விண்ணப்பித்து 20 ஆண்டுகளாகியும் மின் இணைப்பு வழங்கவில்லை மேலுார் விவசாயி ஆதங்கம்
மேலுார்: 'விண்ணப்பித்து 20 ஆண்டுகளாகியும் மின்இணைப்பு கிடைக்காததால்' மேலுார் விவசாயிகள் மின்வாரியத்துறை மீது குற்றம் சுமத்துகின்றனர்.
மேலுார் தாலுகாவில் விவசாயத்திற்கு 5 எச்.பி., திறனுள்ள மோட்டாருக்கான இலவச மின்சாரத்திற்கு நுாற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் விண்ணப்பித்துள்ளனர். மின் இணைப்புக்கு மனு செய்து 20 ஆண்டுகளாக காத்திருப்போருக்கு வழங்காமல் அதன் பிறகு மனு செய்தவர்களுக்கு மின் இணைப்பு கொடுத்துள்ளனர் என்பது விவசாயிகள் குற்றச்சாட்டு.
எட்டிமங்கலம் விவசாயி சுப்பையா கூறியதாவது: 2004 ம் ஆண்டு ஆழ்குழாய் அமைத்து தேவையான ஆவணங்களை மின்வாரிய அலுவலகத்தில் கொடுத்துள்ளேன். 2023 ல் மின்வாரியத்துறையினர் அனுப்பிய கடிதத்தில் ஓரிரு நாளில் தருவதாக பதில் தந்தனர். பின்னர் மின்கம்பங்களை ஊன்றினர். இதுவரை மின் இணைப்பு வழங்கவில்லை.
மீண்டும் 2024, பிப்ரவரியில் அனுப்பிய கடிதத்தில் வரிசை மூப்பின் அடிப்படையில் வழங்கப்படும் என முன்னுக்கு பின் முரணாக கூறுகின்றனர்.
ஆனால் 2010ம் ஆண்டு விண்ணப்பித்தவர்களுக்கு எப்படி மின் இணைப்பு கொடுக்கப்பட்டது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரியவந்தது. அதனால் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். அதில் கடந்த மாதம் வழங்கிய தீர்ப்பில் எனக்கு முன்னுரிமை கொடுத்து இணைப்பு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இருந்தும் அதிகாரிகள் காலம் கடத்தி வருகின்றனர் என்றார்.
மின்வாரியத்துறையினர் கூறுகையில், ''தமிழக அரசு இலவச மின்சாரம் வழங்க உத்தரவிட்டதும் வழங்கப்படும்'' என்றனர்.
மேலுார்: 'விண்ணப்பித்து 20 ஆண்டுகளாகியும் மின்இணைப்பு கிடைக்காததால்' மேலுார் விவசாயிகள் மின்வாரியத்துறை மீது குற்றம் சுமத்துகின்றனர்.மேலுார் தாலுகாவில் விவசாயத்திற்கு 5 எச்.பி.,