பா.ஜ., - திரிணமுல் காங்கிரஸ் மோதல் மேற்கு வங்க கவர்னர் நேரில் ஆய்வு

  தினமலர்
பா.ஜ.,  திரிணமுல் காங்கிரஸ் மோதல் மேற்கு வங்க கவர்னர் நேரில் ஆய்வு



தின்ஹட்டா, மேற்கு வங்கத்தில், பா.ஜ., மற்றும் ஆளுங்கட்சியான திரிணமுல் காங்கிரஸ் தொண்டர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் போலீசார் உட்பட பலர் காயமடைந்தனர்.

மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது.

இங்கு, கூச்பெஹர் மாவட்டத்தின் தின்ஹட்டாவில் நேற்று முன்தினம் இரவு பா.ஜ., பொதுக்கூட்டம் நடந்தது.

கல்வீச்சு

இதில், மத்திய உள்துறை இணை அமைச்சரும் அத்தொகுதியின் வேட்பாளருமான நிஷித் பிரமானிக் உரையாற்றினார்.

இக்கூட்டம் நடைபெற்ற இடத்தின் அருகிலேயே திரிணமுல் காங்., சார்பில் அம்மாநில அமைச்சர் உதயன் குஹா தலைமையில் பேரணி துவங்க இருந்தது.

அப்போது திடீரென பா.ஜ., மற்றும் திரிணமுல் காங்., தொண்டர்களுக்கு இடையே மோதல் வெடித்தது. ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசி தாக்கிக்கொண்டனர்.

இதன் காரணமாக அப்பகுதி முழுதும் போர்க்களம் போல் காட்சியளித்தது; இத்தாக்குதலில் போலீசார் உட்பட பலர் காயமடைந்தனர்.

இச்சம்பவம் குறித்து மத்திய உள்துறை இணை அமைச்சர் நிஷித் பிரமானிக் கூறுகையில், “எங்கள் கட்சியின் பொதுக்கூட்டம் நிறைவடைந்த பின் புறப்பட தயாரான போது, அருகில் பேரணி செல்ல முயன்ற திரிணமுல் காங்கிரசார், எங்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.

“அதுமட்டுமின்றி என் பாதுகாப்பு வாகனத்தையும் சேதப்படுத்தினர். அமைச்சர் உதயன் குஹா தலைமையில் அவரது கட்சி தொண்டர்கள் தாக்குதலில் ஈடுபட்டனர்,” என்றார்.

அறிக்கை கேட்பு

இக்குற்றச்சாட்டை மறுக்கும் வகையில் பேசிய மாநில அமைச்சர் உதயன் குஹா, “நாங்கள் பேரணி செல்ல தயாரான போது, பா.ஜ.,வினர் எங்கள் கட்சியினர் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.

“இதில் எங்கள் கட்சியினர் பலர் காயம் அடைந்துள்ளனர். மத்திய அமைச்சர் தான் இத்தகைய தாக்குதலை துாண்டினார்,” என்றார்.

இதற்கிடையே, இந்த சம்பவம் தொடர்பாக மேற்கு வங்க கவர்னர் சி.வி.ஆனந்தபோஸ் அறிக்கை அளிக்கும்படி டி.ஜி.பி.,க்கு உத்தரவிட்டு உள்ளார்.

இதேபோல் சம்பவம் நிகழ்ந்த பகுதிக்கும் நேற்று சென்று ஆய்வு நடத்தியதுடன், அப்பகுதி மக்களிடமும் நடந்த விபரங்களை அவர் கேட்டறிந்தார்.

தின்ஹட்டா, மேற்கு வங்கத்தில், பா.ஜ., மற்றும் ஆளுங்கட்சியான திரிணமுல் காங்கிரஸ் தொண்டர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் போலீசார் உட்பட பலர் காயமடைந்தனர்.மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா

மூலக்கதை