ஆகாயத்தாமரை, கருவேல மரங்களால் நீரை சேமிக்க முடியாமல் சிரமம் கம்பத்தில் கழிவுநீர், குப்பையால் மாசுபடும் மூன்று கண்மாய்கள்
கம்பம்: கம்பம் வீரப்ப நாயக்கன் குளம், ஒட்டு, ஒடப்படி குளங்களில் ஆகாயத்தாமரை, கருவேல மரங்கள் வளர்ந்து குறுங்காடுகளாக மாறி வருவதால் நீரை தேக்க முடியாமல் விவசாயிகள் சிரமம் அடைகின்றனர்.
கம்பத்தில் வீரப்ப நாயக்கன்குளம், ஒட்டு, உடப்படி குளங்கள் நகரை ஒட்டி அமைந்துள்ளது. இக் குளங்கள் 100ஏக்கருக்கு மேல் பரிந்து விரிந்து பாசனத்திற்கு பெரிதும் பயன்பாடாக உள்ளன.
மூன்று குளங்களும் ஒரே இடத்தில் உள்ளதால் மைய பகுதியில் கரை போடப்பட்டுள்ளது. இந்த கண்மாய் இப்பகுதியில் உள்ள 600 ஏக்கர் பரப்பிற்கு இருபோக நெல் சாகுபடிக்கு கண்மாய் பாசன வசதி வழங்குகிறது. கம்பம், நாராயணத்தேவன்பட்டி, சுருளிப்பட்டி, காமயகவுண்டன்பட்டி, அண்ணாபுரம் உள்ளிட்ட பல கிராமங்களுக்கு நிலத்தடி நீர்மட்டம் உயர பெரிதும் துணை புரிகிறது. கோடைகாலங்களில் கால்நடைகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்கிறது. மற்ற கண்மாய்களை போல இக் கண்மாய்களில் ஆக்கிரமிப்பில் அதிகம் சிக்கவில்லை.
அதற்கு மாறாக கம்பம் நகரின் ஒட்டுமொத்த சாக்கடை கழிவு நீர்,செப்டிக் டேங்க் கழிவு நீர், பிளாஸ்டிக், பாலிதீன் குப்பை,பாட்டில்கள் என அனைத்தும் சேகரமாகும் குப்பை கிடங்காக மாறி விட்டது.
10 ஆண்டுகளாக கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து தற்போது, இந்த குளங்கள் சாக்கடை கழிவு நீர் தேங்கி நிற்கும் பெரிய கிடங்காகவே மாறி விட்டது.
மேலும் கண்மாய் தூர் வாரி 10 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. இதனால் ஆகாயத்தாமரை படர்ந்து கண்மாய் தெரியாத அளவிற்கு மறைத்துள்ளது. பல பகுதி மண்மேவி மேடாக உள்ளது. இதனால் கண்மாயில் முழு கொள்ளளவில் தண்ணீர் தேங்காததால் பாசனத்திற்கு சிக்கல் ஏற்படுகிறது.
கழிவுநீர் கலக்காமல் தடுக்க வேண்டும்
துரை ராஜேந்திரன், சமூக ஆர்வலர், கம்பம் : கண்மாயில் வளர்ந்துள்ள ஆகாயத்தாமரைகளை அகற்றி துார்வார வேண்டும். அப்போதுதான் விவசாயத்திற்கு தேவையான நீரை தேக்க முடியும்.
கண்மாயில் கழிவுநீர் தேங்கியுள்ளதால் துர்நாற்றம் வீசுகிறது. விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கண்மாய் கழிவுகள் கலக்காத வகையில் பராமரிப்பு செய்ய வேண்டும்.
சுத்திகரிப்பு பணி மீண்டும் துவக்க வேண்டும்
காந்த வாசன் , விவசாயி, கம்பம் : விவசாயத்திற்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும்போது, இந்த கண்மாய் பெரிதும் கை கொடுக்கிறது.
ஆகாயத்தாமரை முழுவதும் படர்ந்து கண்மாயை தேட வேண்டிய நிலை உள்ளது. நகரில் சேகரமாகும் சாக்கடை கழிவு நீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை வேண்டும்.
பாட்டில்கள், பாலிதீன் அதிக அளவு கண்மாய்க்குள் சேர்ந்து மாசுபடுத்துகிறது. கழிவு நீரை சுத்திகரிப்பு பணியை துவக்கி பாதியில் நிறுத்தி விட்டனர். அந்த பணிகள் மீண்டும் நடைபெற வேண்டும். இது நீண்ட கால பிரச்னையாகும். நகராட்சியால் மட்டும் செய்ய முடியாது. அதிக அளவில் நிதி தேவைப்படும். எனவே அரசு சிறப்பு நிதியை ஒதுக்கி இப்பணியை மேற்கொள்ள வேண்டும்.
கம்பம்: கம்பம் வீரப்ப நாயக்கன் குளம், ஒட்டு, ஒடப்படி குளங்களில் ஆகாயத்தாமரை, கருவேல மரங்கள் வளர்ந்து குறுங்காடுகளாக மாறி வருவதால் நீரை தேக்க முடியாமல் விவசாயிகள் சிரமம்