வாழை வாழ விடல: பயிரிட்டு 14 மாதம் காத்திருந்தும் லாபமில்லை: வியாபாரிகளுக்கு 3 நாட்களில் 5 மடங்கு லாபம்

தினமலர்  தினமலர்
வாழை வாழ விடல: பயிரிட்டு 14 மாதம் காத்திருந்தும் லாபமில்லை: வியாபாரிகளுக்கு 3 நாட்களில் 5 மடங்கு லாபம்

மதுரை: வாழைக் கன்று சாகுபடி செய்து 14 மாதங்கள் பராமரித்தாலும் வாழைத்தாருக்கு அதிகபட்சமாக ரூ.100 முதல் ரூ. 150 வரையே வியாபாரிகள் விலை நிர்ணயிப்பதால் நஷ்டத்தை சந்திக்க வேண்டியுள்ளது என்கின்றனர் வாழை விவசாயிகள்.

மதுரை மாவட்டத்தில் நெல், தென்னைக்கு அடுத்தபடியாக வாடிப்பட்டி, மேலுார் உட்பட பல பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் வாழை சாகுபடி செய்யப்படுகிறது. கன்று நட்டது முதல் 14 மாதங்கள் வரை தண்ணீர் பாய்ச்சி உரமிட்டு காற்றில் சாயாமல் அவ்வப்போது மண் அணைத்து பராமரிக்க வேண்டும்.

மதுரையில் 'நாடு' எனப்படும் முப்பட்டை ரகம்தான் இலை மற்றும் காய்களுக்காக பயிரிடப்படுகிறது. இவற்றில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளதால் அடிக்கடி பாதிப்புக்கு உள்ளாகிறது. இவ்வளவு கஷ்டப்பட்டு அறுவடை செய்தும் வாழைத்தாருக்கும் இலைக்கும் உரிய விலை கிடைக்கவில்லை என வாடிப்பட்டி விவசாயி குணசேகரன், மேலுார் மேலவளவு உழவர் உற்பத்தியாளர் குழு தலைவர் கோபாலன் தெரிவித்தனர்.

அவர்கள் கூறியதாவது: மழைக்காலத்தில் சில நேரங்களில் வாழைத்தாரின் முதல் சீப்பு சோடை காய்களாக விளைந்திருக்கும். மற்ற காய்கள் நன்றாக இருந்தாலும் சோடை காய்களை கணக்கிட்டு 100 முதல் 120 காய்கள் உள்ள ஒரு வாழைத்தாரை ரூ. 40 முதல் ரூ. 150 வரை வியாபாரிகள் விலை நிர்ணயிக்கின்றனர். 14 மாதங்களுக்கான உற்பத்திச் செலவு ரூ.120 முதல் ரூ.150 வரை ஆகிறது. நஷ்டக் கணக்கில் தான் வியாபாரியிடம் நாங்கள் விற்க வேண்டி உள்ளது.

அவற்றை வாங்கி மூன்றே நாட்களில் தாரின் விலை ரூ.600 வரை வியாபாரிகள் விற்று லாபம் ஈட்டுகின்றனர். இந்த விஷயத்தில் வியாபாரிகள் 'கூட்டணி' அமைத்து ஒரே மாதிரி விலை குறைப்பு செய்வதால் எங்களால் கூடுதல் விலைக்கு விற்க முடியவில்லை.

எடை கணக்கில் வேண்டும்



தேனி உட்பட பல மாவட்டங்களில் எடை கணக்கில் வாழைத்தார் விற்கப்படுகிறது. மதுரையில் தாரின் எடை எவ்வளவு இருந்தாலும் வியாபாரிகள் நிர்ணயித்தது தான் சட்டமாக உள்ளது. அதேபோல மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் வாழை இலை 200 எண்ணிக்கை கொண்ட ஒரு கட்டு ரூ. 200க்கு எடுக்கின்றனர். எங்களுக்கு ஒரு இலைக்கு ரூ.1 என நிர்ணயித்து அதே இலையை ரூ.10க்கு விற்கின்றனர். இதை யாரும் கேட்க முடியவில்லை.

மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் வாழை விவசாயிகளுக்கு என கடைகள் இருந்தால் எங்களால் விற்க முடியும். கலெக்டர் அனீஷ்சேகர் இருந்தபோது இது குறித்து பேச்சுவார்த்தை நடந்தது. அதன் பின் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் மீண்டும் வியாபாரிகளின் கையே ஓங்கி நிற்கிறது என்றனர்.

மதுரை: வாழைக் கன்று சாகுபடி செய்து 14 மாதங்கள் பராமரித்தாலும் வாழைத்தாருக்கு அதிகபட்சமாக ரூ.100 முதல் ரூ. 150 வரையே வியாபாரிகள் விலை நிர்ணயிப்பதால் நஷ்டத்தை சந்திக்க வேண்டியுள்ளது

மூலக்கதை