இரு சிறுவர்கள் குத்தி கொலை முடிதிருத்தும் தொழிலாளி வெறிச்செயல்

தினமலர்  தினமலர்
இரு சிறுவர்கள் குத்தி கொலை முடிதிருத்தும் தொழிலாளி வெறிச்செயல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்


பதாயுன், உத்தர பிரதேசத்தில், முடிதிருத்தும் தொழிலாளி, பக்கத்து வீட்டில் வசித்த இரு சிறுவர்களை கொடூரமாக கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இறுதியில் அவர், போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

உ.பி.,யின் பதாயுன் பகுதியைச் சேர்ந்த வினோத் குமார் - சங்கீதா என்ற தம்பதிக்கு ஆயுஷ், 12, யுவராஜ், 10, அஹான், 8, என, மூன்று மகன்கள் இருந்தனர்.

இவரது வீட்டுக்கு எதிரே, சஜித், 22, என்பவர் முடிதிருத்தும் கடை நடத்தி வந்தார்.

அதிர்ச்சி

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 7:00 மணி அளவில், 5,000 ரூபாய் வேண்டி, வினோத் குமார் வீட்டுக்கு, தன் சகோதரர் ஜாவேத் உடன் சஜித் சென்றார். அப்போது வீட்டில் வினோத் குமார் இல்லை; வெளியூருக்கு சென்றதாகக் கூறப்படுகிறது.

பணத்தை எடுக்க சங்கீதா உள்ளே சென்ற போது, வீட்டின் மாடிக்கு சஜித் மற்றும் ஜாவேத் சென்றனர்.

அப்போது, ஆயுஷ், அஹான் ஆகியோரை மாடிக்கு அழைத்த அவர்கள், மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்திக் கொலை செய்தனர். அவர்களிடம் இருந்து சிறிய காயத்துடன் அதிர்ஷ்டவசமாக யுவராஜ் தப்பினார்.

பணத்தை எடுத்துக் கொண்டு சங்கீதா வந்த போது, சஜித், ஜாவேத் ஆகியோர் மாடியில் இருந்து கத்தியுடன் வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மாடிக்கு சென்று பார்த்த போது ஆயுஷ், அஹான் ஆகியோர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை கண்டு கூச்சலிட்டார்.

சம்பவ இடத்தில் இருந்து, இருசக்கர வாகனத்தில் சஜித் மற்றும் ஜாவேத் தப்பினர். தகவலறிந்த போலீசார், சிறுவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், காயமடைந்த சிறுவன் யுவராஜை மருத்துவமனையில் சேர்த்தனர்.

என்கவுன்டர்

நீண்ட நேர தேடுதலுக்கு பின், சஜித்தை போலீசார் சுற்றி வளைத்தனர். அப்போது அவர், போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதில் ஒரு போலீஸ்காரர் காயமடைந்தார். போலீசார் நடத்திய என்கவுன்டரில், சஜித் சுட்டுக் கொல்லப்பட்டார்.

தப்பியோடிய ஜாவேதை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், சஜித்தின் முடிதிருத்தும் கடையை தீயிட்டு கொளுத்தினர். மேலும், அங்கு அசம்பாவிதங்களை தடுக்க பாதுகாப்பில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

இது தொடர்பாக, வினோத் குமார் கூறியதாவது:

எனக்கும், சஜித் இடையே எந்த பகையும் இல்லை. என் வீட்டுக்கு வந்த அவர், தன் மனைவிக்கு குழந்தை பிறக்க உள்ளதால், செலவுக்காக, 5,000 ரூபாய் தரும்படி, என் மனைவி சங்கீதாவிடம் கேட்டுள்ளார்.

இது குறித்து சங்கீதா என்னிடம் மொபைல் போனில் தெரிவிக்க, பணத்தை கடனாக தரும்படி கூறினேன். பணத்தை எடுத்து வருவதற்குள் அவரும், அவரது சகோதரர் ஜாவேதும் சேர்ந்து, என் இரு மகன்களை கொலை செய்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதன்படி வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். ஒரே குடும்பத்தின் இரு சிறுவர்கள் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

பதாயுன், உத்தர பிரதேசத்தில், முடிதிருத்தும் தொழிலாளி, பக்கத்து வீட்டில் வசித்த இரு சிறுவர்களை கொடூரமாக கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மூலக்கதை