இது உங்கள் இடம்: அவலத்துக்கு முற்றும் போட்ட இ.பி.எஸ்.,!

பொன்மணி ஜெயராஜ், செங்கோட்டை, தென்காசி மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
'தீயசக்தி தி.மு.க.,வுடன் நாங்கள் எப்படி பயணிக்க முடியாதோ, அதுபோல துரோக சக்தியான இ.பி.எஸ்., உடனும் நானோ, அ.ம.மு.க., தொண்டர்களோ பயணிக்க மாட்டோம். எக்காலத்திலும் அவருடன் இணைந்து செயல்பட மாட்டோம். துரோகத்தினாலேயே இ.பி.எஸ்., அரசியலில் வீழ்வார்' என்று அ.ம.மு.க, பொதுச் செயலர் தினகரன் கூறியுள்ளார்.
பெரியவர்கள் காலில் விழுந்து வணங்குவது நம் கலாசாரம்; அதில் தவறில்லை. அதே போல், ஆன்மிகவாதிகள், சாதனை புரிந்தோர், மகத்தான சேவை செய்தோர், வயதில் குறைந்தோராக இருந்தாலும், அவர்களின் காலில் விழுந்து வணங்குவதும் தவறல்ல. ஆனால், சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, பதவிக்காக ஜெ., காலில் விழும் கலாசாரம் அ.தி.மு.க.,வில் அதிகமாக இருந்தது. வயது வித்தியாசம் இன்றி எல்லா தலைவர்களும், அமைச்சர்களும் ஜெ., காலடியில் விழுந்தே கிடந்தனர்.
தலைவியை வரவேற்க நேராக கூட நிற்காமல், கூன் விழுந்தவர்கள் போல் வளைந்து, குனிந்து தான் நிற்பர்; அவ்வளவு பணிவு. அவர்களின் செயல் கண்டு, தலைகுனிந்த தமிழர்கள் அதிகம். இவ்வளவு ஏன், ஜெ., பயணித்த காரின் டயரை தொட்டு கும்பிட்டவர்களும் உண்டு.
அவரின் மறைவுக்கு பின், அந்த கலாசாரமும் மறையும் என்று நினைத்தேன்; ஆனால், அவரது தோழி சசிகலா காலிலும் எல்லாரும் விழ ஆரம்பித்து விட்டனர். அதிலும் இ.பி.எஸ்.,, முதல்வர் பதவிக்காக தவழ்ந்து சென்று சசிகலாவின் காலில் விழுந்த காட்சிகள், இன்றும் சமூக வலைதளங்களில் வலம் வருகின்றன.இருப்பினும், தனக்கு முதல்வர் பதவி கிடைக்க காரணமான சசிகலாவையே, கட்சியை விட்டு நீக்கிய இ.பி.எஸ்.,ன் செயலை பன்னீர்செல்வம், தினகரன் போன்ற சிலர், நம்பிக்கை துரோகம் என்கின்றனர்.
ஆனால், அவர் அப்படி செய்திருக்கா விட்டால் அ.தி.மு.க., பெருந்தலைகள் இன்றும் சசிகலாவின் காலில் வீழ்ந்தும், அவருக்கு அடிமையாக வளைந்தும் வாழ வேண்டிய அவல நிலை தொடரும். அதில், பன்னீர்செல்வம் முதல் ஆளாக இருந்திருப்பார் என்பது மறுக்க முடியாத உண்மை.
பொன்மணி ஜெயராஜ், செங்கோட்டை, தென்காசி மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'தீயசக்தி தி.மு.க.,வுடன் நாங்கள் எப்படி பயணிக்க முடியாதோ, அதுபோல துரோக சக்தியான
மூலக்கதை
