கடல்நீரை குடிநீராக்கும் நெம்மேலி 2வது ஆலை 4 நாளில் திறப்பு; 9 லட்சம் பேருக்கு வினியோகிக்க முடியும் என தகவல்

தினமலர்  தினமலர்
கடல்நீரை குடிநீராக்கும் நெம்மேலி 2வது ஆலை 4 நாளில் திறப்பு; 9 லட்சம் பேருக்கு வினியோகிக்க முடியும் என தகவல்

சென்னை அடுத்த நெம்மேலியில், 1,516 கோடி ரூபாயில் அமைக்கப்பட்ட கடல்நீரை குடிநீராக்கும் இரண்டாவது ஆலை, வரும் 16ம் தேதிக்குள், முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். இந்த ஆலையில், தென்சென்னை பகுதிகளில் 9 லட்சம் பேருக்கு குடிநீர் வினியோகிக்க முடியும் என, அதிகாரிகள் கூறினர்.

சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில், குழாய் மற்றும் லாரி வழியாக குடிநீர் வினியோகம் செய்ய, சென்னை குடிநீர் வாரியத்திற்கு தினமும், 110 கோடி லிட்டர் குடிநீர் தேவைப்படுகிறது. தற்போது, 100 கோடி லிட்டர் வினியோகம் செய்யப்படுகிறது.

நெம்மேலி- - 1 கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தில், 10 கோடி லிட்டர் குடிநீர் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த நிலையில், நெம்மேலி- - 2 திட்டத்தில், 1,516.82 கோடி ரூபாயில், 15 கோடி லிட்டர் திறன் உடைய சுத்திகரிப்பு நிலையம் கட்டும் பணி, 2019ல் துவங்கியது. கடல்நீர் செல்லும் வகையில் குழாய், உவர் நீரை வெளியேற்றும் குழாய், கடலில் பதிக்கப்பட்டுள்ளன.

சோழிங்கநல்லுாரில் பெரிய அளவில் கீழ்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, நீரேற்று நிலையம் மற்றும் 48 கி.மீ., துாரத்தில் குழாய் பதிக்கப்பட்டது. இந்த பணி, கடந்தாண்டு மே மாதம் முடிந்தது.

மின் இணைப்பு வழங்குவதில் தாமதம், சாலை சந்திப்புகளில் குழாய் இணைப்பு போன்ற பணிகள் இருந்ததால், சோதனை ஓட்டத்தில் தாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில், அனைத்து பணிகளும் முடிந்து, நான்கு மாதங்களுக்கு முன் சோதனை ஓட்டம் துவங்கியது. இந்த பணி முடிந்ததையடுத்து, மக்கள் பயன்பாட்டிற்கு விட குடிநீர் வாரியம் முடிவு செய்துள்ளது. வரும் 16ம் தேதிக்குள், முதல்வர் ஸ்டாலின் திறக்க உள்ளார். திறப்பு விழாவிற்காக, மேடை அமைக்கும் பணி நடக்கிறது.

பற்றாக்குறை இல்லை

குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:

நெம்மேலி- - 2 திட்டத்தால், சோழிங்கநல்லுார், வேளச்சேரி, மடிப்பாக்கம், உள்ளகரம், ஆலந்துார், பரங்கிமலை, மேடவாக்கம், கோவிலம்பாக்கம், நன்மங்கலம், கீழ்க்கட்டளை, மூவரசம்பேட்டை, பல்லாவரம் ஆகிய 12 இடங்களைச் சேர்ந்த 9 லட்சம் பேர் பயன் அடைவர்.

