பாக்., தேர்தலில் திருப்பம்: இம்ரான் ஆதரவாளர்கள் முன்னிலை

தினமலர்  தினமலர்
பாக்., தேர்தலில் திருப்பம்: இம்ரான் ஆதரவாளர்கள் முன்னிலை



இஸ்லாமாபாத்,பாகிஸ்தான் பொது தேர்தலில், முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஆதரவாளர்கள் சுயேச்சையாக போட்டியிட்ட நிலையில், பல இடங்களில் அவர்கள் முன்னிலை வகித்து வருகின்றனர்.

நம் அண்டை நாடான பாகிஸ்தானில் நேற்று முன்தினம் பொது தேர்தல் நடந்தது. மொத்தம் 336 உறுப்பினர்களை உடைய பார்லிமென்டிற்கு, 266 பேர் மக்களால் நேரடியாக தேர்வு செய்யப்படுகின்றனர்.

கால தாமதம்



மீதியுள்ள இடங்களில், 60 பெண்களுக்கும், 10 அந்நாட்டு சிறுபான்மை இன மக்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.

ஒரு தொகுதியில் வேட்பாளர் உயிரிழந்ததை அடுத்து, 265 இடங்களுக்கு நேற்று முன்தினம் ஓட்டுப் பதிவு நடந்தது. இதில், ஆட்சி அமைப்பதற்கு 133 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.

பலத்த பாதுகாப்புக்கு நடுவே நடந்த ஓட்டுப் பதிவின்போது, இணைய மற்றும் மொபைல் போன் சேவைகள் முடக்கப்பட்டன.

ஓட்டுப்பதிவு முடிந்ததும், நேற்று முன்தினம் இரவே ஓட்டுகள் எண்ணும் பணி துவங்கியது.

வன்முறை சம்பவங்கள், தொலை தொடர்பு மற்றும் இணைய சேவைகள் முடக்கம் ஆகியவற்றுக்கு இடையில், தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் கால தாமதம் ஏற்பட்டு வருகிறது.

ஒவ்வொரு தொகுதி களாக ஓட்டுகள் எண்ணப்படும் சூழலில், நேற்று இரவு, 224 தொகுதிகளின் முடிவுகள் வெளியாகின.

முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் - இ - இன்சாப் கட்சி ஆதரவு சுயேச்சை வேட்பாளர்கள், 92 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.

அடுத்ததாக பாக்., முஸ்லிம் லீக் நவாஸ் கட்சி 63 இடங்களையும், பெனசிர் புட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி 50 இடங்களையும் கைப்பற்றின. பல இடங்களில் இம்ரான் கான் ஆதரவாளர்கள் முன்னிலை வகித்து வருகின்றனர்.

முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், தன்னை எதிர்த்து போட்டியிட்ட இம்ரான் கான் ஆதரவாளர் யாஸ்மின் ரஷாத்தை விட 55,981 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

அவரின் சகோதரரும், முன்னாள் பிரதமருமான ஷெபாஸ் ஷெரீப், மகள் மரியம் நவாஸ் உள்ளிட்டோரும் பொது தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர். மீதமுள்ள தொகுதிகளில் ஓட்டுகள் எண்ணும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

மாகாண சட்டசபைக்கான தேர்தலில், சிந்து மாகாணத்தின் 55 தொகுதி களில், 45 இடங்களை பாகிஸ்தான் மக்கள் கட்சி கைப்பற்றியுள்ளது.

ரகசிய ஆவணம்



கைபர் பக்துன்குவா மாகாணத்தின் 50 தொகுதி களில், 45 இடங்களை இம்ரான் கான் ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

பஞ்சாப் மாகாணத்தில் 39 இடங்களை பாக்., முஸ்லிம் லீக் நவாஸ் கட்சி பெற்றுள்ளது. இம்ரான் கான் ஆதரவாளர்கள் 33 இடங்களில் வென்றுள்ளனர். பலுசிஸ்தான் மாகாணத்தின் ஆறு தொகுதிகளில், ஜே.யு.ஐ.எப்., மூன்று இடங்களில் வென்றுள்ளது.

இம்ரான் கான் ஆதரவாளர்கள் பல இடங்களில் வென்றுள்ள நிலையில், அவர்களை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் பாக்., முஸ்லிம் லீக் நவாஸ் கட்சி பேச்சு நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

அரசின் ரகசிய ஆவணங்களை வெளியிட்டது, ஊழல் உள்ளிட்ட வழக்குகளில் இம்ரான் கானுக்கு அடுத்தடுத்து சிறை தண்டனை விதிக்கப்பட்டு, தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தேர்தலில் அவர் போட்டியிடவும் தடை விதிக்கப்பட்டது. அவரது கட்சியினருக்கு, அதிகாரப்பூர்வ சின்னம் ஒதுக்கப்படாமல் சுயேச்சைகளாக போட்டியிட்டனர்.

இந்த நிலையிலும், அவரது ஆதரவாளர்கள் அதிக அளவில் வெற்றி பெற்றது, பாக்., அரசியலில் திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஆனாலும், பாக்., ராணுவத்தின் ஆதரவு நவாஸ் ஷெரீபிற்கு உள்ளதால், கடைசி நேரத்தில் எந்தவிதமான மாற்றங்களும் நிகழலாம் என்றும் கூறப்படுகிறது.

இஸ்லாமாபாத்,பாகிஸ்தான் பொது தேர்தலில், முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஆதரவாளர்கள் சுயேச்சையாக போட்டியிட்ட நிலையில், பல இடங்களில் அவர்கள் முன்னிலை வகித்து வருகின்றனர். நம் அண்டை

மூலக்கதை