பழங்காலச் சுவடிகளைச் செம்மொழி நிறுவனத்திடம் ஒப்படைத்த மாணவர்கள்

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
பழங்காலச் சுவடிகளைச் செம்மொழி நிறுவனத்திடம் ஒப்படைத்த மாணவர்கள்

செங்கற்பட்டைச் சேர்ந்த மனோஜ் என்ற மாணவர் தம் வீட்டின் கிணற்றிற்கு அருகே தோண்டும்போது பழைய ஓலைச் சுவடிகளைக் கண்டுபிடித்து அகர முதலித்திட்ட இயக்கக மேனாள் இயக்குநர் தங்க. காமராசிடம் தெரிவித்தார்.   அதன் அடிப்படையில் திரு. தங்க. காமராசு அவர்களும் செந்தமிழ்த் திருத்தேர் தூயதமிழ் மாணவர்களும் அச்சுவடிகளைப் பெற்று அவற்றைப் பராமரித்து சீர்படுத்தி மே 29ஆம் நாள் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் இயக்குநர் பேராசிரியர். சந்திரசேகர் அவர்களிடம் ஒப்படைத்தனர். உடனடியாக ஓலைச்சுவடி ஆய்வாளர்கள் தி.ஞா.அருள்ஒளி, முனைவர் த.சரவணன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டு அவை ஆறெழுத்தந்தாதி, திருவாசகம் - நீத்தல் விண்ணப்பம், கந்தர் அநுபூதி - திருவாசகம், கணியம் - பாம்பு மாந்திரீகம் என கண்டறியப்பட்டன.   தொடர்ந்து, அவை சார்ந்து மேலும் ஆய்வு நடைபெறும் எனவும் தெரிவித்தனர். செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும் பாதுகாப்பிற்கும் பழங்காலத் தமிழ் இலக்கிய வரலாற்று மீட்பிற்கும் ஈகியத்துடன் அரும்பணியை ஆற்றிவருகிறது. குறிப்பாக, மாணவர்களுக்குப் பல்வேறு பயிலரங்குகளைத் தொடர்ந்து நடத்தி வருகிறது. பழங்கால நூல்களைச் செம்பதிப்பாக வெளியிட்டு வருகிறது. கல்வெட்டியல், சுவடியல் போன்ற பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.   அதனாலேயே, நாங்கள் கண்டறிந்த ஓலைச்சுவடிகளை உடனடியாக அந்த நிறுவனத்தில் ஒப்படைத்தோம். அகர முதலித் திட்ட இயக்கக மேனாள் இயக்குநர் திரு. தங்க. காமராசு அவர்களின் வழிகாட்டுதலின் பெயரில் அண்மையில் வேலூர் வி.ஐ.டி.யில் மூன்று நாள்கள் தூயதமிழ்ப் பயிலரங்கத்தை நடத்தினோம். வி.ஐ.டி வேந்தர் முனைவர் கோ.விசுவநாதன் அவர்கள் 100 மாணவர்களுக்கு உணவு, உறைவிடம் கொடுத்து எங்களை ஊக்கப்படுத்தினார். அவர் கொடுத்த ஊக்கம் எங்களைத் தொடர்ந்து தமிழ்ப் பணிகளை மேற்கொள்ளத் தூண்டியது.   அதில் ஒன்றுதான், அரிதான ஓலைச்சுவடிகளைச் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன இயக்குநரிடம் ஒப்படைத்த நிகழ்வாகும். எங்களின் நெறியாளர், திரு தங்க. காமராசு செயல்படுத்தவிருந்த பல புதுமையானத் தமிழ்வளர்ச்சித் திட்டங்களைச் செம்மொழி நிறுவனம் மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களின் உதவியுடன் நாங்கள் ஒவ்வொன்றாக செயல்படுத்த உள்ளோம். தமிழ்மொழிமீது ஆழமானப் பற்றுகொண்ட மூத்த அறிஞர்கள் எங்களுக்கு பலமாக இருக்கின்றனர். உடனடி நிகழ்வாக விரைவில் "வள்ளலார் வளர்த்த தமிழ்" என்ற பொருண்மையில் பன்னாட்டு ஆய்வரங்கம் - இசைநாட்டிய அரங்கம் - பயிலரங்கம் ஆகியவற்றை மாணவர் மாநாடாய் நடத்த உள்ளோம். தேர்வு செய்யப்படும் 300 மாணவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொள்வார்கள். தற்போது, அதற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.   எங்கள் தமிழ்ப் பணி விஐடி வேந்தர், செம்மொழி நிறுவன இயக்குநர் போன்ற பல தமிழ் ஆளுமைகளின் பேராதரவுடன் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்தத் தலைமுறை எங்களிடம் ஒப்படைக்கத் தவறிய தமிழ்மொழியை நாங்கள் அடுத்த தலைமுறைக்கு தூய்மையாக மாற்றி பெரும் சொத்தாக ஒப்படைப்போம் என்று செந்தமிழ்த் திருத்தேர் மாணவ அமைப்பினர் உணர்ச்சிப் பொங்க தெரிவித்தனர். ‎

மூலக்கதை