கவர்னர் உரையை கவர்னரே புறக்கணிப்பு...

தினமலர்  தினமலர்
கவர்னர் உரையை கவர்னரே புறக்கணிப்பு...

சென்னை: கவர்னர் உரையை கவர்னரே வாசிக்காமல் புறக்கணித்த சம்பவம், தமிழக சட்டசபை வரலாற்றில் முதல் முறையாக நேற்று நடந்துள்ளது. கவர்னர் பேச்சும், சபாநாயகர் பேச்சும் சபை குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட நிகழ்வும் இதுவே முதல் தடவை.

கவர்னர் உரை என்பது அரசே தயாரிக்கும் தகவல் தொகுப்பு. அரசின் சாதனைகளும், அடுத்து செயல்படுத்த இருக்கும் பெரிய திட்டங்களும், அதில் குறிப்பிடப்படும். ஒவ்வொரு ஆண்டும் சட்டசபையின் முதலாவது கூட்டத்தொடர் துவங்கும் போது, அரசின் உரையை கவர்னர் வாசிப்பது மரபு.

விமர்சனங்கள்



கடந்த ஆண்டு, அரசு தயாரித்து தந்த உரையில் சிலவற்றை சேர்த்தும், பலவற்றை நீக்கியும் வாசித்தார் கவர்னர் ரவி. ஏற்றுக் கொள்ள முடியாத தகவல்களும் விமர்சனங்களும் இருந்ததால், அவற்றை நீக்கியதாக ரவி விளக்கம் அளித்தார்.

ஆனால், அதிர்ச்சி அடைந்த அரசு, அவசரமாக தீர்மானம் கொண்டு வந்து, கவர்னர் தன்னிச்சையாக பேசிய கருத்துக்கள் சபை குறிப்பில் இடம்பெறாது; அரசு தயாரித்து அளித்த உரையே சபையில் வாசிக்கப்பட்டதாக கருதப்படும் என்று அறிவித்தது.

அதனால், அப்செட் ஆன கவர்னர், சபை நிகழ்ச்சி முடியும் முன் வெளியேறினார். இது, 2023 ஜனவரி 9ல் சட்டசபை சந்தித்த நிகழ்வு.

இந்த ஆண்டு நிகழ்வு அதை மிஞ்சிவிட்டது. அதற்கான அறிகுறி ஏதும் முதலில் தென்படவில்லை. உரையாற்ற வந்த கவர்னர் ரவிக்கு, போலீசார் அணிவகுப்பு மரியாதை அளித்தனர்.

சபாநாயகர் அப்பாவு, சபை செயலர் சீனிவாசன் ஆகியோர் கவர்னரை சபைக்குள் அழைத்து வந்தனர்.

இரு பக்கமும் அமர்ந்திருந்த உறுப்பினர்களுக்கு வணக்கம் தெரிவித்தபடி வந்து, சபாநாயகரின் இருக்கை அருகே அமைத்திருந்த தனக்கான இருக்கையில் அமர்ந்தார் கவர்னர். தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.

முடிந்ததும், கவர்னர் அனைவருக்கும் தமிழில் வணக்கமும் புத்தாண்டு வாழ்த்தும் தெரிவித்து விட்டு, ஆங்கிலத்தில் உரையை வாசிக்க துவங்கினார்.

வெளியேறினார்



முதல் பக்கத்தில் உள்ளதை படித்து விட்டு, சில கருத்துக்களை தெரிவித்தார். பின், 'வாழ்க தமிழ்நாடு; வாழ்க பாரதம்; ஜெய்ஹிந்த்; ஜெய் பாரத்; நன்றி' என்று கூறிவிட்டு, இருக்கையில் அமர்ந்தார்.

உடனே சபாநாயகர் அப்பாவு எழுந்து, கவர்னர் உரையின் தமிழாக்கத்தை முழுதும் வாசித்தார். உரை முடிந்ததும், உரையில் இடம் பெறாத விஷயங்களை சொன்ன கவர்னரின் பேச்சு, சபை குறிப்பில் ஏறாது என்றும் அறிவித்தார்.

அதோடு நில்லாமல், மத்திய அரசு பற்றியும், கவர்னர் பற்றியும், சில காட்டமான கருத்துக்களை சபாநாயகர் கூறினார். அதை கேட்ட உடனே கவர்னர் எழுந்து சபையை விட்டு வேகமாக வெளியேறினார். அனைத்தும் ஒரு மணி நேரத்துக்குள் நடந்து முடிந்தன.

சபாநாயகர் பேசி முடித்ததும், சபை முன்னவர் துரைமுருகன் எழுந்து, 'சட்டசபை விதி 17ஐ தளர்த்தி, இந்த சபையில் வழங்கப்பட்ட உரை அப்படியே வாசிக்கப்பட்டதாக சபை குறிப்பில் பதிவேற்ற வேண்டும்' என்ற தீர்மானத்தை முன்மொழிந்தார்.

