போதை காளான் விபரீதம்; கல்லூரி மாணவி மரணம்

தினமலர்  தினமலர்
போதை காளான் விபரீதம்; கல்லூரி மாணவி மரணம்

நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகே பாம்பேகேசில் 20 வயது வாலிபர், கேத்தி தனியார் கல்லுாரியில் இன்ஜினியரிங் படிக்கிறார். ஊட்டி, பிங்கர்போஸ்ட் பகுதி, 19 வயது மாணவி, கோவை தனியார் கல்லுாரியில் நர்சிங் முதலாம் ஆண்டு படித்தார். இருவரும் பள்ளி நண்பர்கள். சில ஆண்டுகளாக காதலித்தனர்.

வார விடுமுறையை ஒட்டி, 10ம் தேதி மாணவியை தன் வீட்டுக்கு மாணவர் அழைத்து வந்துள்ளார். இருவரும் மது அருந்தி உள்ளனர். பின், மாணவர் கொண்டு வந்த போதை காளானை இருவரும் உட்கொண்டுள்ளனர். போதை அதிகமாகி மாணவி மூச்சுத்திணறி இறந்துள்ளார்.

போதை தெளிந்த பின், மாணவி இறந்து கிடப்பதை பார்த்த மாணவர், 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்துள்ளார். மருத்துவ ஊழியர்கள் பரிசோதித்ததில் மாணவி ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. போலீசார் சோதனையிட்டதில், மதுபாட்டில்கள், போதை காளான்கள் சிக்கின. தொடர்ந்து, அந்த மாணவர் கைது செய்யப்பட்டார். விசாரணை நடந்து வருகிறது.

ரூ.125 கோடி மோசடி செய்த ஏஜன்ட் கைது

மதுரை எஸ்.எஸ்.காலனியில் இயங்கிய நியோமேக்ஸ் நிதி நிறுவனம் மக்களிடம் பல கோடி ரூபாய் முதலீடு பெற்று மோசடி செய்தது. இதன் இயக்குனர்கள் வீரசக்தி, கமலக்கண்ணன், பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அதன், 17 நிறுவனங்களுக்கு, 'சீல்' வைக்கப்பட்டு, 17.25 கோடி ரூபாய் மதிப்பிலான 752 வங்கி பரிவர்த்தனைகள் முடக்கப்பட்டன.

இந்நிலையில், விருதுநகரில் செயல்பட்டு வந்த இதன் துணை நிறுவனமான குளோமேக்ஸின் ஏஜன்ட் தியாகராஜன், 36, என்பவரை மதுரை பொருளாதார குற்றப்பிரிவு டி.எஸ்.பி., மணீஷா தலைமையிலான போலீசார் நேற்று கைது செய்தனர். இவர், 500 - 600 பேரிடம், 125 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளார். பணத்தை திரும்ப கேட்ட முதலீட்டாளர்களிடம், மனைகள் வாங்கி தருவதாக கூறி மேலும் பணம் பெற்று தியாகராஜன் மோசடி செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.

சிக்கன் சாப்பிட்ட சிறுமி பலி; குடும்பத்தினருக்கு சிகிச்சை

அரியலுார் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள கூழாட்டுக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ், 45; அரசு பஸ் டிரைவர். இவரது மனைவி அன்பரசி, 38. தம்பதிக்கு துவாரகா, 15, இலக்கியா, 12, ஆகிய இரண்டு மகள்கள் இருந்தனர். கடந்த 10ம் தேதி வீட்டில் கோழிக்கறி சமைத்துள்ளனர். அன்று மீதமான சிக்கன் குழம்பை அடுத்த நாள் காலையில் அனைவரும் சாப்பிட்டனர். இதில், அனைவருக்கும் ஒவ்வாமை ஏற்பட்டு வாந்தி, வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டனர்.

நான்கு பேரும் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி இலக்கியா நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். மற்ற மூவரும் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். ஜெயங்கொண்டம் போலீசார் விசாரிக்கின்றனர். குடும்பத்தில் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதால், சிறுமியின் சடலத்தை வாங்க ஆள் இல்லாத பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.

