ரூ.13 கோடியில் கொம்மந்தான்மேடு படுகை அணைக்கு... தடுப்பு சுவர்; கட்டுமான பணியை 9 மாதத்தில் முடிக்க கெடு

தினமலர்  தினமலர்
ரூ.13 கோடியில் கொம்மந்தான்மேடு படுகை அணைக்கு... தடுப்பு சுவர்; கட்டுமான பணியை 9 மாதத்தில் முடிக்க கெடு

புதுச்சேரி : பாகூர் கொம்மந்தான்மேடு படுகை அணை கரையோரத்தை பலப்படுத்தி, ரூ.13 கோடியில் கான்கிரீட் தடுப்பு சுவர் அமைக்க பொதுப்பணித்துறை டெண்டர் விட்டுள்ளது.

புதுச்சேரி பகுதியைச் சேர்ந்த கொம்மந்தான்மேடு, ஆராய்ச்சிக்குப்பம், பரிக்கல்பட்டு, பாகூர் மற்றும் அதை சார்ந்த கிராம மக்கள் கல்வி, மருத்துவம் மற்றும் அன்றாட பணிகளுக்காக கடலுார் நகரத்தை சார்ந்து உள்ளனர்.

இதனால் பாகூர் அடுத்துள்ள கொம்மந்தான்மேடு கிராமத்தில் தென்பெண்ணையாற்றின் குறுக்கே புதுச்சேரி - தமிழக பகுதியை இணைக்கும் வகையில், கடந்த 2010ம் ஆண்டு, தரைப்பாலத்துடன் கூடிய படுகை அணையை ரூ.5 கோடி மதிப்பில் புதுச்சேரி அரசு கட்டியது.

படுகை அணையில் 1.2 மீட்டர் ஆழத்திற்கு, 2 கி.மீ., வரை தண்ணீர் தேக்கி வைக்க முடியும். இதனால் பாகூர் சுற்றுவட்டார பகுதியின் நிலத்தடிநீர் மட்டும் வெகுவாக உயர்ந்தது. மேலும் இருமாநில மக்கள் போக்குவரத்திற்கும் படுகை அணை பயன் அளித்து வந்தது.

கடந்த 2017ம் ஆண்டு ஆற்றில் ஏற்பட்ட வெள்ள பெருக்கால், அணையின் தற்காலிக இணைப்பு சாலை நீரில் அடித்து செல்லப்பட்டு, தரைப்பாலம் விரிசல் ஏற்பட்டு இரண்டு துண்டாக உடைந்தது.

கடந்த கடந்த 2018ம் ஆண்டு ரூ. 4.11 கோடி ஒதுக்கி அணை சீரமைக்கப்பட்டு, தார் சாலையுடன் இணைக்கப்பட்டது.

கடந்த 2020ம் ஆண்டு ஏற்பட்ட பெரும் வெள்ள பெருக்கில், அணையின் இரு கரைகளும் அடித்து செல்லப்பட்டது.

குறிப்பாக, படுகை அணையின் வடக்கு பகுதியான கொம்மந்தான்மேடு கரை பகுதி, இணைப்பு சாலை 50 மீட்டர் துாரத்திற்கு நீரில் அடித்து செல்லப்பட்டது. மேலும் வெள்ள நீர் கொம்மந்தான்மேடு, பாகூர் கிராமப்பகுதிக்குள் புகுந்து வெள்ளக்காடாக மாறியது.

படுகை அணையின் தென் பகுதியான கடலுார் பக்கம் உள்ள கரை பகுதி, கடலுார் மாவட்ட நிர்வாகம் சார்பில் பலப்படுத்தப்பட்டது. வடக்கு பகுதியான கொம்மந்தான்மேடு பகுதியில் தற்காலிகமாக மண் கொட்டி சரிசெய்யப்பட்டது. இப்படி ஒவ்வொரு மழைக்கும் கரை அடித்து செல்வது வாடிக்கையாக மாறியது.

இதனால் கொம்மந்தான்மேடு கரை பகுதியை பலப்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதை ஏற்று கொம்மந்தான்மேடு கரை பகுதியை பலப்படுத்த ரூ. 13 கோடி மதிப்பில் பொதுப்பணித்துறை நீர்பாசன பிரிவு திட்டம் தயாரித்தது.

கொம்மந்தான்மேடு கரையோரம் 200 மீட்டர் நீளத்திற்கு, 3.5 மீட்டர் உயர கான்கீரிட் தடுப்பு சுவர் அமைக்கவும், 200 மீட்டர் துாரம் கொண்ட படுக்கை அணையை கான்கீரிட் மூலம் வலுப்படுத்த திட்டமிடப்பட்டது.

இதன் மூலம் அணையில் இருந்து வெளியேறி கடலில் கலக்கும் தண்ணீரை தடுக்க முடியும்.

கரையோர தடுப்பு சுவர் அமைக்கும் பணிக்கான டெண்டர் பொதுப்பணித்துறை இணையதளம் மூலம் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

டெண்டர் எடுக்கும் கட்டுமான நிறுவனம், 9 மாதத்திற்குள் படுக்கை அணையை முழுமையாக வலுப்படுத்தி, கொம்மந்தான்மேடு கரையோர கான்ரீட் தடுப்பு சுவர் கட்டும் பணியை முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புதுச்சேரி : பாகூர் கொம்மந்தான்மேடு படுகை அணை கரையோரத்தை பலப்படுத்தி, ரூ.13 கோடியில் கான்கிரீட் தடுப்பு சுவர் அமைக்க பொதுப்பணித்துறை டெண்டர் விட்டுள்ளது. புதுச்சேரி பகுதியைச்

மூலக்கதை