பேரூரில் பணி துவங்கிய, 40 கோடி லிட்டர் ஆலை பயன்பாட்டிற்கு வந்தால், கடல்நீரை சுத்திகரித்து 70 லட்சம் குடிநீர் பெற முடியும். இதன் வாயிலாக, கோடையில் ஏரிகளில் தண்ணீர் வற்றினாலும், சென்னையில் குடிநீர் பற்றாக்குறை இல்லாமல் பூர்த்தி செய்ய முடியும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

l இத்திட்டம், 1,516 கோடி ரூபாயில் துவங்கியது. கட்டுமானம், 20 ஆண்டு பராமரிப்பு, இயக்குதல் என்ற அடிப்படையில், 2019 மே 27ம் தேதி, 'கோப்ரா - டெக்டான் கன்சார்டியன்ஸ்' என்ற நிறுவனத்திற்கு ஒப்பந்தத்தின்படி வழங்கப்பட்டுள்ளதுl கட்டுமான பணி, 2020 அக்., 28ம் தேதி துவங்கியது. கடல்சார் பணிகள், இயந்திரவியல், மின் இணைப்பு, குழாய் பதிப்பு, நீரேற்று நிலையங்கள் கட்டுதல் போன்ற பணிகள் நடந்துள்ளனl கடல்சார் பணியில், 2,250 மி.மீ., விட்டம் உடைய 1,035 மீட்டர் நீளத்தில், கடல்நீர் உட்கொள்ளும் குழாய் பதிக்கப்பட்டுள்ளனl அதேபோல், சுத்திகரித்த பின் உவர்நீரை கடலில் வெளியேற்ற, 1,600 மி.மீ., விட்டம் உடைய 636 மீட்டர் துாரத்தில் குழாய் பதிக்கப்பட்டுள்ளன.l குடிநீரை, 12 இடங்களில் வினியோகிக்க, 48.10 கி.மீ., துாரத்தில், 300, 1,000, 1,200 மற்றும் 1,400 மி.மீ., விட்டம் உடைய குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன.



தினமும், 40 கோடி லிட்டர் உற்பத்தி திறன் உடைய மூன்றாவது திட்டப்பணி, ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை நிதி உதவியுடன், 4,276.44 கோடி ரூபாயில், இ.சி.ஆர்., பேரூரில், கடந்த ஆக., 21ம் தேதி, முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். இத்திட்டம், இந்து அறநிலைத்துறையின் ஆளவந்தார் அறக்கட்டளையின், 85.51 ஏக்கர் இடத்தில் அமைகிறது. கடலில், 1,150 மீட்டர் நீளத்தில் குழாய் பதிக்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் வாயிலாக, 59 கி.மீ., நீளத்தில் குழாய் பதித்து, சென்னை, தாம்பரம் மாநகராட்சி மற்றும் புறநகர் ஊராட்சிகளில், 22.67 லட்சம் மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படும். இத்திட்டத்தை, 2026ல் முடிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.



செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து, தினமும் 26.5 கோடி லிட்டர் குடிநீர், சென்னைக்கு வழங்கப்படுகிறது. கூடுதலாக, 26.5 கோடி லிட்டர் குடிநீர் வழங்க, 37.10 கோடி ரூபாயில், 2,000 மி.மீ., விட்டம் உடைய, 6.5 கி.மீ., துாரம் குழாய் பதிக்க திட்டமிடப்பட்டது.இதில், நசரத்பேட்டை, சென்னீர்குப்பம், பூந்தமல்லி புறவழிச்சாலை, போரூர் பகுதியில், 4.75 கி.மீ., துாரம் குழாய் பதிக்கப்பட்டது. மீதமுள்ள, 1.75 கி.மீ., துாரத்தில், பல்வேறு காரணங்களால் குழாய் பதிக்கப்படவில்லை. இந்நிலையில், விடுபட்ட பகுதிகளில் குழாய் இணைக்கும் பணி, நேற்று முன்தினம் துவங்கியது.இந்த பணி, ஆறு மாதங்களில் முடியும். அதன்பின், செம்பரம்பாக்கத்தில் இருந்து தினமும் 53 கோடி லிட்டர் குடிநீர் கிடைக்கும். இந்த குடிநீரால், அம்பத்துார், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்துார், அடையாறு மற்றும் தாம்பரம், ஸ்ரீபெரும்புதுார் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த, 20 லட்சம் பேர் பயன் அடைவர்.



- -நமது நிருபர்- -

சென்னை அடுத்த நெம்மேலியில், 1,516 கோடி ரூபாயில் அமைக்கப்பட்ட கடல்நீரை குடிநீராக்கும் இரண்டாவது ஆலை, வரும் 16ம் தேதிக்குள், முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். இந்த ஆலையில், தென்சென்னை

மூலக்கதை