நகர சாலைகளை சீரமைக்கும் பணிகள்... துவக்கம்; ரூ.21.14 கோடி மதிப்பீட்டில் பொ.ப.து. தீவிரம்

  தினமலர்
நகர சாலைகளை சீரமைக்கும் பணிகள்... துவக்கம்; ரூ.21.14 கோடி மதிப்பீட்டில் பொ.ப.து. தீவிரம்


அரசு துறைகளுக்குள் ஒருங்கிணைப்பு இல்லாததால், குடிநீர் குழாய், மின் கேபிள், கழிவுநீர் குழாய், டெலிபோன் கேபிள் பதிப்பு என ஒவ்வொரு துறையும், அடிக்கடி சாலையை தோண்டுகின்றன.

தனி நபர்களும் தங்களது தேவைக்காக சாலையை கொத்து பரோட்டா போடுகின்றனர். அரசியல் கட்சியினரும் பேனர் கட்டுவது, வரவேற்பு வளைவு அமைப்பது, கொடி கட்டுவது என சாலையை தோண்டி சேதப்படுத்துகின்றனர். இதை எல்லாம் அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் கண்களை மூடி கொண்டுள்ளனர். இதனால், நகர சாலைகள் அனைத்தும் குண்டும் குழியுமாக மாறி விடுகிறது.

இந்நிலையில், பொதுப்பணித்துறை கட்டடம் மற்றும் சாலை பிரிவு மத்திய கோட்டம் சார்பில், புதுச்சேரி நகர பகுதியில் உள்ள சாலைகளை சீரமைக்க 21.14 கோடி ரூபாயில் பணிகள் துவங்கி உள்ளது.

முதற்கட்டமாக சுப்பையா சாலையில் தார் சாலை அமைக்கும் பணி துவங்கியது. தொடர்ந்து, காந்தி வீதி, மிஷன் வீதி, ஆம்பூர் சாலை, செஞ்சி சாலை, சின்ன சுப்ராயப்பிள்ளை வீதி,மார்டின் வீதி, செயின்ட் லுாயிஸ் வீதி, கம்பாஞ்சி வீதி, செயின்ட் மார்டின் வீதி, கொசக்கடை வீதி, லுாயிஸ்டர் வீதி, ரங்கப்பிள்ளை வீதி, செயின்ட ஆக்னி வீதி, லெபர்தெனே வீதி, கர்சன் வீதி, சூர்கூப் வீதி, தில்லை மேஸ்திரி வீதி, விக்டர் சிமோனல் வீதி, சுப்ய்ரேயன் வீதி, பெருமாள் கோவில் வீதி, முத்துமாரியம்மன் கோவில் வீதி, ஈஸ்வரன் கோவில் வீதி, லல்லி தொலந்தர் வீதி, காமாட்சியம்மன் கோவில் வீதி, அரபிந்தர் வீதி, துய்பே வீதி, வைசியால் வீதி, செயின்ட் கில்ஸ் வீதி, பாரதி பூங்கா சுற்றியுள்ள சாலை, ரோமண்ட் ரோலன்ட் வீதி, துமாஸ் வீதி, தியாகராஜர் வீதி, கேண்டீன் வீதி, பெல்கம் வீதி, மணக்குள விநாயகர் கோவில் வீதி, திருமுடி நகர் முதல் குறுக்கு தெரு உட்பட 44 சாலைகள் 22,675 மீட்டர் (22.6 கி.மீ.) துாரத்திற்கு செப்பனிடப்பட உள்ளது.

மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை போடப்படும், சாலைகளை புதுப்பிக்கும் 'ரெனிவூடு கோட்' முறையில் தார் சாலை அமைக்கப்பட உள்ளது.பழைய சாராய ஆலை துவங்கி ஒதியஞ்சாலை வரை எஸ்.வி. பட்டேல் சாலை மற்றும் அண்ணா சாலையோரம் சேதமடைந்துள்ள 3,759 மீட்டர் துார பிளாட்பாரம் சீர் செய்தும், 3,500 மீட்டர் துாரத்திற்கு எல் வடிவ வாய்க்காலும், 1,400 மீட்டர் துாரத்திற்கு யு வடிவ வாய்க்கால், திருமுடி நகரில் 479 மீட்டர், வைத்திக்குப்பத்தில் 375 மீட்டர் சிமென்ட் சாலை அமைக்கப்படுகிறது.தற்போது துவங்கியுள்ள சாலைப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்பணிகள் வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் முடிக்கப்பட உள்ளது.

அரசு துறைகளுக்குள் ஒருங்கிணைப்பு இல்லாததால், குடிநீர் குழாய், மின் கேபிள், கழிவுநீர் குழாய், டெலிபோன் கேபிள் பதிப்பு என ஒவ்வொரு துறையும், அடிக்கடி சாலையை தோண்டுகின்றன.தனி நபர்களும்

மூலக்கதை