சிதம்பரம் நடராஜர் கோவிலில் உழவாரப் பணி ஹிந்து சமய அறநிலையத்துறை ஆய்வு பொது தீட்சிதர்கள் ஆட்சேபனை
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் உழவாரப்பணி குறித்து ஹிந்து சமய அறநிலையத்துறை குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர். இதற்கு கோவில் பொதுதீட்சிதர்கள் ஆட்சேபனை தெரிவித்து கடிதம் அளித்தனர்.
தமிழக அரசு, ஹிந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் உழவாரப் பணி மேற்கொள்வது குறித்து, ஆலோசனை குழு ஏற்படுத்தி, ஆய்வு செய்து வருகிறது.
அதன்படி, கடலுார் மாவட்ட ஹிந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பரணிதரன், உதவி கோட்டப் பொறியாளர் அசோகன், தொல்லியல் துறை வல்லுநர் தண்டபாணி, தாசில்தார் செந்தில்வேல், ஸ்தபதி சரவணன் ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆய்வு மேற்கொண்டனர்.
கோவில் வெளிப்பிரகாரம், உள்பிரகாரம், கோபுரங்கள் மற்றும் கோசாலை உள்ளிட்ட பகுதிகளை ஆய்வு செய்தனர். இதையொட்டி, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
தீட்சிதர்கள் ஆட்சேபனை
இந்த ஆய்விற்கு ஆட்சேபனை தெரிவித்து, பொதுதீட்சிதர்களின் செயலாளர் சிவராம தீட்சிதர், இணை ஆணையர் பரணிதரனிடம் கடிதம் அளித்தார்.
அதில், கடந்த இரண்டு ஆண்டுகளாக ஹிந்து சமய அறநிலைத்துறை, கோவில் நிர்வாகத்திற்கும், பக்தர்களின் அமைதியான தரிசனத்திற்கும் இடையூறு செய்யும் வகையில், கோவில் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ளதாக காண்பிப்பதற்கு ஒரு பொய்யான பிம்பத்தை ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து சட்ட விரோதமாக அரசியல் சாசனத்திற்கு மாறாக செயல்பட்டு வருகின்றனர்.
எந்த அறிவிப்பும் இல்லாமல் தங்கள் கட்டுப்பாட்டில் இல்லாத சிதம்பரம் சபாநாயகர் கோவிலில் உழவாரப்பணி நடக்கும் என்று தெரிவிப்பது கண்டனத்துக்குரியது. பொது தீட்சிதர்கள் நிர்வாகத்தில் இருக்கும் கோவிலில் உழவாரப்பணி சம்பந்தமாக ஆய்வு செய்வது உள்நோக்கம் கொண்டது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் இச்செயலுக்கு பொது தீட்சிதர்கள் சார்பில் வலுவான ஆட்சேபனை செய்யப்படுகிறது.
இவ்வாறு கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் உழவாரப்பணி குறித்து ஹிந்து சமய அறநிலையத்துறை குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர். இதற்கு கோவில் பொதுதீட்சிதர்கள் ஆட்சேபனை தெரிவித்து கடிதம்