தீர்மானம்



குரல் ஓட்டு வாயிலாக அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதை வழிமொழிவது போல சபாநாயகரும், அச்சிட்டு வழங்கப்பட்ட உரை தவிர, வேறு எந்த பேச்சும் கருத்தும் சபை குறிப்பில் ஏறாது என்று அறிவித்தார்.

இதன் விளைவாக கவர்னரின் கருத்து மட்டுமின்றி, அதற்கு பதிலடி போல அமைந்த சபாநாயகரின் கருத்துக்களும் சபை குறிப்பில் இடம் பெறாமல் தடுக்கப்பட்டது.
பின், தேசிய கீதம் இசைக்கப்பட்டது; சபை கலைந்தது.

கவர்னர் மாளிகை வெளியிட்ட அறிக்கை: கடந்த 9ம் தேதி அரசிடமிருந்து கவர்னரின் வரைவு உரை வந்தது. அதில் உண்மைக்கு மாறான தகவல்கள், பல பத்தி களில் இடம் பெற்றிருந்தன. கவர்னர் உரை என்பது, அரசின் சாதனைகள், கொள்கைகள் மற்றும் திட்டங்களை பிரதிபலிக்க வேண்டும். அதை விடுத்து, உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பவும், பாகுபாடான அரசியல் கருத்துக்களை தெரிவிக்கவும் கவர்னர் உரையை பயன்படுத்தக்கூடாது என தெரிவித்து, அரசு அனுப்பிய உரையை கவர்னர் திருப்பி அனுப்பினார்.

அதோடு, தேசிய கீதத்திற்கு உரிய மரியாதை செலுத்தும் வகையில், கவர்னர் உரை துவங்கும் போதும், முடியும் போதும் தேசிய கீதம் இசைக்க வேண்டும் என்றும், முதல்வர் மற்றும் சபாநாயகருக்கு கடந்த காலங்களில் கடிதம் எழுதி இருந்ததை இப்போதும் கவர்னர் வலியுறுத்தினார்.

இவ்விரு விஷயங்கள் குறித்த கவர்னரின் அறிவுரையை, தமிழக அரசு உதாசீனம் செய்து விட்டது. நேற்று கவர்னர் பேசும் போது சபாநாயகர், முதல்வர், உறுப்பினர்கள் மற்றும் தமிழக மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். கவர்னர் உரையில் முதல் பத்தியை படித்தார்; அதில், திருக்குறள் அடங்கி இருந்தது. அதன்பின், கவர்னர் உரையில் உண்மைக்கு புறம்பான தகவல்கள், பல பத்திகளில் இடம் பெற்றிருந்ததை அப்படியே வாசிப்பது அரசியலமைப்பை கேலிக்குரியதாக்கி விடும் என்ற காரணத்தால், உரையை முழுமையாக வாசிக்க இயலாது என்று கவர்னர் தெரிவித்தார்.

எனினும், சபைக்கு தன் மரியாதையை தெரிவித்து, தமிழக மக்களுக்கு இந்த கூட்டத் தொடர் பயனுள்ளதாக அமைய வேண்டும் என வாழ்த்தி உரையை முடித்தார். அதன்பின், உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் வாசித்து முடிக்கும்வரை கவர்னர் அமர்ந்திருந்தார். சபாநாயகர் வாசித்து முடித்ததும், நிகழ்ச்சி நிரலில் திட்டமிட்டிருந்தபடி, தேசிய கீதம் இசைக்கப்படும் என்று எதிர்பார்த்து கவர்னர் எழுந்து நின்றார்.

ஆனால், தேசிய கீதம் இசைப்பதற்கு பதிலாக, கவர்னருக்கு எதிராக கருத்துக்களை சபாநாயகர் பேசினார். அதோடு, நாதுராம் கோட்சேவை பின்பற்றுபவர் கவர்னர் என்றும் சபாநாயகர் ஒரு கருத்தை சொன்னார். இந்த பேச்சு மற்றும் செயலால், சபாநாயகர் தன் பதவிக்குரிய கண்ணியத்தையும், சபையின் மாண்பையும் குறைத்து விட்டார்.கவர்னருக்கு எதிராக சபாநாயகர் தன் நீண்ட விமர்சனத்தை வெளிப்படுத்திய நிலையில், கவர்னர் தன் பதவியின் கண்ணியத்தையும், சபையின் கண்ணியத்தையும் கருத்தில் கொண்டு சபையை விட்டு வெளியேறினார்.இவ்வாறு ராஜ்பவன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சென்னை: கவர்னர் உரையை கவர்னரே வாசிக்காமல் புறக்கணித்த சம்பவம், தமிழக சட்டசபை வரலாற்றில் முதல் முறையாக நேற்று நடந்துள்ளது. கவர்னர் பேச்சும், சபாநாயகர் பேச்சும் சபை குறிப்பில் இருந்து

மூலக்கதை