பத்திரப்பதிவு துறை மேக கணிமைக்கு... மாறுகிறது;  தடங்கலின்றி சேவைக்கு உத்தரவாதம்

தினமலர்  தினமலர்
 பத்திரப்பதிவு துறை மேக கணிமைக்கு... மாறுகிறது;  தடங்கலின்றி சேவைக்கு உத்தரவாதம்


புதுச்சேரி : பத்திர ஆவணங்கள் மாயமான சம்பவத்தினை தொடர்ந்து, பத்திர பதிவு துறைபாதுகாப்பான மேக கணிமை தொழில்நுட்பத்திற்கு விரைவில் மாறுகிறது. இதற்கான தொழில்நுட்பப் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.

புதுச்சேரியில் போலி ஆவணங்கள் மூலம் சொத்துகள் அபகரிக்கும் சம்பவங்கள் நடந்து வருகின்றது.பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்களின் சொத்துகள் அபகரிக்கப்பட்டன.இது பிரான்ஸ் பார்லிமெண்ட்டில் எதிரொலித்து சர்வதேச அளவில் விவாதத்தை ஏற்படுத்தியது.இதன்பின் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இருப்பினும், அவ்வவ்போது நில அபகரிப்பு புகார்கள், முறைகேடுகள் நடந்து வருகின்றன.

சமீபத்தில் காமாட்சியம்மன் கோவிலுக்கு சொந்தமான 50 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் போலி ஆவணம் மூலம் பத்திர பதிவு செய்து, வீட்டு மனைகளாக மாறியது பூதாகரமானது.

அத்துடன், பத்திர பதிவு துறையில் பதிவு செய்யப்பட்ட உயில் சொத்துக்களில் ஆவணங்களை மாற்றி நுாதன மோசடி நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.மேலும் பத்திர பதிவு ஆவணங்களும் மாயமாயின.

இது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.தொழில்நுட்ப வல்லுநர்கள் உதவியுடன் மாயமான ஆவணங்கள் மீட்டெடுக்கப்பட்டன.

இந்த விவகாரத்தினை தொடர்ந்து, பத்திர பதிவு துறை பாதுகாப்பான கிளவுட் கம்ப்யூட்டிங் என்ற மேக கணிமை தொழில்நுட்பத்திற்கு விரைவில் மாறுகிறது.

இதற்கான தொழில்நுட்ப பணிகளை பத்திர பதிவு துறை முடுக்கிவிட்டுள்ளது.

மேக கணிமை தொழில்நுட்பத்திற்கு மாறும்போது 24 மணி நேரமும் பத்திர பதிவு சேவைகள் பாதிக்காமல் பதிவு செய்ய முடியும். மின் தடை ஏற்பட்டாலும் கூட பத்திர பதிவினை சிக்கல் இன்றி தொடர முடியும் என்பதால் பணிகளை பத்திர பதிவு துறை வேகப் படுத்தி வருகின்றது.

அரசு துறைகள் மாறுமாஅரசு துறைகளுக்கான கேபிள்கள் அருகே பள்ளம்தோண்டும்போது கவனமாக தோண்ட வேண்டும். ஆனால் முன்னெச்சரிக்கை ஏதுமின்றி கண்டமேனிக்கு கேபிள்களை துண்டாக்கி குதறி விடுகின்றனர். சமீபகாலமாக இது அடிக்கடி நடக்கிறது.

இதன் காரணமாக அரசு இணையதள சேவைகள் துண்டிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, பொதுமக்கள் பயன்பெறும் என்.கே.என்.,நெட் ஒர்க் கேபிள்கள் துண்டிக்கப்படும்போது சான்றிதழ் விண்ணப்பித்தல், பெறுதல் சேவைகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றன. புதுச்சேரி அரசு சேவை, மின்னணு மாவட்ட சேவைகள் முற்றிலுமாக ஸ்தம்பித்து முடங்கி விடுகின்றன. பொதுமக்கள் சில சேவைகளை பெற ஐந்து நாட்கள் வரை கூட காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

பொது சேவை மையங்கள், நெட் சென்டர்கள் வெவ்வேறு விதமான இண்டர்நெட் சேவைகளை பெற்றிருந்தாலும், என்.கே.என். கேபிள் துண்டிக்கப்படும்போது, சான்றிதழ்களை பெற முடிவதில்லை. மாநில வலைவாசலை(www.py.gov.in) கூட உள்ளே நுழைய முடியவில்லை. தாலுக்கா அலுவலகங்கள், அந்தந்த அரசு துறையை நாடி சான்றிதழ்களை டவுண்லோடு செய்ய வேண்டிய நிலை உள்ளது.

பத்திர பதிவினை தொடர்ந்து, மீதமுள்ள அனைத்து அரசு துறைகளையும் கிளவுட் கம்ப்யூட்டிங் தொழில்நுட்பத்திற்கு மாற்ற வேண்டும்.இதற்கான தொழில்நுட்ப தணிக்கையை ஐ.டி.,துறையை கொண்டு ஆரம்பிக்க வேண்டும்.

புதுச்சேரி : பத்திர ஆவணங்கள் மாயமான சம்பவத்தினை தொடர்ந்து, பத்திர பதிவு துறைபாதுகாப்பான மேக கணிமை தொழில்நுட்பத்திற்கு விரைவில் மாறுகிறது. இதற்கான தொழில்நுட்பப் பணிகள் முழு வீச்சில்

மூலக்கதை