தாய், மகள்கள் தற்கொலைக்கு ஆன்லைன் மோசடி காரணம்

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தை சேர்ந்த தனியார் வங்கி ஊழியர் ஆர்த்தி, 40, மகள்கள் ஆரூத்ரா, 11, சுபத்ரா, 7, ஆகியோருடன் நேற்று முன்தினம் கண்களை கட்டியபடி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். கும்பகோணம் ரயில்வே போலீசார் விசாரித்தனர்.

விசாரணையில், ஆர்த்திக்கு சில மாதங்களுக்கு முன் ஆன்லைனில் முதலீடு செய்தால், இரட்டிப்பு லாபம் தருவதாக வாட்ஸாப் குறுஞ்செய்தி வந்துள்ளது. அவர், தன் நகைகளை விற்று, மர்ம நபர்கள் கூறிய வங்கி கணக்கிற்கு பல்வேறு தவணையாக, 30 லட்சம் ரூபாய் வரை செலுத்தியுள்ளார். பின், மர்ம நபர்களை தொடர்பு கொள்ள முடியாத சூழலில், தான் ஏமாற்றப்பட்டத்தை உணர்ந்தார்.

தஞ்சாவூரில் புகார் அளித்தால் வீட்டில் உள்ளவர்களுக்கு தெரிந்து விடும் என்பதால், தன் சொந்த ஊரான திருவள்ளூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் ஜன., 24ல் புகார் அளித்துள்ளார். கணவருக்கும், உறவினருக்கும் தெரிந்தால் அவமானமாகி விடும் எனவும், தான் இறந்து விட்டால் பெண் பிள்ளைகள் தவிக்கும் என்றும் கருதி, ஆர்த்தி தற்கொலை செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

கார் பம்பரில் சிக்கி சிறுவன் பலி

கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழி அருகே தெற்கு பால் கிணற்றான் விளையைச் சேர்ந்தவர் கோபி 39. பெயிண்ட் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் மனைவி லேகா 30, மூன்று குழந்தைகளுடன் காரில் செம்பன்கரை பகுதியில் சென்றபோது அவ்வழியே சென்ற டூவீலர் மீது மோதியதில் கார் பம்பரில் டூவீலரும் சிறுவனும் சிக்கி உள்ளனர். கார் பம்பரில் டூவீலருடன் சிறுவன் சிக்கியிருப்பது தெரியாமல் 2 கி.மீ., துாரம் ஓட்டிய வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.

ஏட்டுக்கு அடி, உதை: எம்.எல்.ஏ., மகன் அராஜகம்

கர்நாடகாவில், மணல் கடத்தலை தடுக்க முயன்ற ஏட்டு மீது தாக்குதல் நடத்தியதாக, ம.ஜ.த., - எம்.எல்.ஏ., கரெம்மாவின் மகன் உட்பட 10 பேர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பாரில் துப்பாக்கிச்சூடு; மூவர் காயம்

கேரளாவின் கொச்சியில் உள்ள கத்திரிகடவு பகுதியில் மதுபான விடுதி இயங்கி வருகிறது-. இங்கு நேற்று முன்தினம் இரவு மது அருந்த வந்த சிலர், நுழைவாயிலில் நின்று தகராறில் ஈடுபட்டனர். அப்போது, அதை தட்டிக் கேட்ட மேனேஜரை அவர்கள் திடீரென தாக்கினர். இது குறித்து கேள்வி எழுப்பிய பார் ஊழியர்கள் சுஜின், அகில் ஆகியோரையும் தகராறு செய்தவர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. அதன் முடிவில், தகராறில் ஈடுபட்டவர்களில் ஒருவர் தன்னிடம் இருந்த துப்பாக்கியால் பார் ஊழியர்களை நோக்கி சரமாரியாக சுட்டார்.

இதில், சுஜின், அகில் ஆகியோரின் வயிறு மற்றும் தொடைகளில் காயம் ஏற்பட்டது. அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மூன்று பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், தப்பியோடிய நான்கு பேர் மீது கொலை வழக்கு உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தப்பி ஓடியவர்களை தேடி வரும் போலீசார், அவர்கள் பயன்படுத்திய காரை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகே பாம்பேகேசில் 20 வயது வாலிபர், கேத்தி தனியார் கல்லுாரியில் இன்ஜினியரிங் படிக்கிறார். ஊட்டி, பிங்கர்போஸ்ட் பகுதி, 19 வயது மாணவி, கோவை தனியார் கல்லுாரியில்

மூலக்கதை