'பாரத் ஆட்டா, பாரத் ரைஸ்' கூட்டுறவு கடையில் கிடைக்குமா?

  தினமலர்
பாரத் ஆட்டா, பாரத் ரைஸ் கூட்டுறவு கடையில் கிடைக்குமா?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்


சென்னை : குறைந்த விலை உடைய பாரத் ஆட்டா, பாரத் அரிசியை, கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக பொது மக்களுக்கு விற்குமாறு மத்திய அரசை, கூட்டுறவு துறை வலியுறுத்தியுள்ளது.

நாடு முழுதும் விளைச்சல் பாதிப்பால், கடந்த ஆண்டு இறுதியில் கோதுமை விலை உயர்ந்தது. தமிழகத்தில் வெளிச்சந்தையில், கிலோ கோதுமை மாவு விலை, 60 ரூபாயாக உள்ளது.

விலை உயர்வை கட்டுப்படுத்தும் நோக்குடன் மத்திய அரசு, 'பாரத் ஆட்டா' என்ற பெயரில், கிலோ கோதுமை மாவு, 27.50 ரூபாய்க்கு விற்க உத்தரவிட்டது.

இதற்காக தமிழகத்திற்கு, 1,000 டன் கோதுமை மாவு ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்த மாவு விற்பனை செய்யும் பணியை, 'நாபெட்' எனப்படும், மத்திய கூட்டுறவு நிறுவனம் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது.

தற்போது, வெளிச்சந்தையில் அரிசி விலையும் உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் கிலோ பொன்னி பழைய அரிசி விலை, 55 ரூபாயாக உள்ளது.

நாடு முழுதும், 'பாரத் ரைஸ்' என்ற பெயரில், கிலோ அரிசியை, 29 ரூபாய்க்கு விற்க மத்திய அரசு சமீபத்தில் உத்தரவிட்டது.

மொத்தம், 5 லட்சம் டன் பாரத் அரிசி விற்கப்பட உள்ளது. அதில் தமிழகத்திற்கு, 22,000 டன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பாரத் அரிசி 5 கிலோ மற்றும் 10 கிலோ அளவில் கிடைக்கும். இந்த அரிசியை விற்க, தேசிய வேளாண் கூட்டுறவு இணையம், தேசிய கூட்டு றவு நிதி மற்றும் மத்திய பண்டகசாலை, கேந்திரிய பந்தர் ஆகியவற்றுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிறுவனங்கள் சென்னை உட்பட முக்கிய நகரங்களில் வேன்களில், பாரத் அரிசியை விற்க உள்ளன. இந்நிலையில், கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக பாரத் அரிசி, பாரத் கோதுமை மாவு விற்குமாறு, மத்திய அரசை கூட்டுறவு துறை வலியுறுத்திஉள்ளது.

கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:


கூட்டுறவு சங்கங்கள், ஏற்கனவே பல்பொருள் அங்காடிகளை நடத்துகின்றன; மக்களுடன் நேரடி தொடர்பில் உள்ளன.

எனவே, 100 டன் அளவுக்கு பாரத் ஆட்டா மற்றும் குறிப்பிட்ட அளவு அரிசியை, கூட்டுறவு அங்காடிகள் வாயிலாக விற்குமாறு, மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு கூறினார்.

சென்னை : குறைந்த விலை உடைய பாரத் ஆட்டா, பாரத் அரிசியை, கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக பொது மக்களுக்கு விற்குமாறு மத்திய அரசை, கூட்டுறவு துறை வலியுறுத்தியுள்ளது.நாடு முழுதும் விளைச்சல்

மூலக்கதை