சீனிவாச இராமானுசன் அவர்களுக்கு சென்னையில் அருங்காட்சியகம் நடத்தும் கணித ஆர்வலர்
33 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த கணிதமேதை இராமானுசன் அவர்களுக்கு இந்தியாவின் பெருமை மிகு அடையாளமாகத் திகழும் மேதைக்கு பெருமை சேர்க்கும் வகையில் சென்னையில் மிகப்பெரிய பொருட்செலவில் ஒரு தளத்தை ஒதுக்கி அருங்காட்சியகம் அமைத்துள்ளார் திரு.போஸ்
வண்ணாரப்பேட்டையில் வாகனம் நுழையமுடியாத இந்திய வணிகத்தில் முக்கிய இடமாக இருக்கும் அந்த நெருக்கடியான இடத்தில் ,மேற்கத்திய நாடுகளுக்கு இணையான தரத்தில் குளிரூட்டப்பட்ட அருமையான ஒரு அருங்காட்சியத்தை நேற்று சுற்றிக்காட்டி அவர் நேரில் விளக்கியபோது அதன்பின் உள்ள உழைப்பை , கணிதத்தின் மேல் அவருக்கு உள்ள ஈடுபாட்டை உணர்ந்தேன்.
இதைப் பார்க்க யார் வருகிறார்கள் என்றேன். இந்தியர்கள் அவ்வளவாக வருவதில்லை, வெளிநாட்டினர் பலர் வந்து செல்கிறார்கள் என்றார். கணித ஆர்வலர், ஆசிரியர் பி.கே. சீனுவாசன் என்பவர் இவருக்கு திரு.இராமானுசன் குறித்த பல அரிய தகவல்களை வழங்கி இங்கு தங்கியுள்ளார். இராமானுசன் குறித்த பல்வேறு விவரங்களை தொகுத்து வைத்துள்ள உங்களை தொடர் நேர்காணல் செய்து காணொளியாக ஆவணப்படுத்த வலைத்தமிழ் ஏற்பாடு செய்யும் என்று கூறினேன்.
இவர் பல தொழில்களை செய்தாலும் தன் தாத்தா பாட்டி பெயரில் இவரது குடும்பம் ஒரு அறக்கட்டளை தொடங்கி மிகப்பெரிய அளவில் மக்கள் சேவை செய்துவருகிறார்கள். தமிழ்மேல் தீராத பற்று கொண்டவர். இவரது தமிழ்ப்பணிகளை ஓளவைக் கலைக்கழகம் என்ற ஒரு அமைப்பை நிறுவி செய்துவருகிறார். அதில் குறிப்பிடத்தக்கது அந்த பல அடுக்கு கட்டிடத்தில் ஒரு தளத்தில் 46 ஆட்டிசம் உள்ளிட்ட பல பாதிப்புகள் உள்ள குழந்தைகளுக்கு ஒரு திறன் வாய்ந்த பள்ளியை, பல்வேறு புதிய உத்திகளுடன், அறிவியல் பார்வையுடன் அவர்களுக்கு பயனளிக்கும் ஒரு பள்ளியை நடத்திவருகிறார். அனைவரும் குடும்பத்தோடு சென்று பார்க்கவேண்டிய இடம்.
வாழ்க்கை பயணத்தில் வாழ்க்கையை புதிய கோணத்தில் அணுகும் பலரை சந்திப்பது ஒவ்வொரு நாளையும் பயனுள்ளதாக்குகிறது.
இப்படிப்பட்டவர்கள் வெளியில் தெரிவதில்லை, இப்படிப்பட்ட செயல்கள் பேசப்படுவதில்லை, கொண்டாடப்படுவதில்லை என்பது தமிழ்ச் சமூகத்தின் அவலநிலை.
சீனிவாச இராமானுசன் (Srinivasa Ramanujan) :குறிப்பு
சீனிவாச இராமானுசன் (Srinivasa Ramanujan, திசம்பர் 22, 1887 – ஏப்ரல் 26, 1920) இந்தியாவில் தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டத்தில் கோட்டை பகுதியில் பிறந்த கணித அறிஞர் ஆவார். இவர் தனது 33 அகவை முடியும் முன்னரே இறந்துவிட்டார். இவர் சிறு வயதிலேயே யாருடைய உதவியும் இல்லாமல் மிக மிக வியப்பூட்டும் விதத்தில் கணிதத்தின் மிக அடிப்படையான ஆழ் உண்மைகளைக் கண்டுணர்ந்தார். 1914-ஆம் ஆண்டுக்கும், 1918-ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் மூவாயிரத்திற்கும் அதிகமான புதுக் கணிதத் தேற்றங்களைக் கண்டுபிடித்தார். எண்களின் பண்புகளைப் பற்றிய எண் கோட்பாடுகளிலும், செறிவெண் கோட்பாடுகளிலும் இவர் கண்டுபிடித்துக் கூறிய ஆழ் உண்மைகள் இன்று அடிப்படை இயற்பியற் துறை முதல் மின்தொடர்புப் பொறியியல் துறை வரை பல துறைகளில் உயர்மட்டங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இராமானுசனின் பெயரால் 1997 இல் The Ramanujan Journal என்னும் கணித ஆய்விதழ் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. நன்றி: விக்கிப்பீடியா
அருங்காட்சியகம் செல்ல: https://maps.app.goo.gl/y3LyhkUvK23qcykD8