.மேலும் 10 படங்கள் வரும். இதுதான் சினிமா.

எல்லாருமே ஒரு காலத்தில் புதுமுகங்கள்தான். ஸ்ரீகாந்த்தேவா இங்கே இருக்கிறார். ஒருகாலத்தில் தேவாவின் இசையில் 5 படங்கள் இயக்கினேன். ஐந்தும் வெற்றி. அவர் மகன் இந்த ஸ்ரீகாந்த்தேவா அப்போது கீபோர்டு பிளேயர். சாப்பாடு கூட அவரது ஒலிப்பதிவுக் கூடத்தில்தான். அவர்கள் வீட்டுச் சாப்பாடுதான் சாப்பிடுவேன். அவ்வளவு சுதந்திரம் இருக்கும்.

இளையராஜாவிடம் சுதந்திரமாக இருக்க முடியுமா? பேச முடியுமா? மூச்சுக் கூட சத்தமாக விட முடியாது. அவரை வைத்து பெரிய ஆளானவர்கள் பல பேர். நானும் அவரால் வளர்ந்தவன்தான். அவர் என்னிடம் நீ ஆசீர்வதிக்கப்பட்டவன் என்பார். இப்போது காலம் மாறிவிட்டது.

என் மூத்தமகன் செல்வா என்னை ஏன் கதாநாயகனாக்கவில்லை என்கிறான். தனுஷ் என்னை ஏன் நடிக்க விட்டே என்கிறான்.

இங்கு வந்துள்ள நட்டியிடம் நான் ஒரு கதை சொன்னேன். நடிக்க மறுத்துவிட்டார். இது பெரிய கதாநாயகர்கள் செய்யவேண்டிய கதை எனக்குச் சரிப்பட்டு வராது என்றார்.

அவர் எடுத்த முடிவு சரியானது. சிலவற்றைச் சொல்ல சில முகம் தேவை. அதுதான் முகப் பொருத்தம் என்பது .அவர் 'சதுரங்க வேட்டை'யில் நன்றாக நடித்திருப்பார்.அதுதான் அவரது முகப் பொருத்தம்.

நான் முதல்படம் இயக்கியபோது ராஜ்கிரண் பெரிய கதாநாயகர்களிடமெல்லாம் என்னை அழைத்துச் சென்றார் .விஜயகாந்திடம் கதை சொன்னேன். மறுத்து விட்டார். அது 'இரவுப் பூக்கள்' சமயம்... சத்யராஜிடம் கதை சொன்னேன்.மறுத்துவிட்டார். அவர்களுக்கு என்மேல் நம்பிக்கை வரவில்லை. சத்யராஜ் இதெல்லாம் ஒரு கதையா என்றார். சொன்னால் ஏற்றுக் கொள்வார்களா.. நான் இப்போதுதான் முழுக்கை சட்டையிலிருந்து அரைக்கைச் சட்டைக்கு வந்திருக்கிறேன் என்றார்.

பாரதிராஜா எடுக்கிறாரே என்றேன். அவர் சொன்னால் ஏற்றுக் கொள்வார்கள். நீங்கள் சொன்னால் ஏற்றுக் கொள்வார்களா? என்றார். நான் புதுமுகம் என்பதால் யாரும் நம்பவில்லை.

இப்படிப் பலவற்றை கடந்துதான் முதல் படம் எடுத்தேன். எல்லா அறிமுகங்களும் இப்படிப்படட அவமானங்களும் வலிகளும் போராட்டங்களும் கடந்துதான் வந்திருக்கிறார்கள். சூப்பர்ஸ்டார் ரஜினியும் கூட இப்படிப்பட்ட அவமானங்களைக் கடந்துதான் உயர்ந்து வந்திருக்கிறார்.

அப்போது எனக்குள் ஈகோ எப்படி அவர்கள் அப்படிச் சொல்லலாம் என்று. ஆனால் அவர்கள் நடிக்காததால் முடிவு நல்லதாகவே முடிந்தது. இயக்குநர் ஒருவர் கற்பனையில் ஏதேதோ நினைக்கலாம். மற்றவர் வேறு மாதிரி உணரலாம். அதுவே திசையை மாற்றி விடும் . 'என் ராசாவின் மனசிலே' வுக்கு நான் நினைத்த கதையில் 'பெண் மனசு ஆழமுன்னு ' என்கிற அந்தப் பாட்டெல்லாம் கிடையாது. காட்சியிலும் இல்லை.

ஆனால் இளையராஜா அந்தப் பாடலைப் போட்டார். காட்சிகள் இல்லை. எடுக்கவில்லை என்றேன். போய் எடு என்றார். அப்போது என்னவோ நம் கனவு சிதைக்கப்பட்டதைப் போலத் தெரியும் நம் கனவு மற்றவர்களுக்குத் தெரியவில்லை என்று நினைப்போம். அப்படித்தான் அன்றும் நினைத்தேன். ஆனால் அவர் பாடல் பெரிய பலமானது.

தயாரிப்பாளர் அமைவது சிரமம். இயக்குநர் என்னென்னவோ கற்பனை செய்யலாம். கப்பல் வருவது போலக் கற்பனை செய்யலாம். கப்பல் கொண்டுவர ஒரு கிறுக்கன் தயாரிப்பாளர் பணத்துடன் வரவேண்டும்," என்றார்.

மூலக்கதை