நிகர்நிலை பல்கலையுடன் மீண்டும் பேச்சுவார்த்தை... நடத்தப்படுமா; ஆண்டுதோறும் 800 எம்.பி.பி.எஸ்., சீட்டுகள் பறிபோகுது

தினமலர்  தினமலர்
நிகர்நிலை பல்கலையுடன் மீண்டும் பேச்சுவார்த்தை... நடத்தப்படுமா; ஆண்டுதோறும் 800 எம்.பி.பி.எஸ்., சீட்டுகள் பறிபோகுது

புதுச்சேரி : மாநிலத்தில் உள்ள நான்கு நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் உள்ள 800 எம்.பி.பி.எஸ்., சீட்டுகள் பிற மாநில மாணவர்களுக்கு ஆண்டுதோறும் தாரை வார்க்கப்பட்டு வருகின்றது. எனவே மீண்டும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அரசு ஒதுக்கீட்டினை பெற முயற்சிக்க வேண்டும்.

புதுச்சேரி மாநிலத்தில் ஜிப்மர், இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லுாரி என இரண்டு அரசு மருத்துவ கல்லுாரிகள் உள்ளன.இதுமட்டுமின்றி 3 தனியார் மருத்துவ கல்லுாரிகள் 4 நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் உள்ளன.

இந்த 9-மருத்துவ கல்லூரிகளில் மொத்தம் 1,830 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன. இவற்றில் புதுச்சேரி மாநில மாணவர்களுக்கு சென்டாக் மூலம் 370 இடங்களும், ஜிப்மர் மருத்துவ கல்லூரி மூலம் 64 இடங்களும் என புதுச்சேரி மாநில மாணவர்களுக்கு மொத்தம் 434 எம்.பி.பி.எஸ்..சீட்டுகள் கிடைக்கின்றது.மீதம் உள்ள 1396 இடங்கள் நமது மாநில மாணவர்களுக்கு பயனில்லாமல் போகின்றது.

குறிப்பாக, மாநிலத்தில் உள்ள 4 நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் உள்ள 800 சீட்டுகளில் ஒரு எம்.பி.பி.எஸ்.,சீட்டு கூட அரசு ஒதுக்கீடாக பெறாமல் பிற மாநில மாணவர்களுக்கு சென்றுக்கொண்டு உள்ளன.

ஏனெனில், புதுச்சேரிரியில் உள்ள இந்த நான்கு தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் மத்திய அரசின் மருத்துவ சேவைகளுக்கான தலைமை இயக்குனர் அலுவலகம் இணைய தளம் வழியாக கவுன்சிலிங் நடத்தப்பட்டு வருவதால் புதுச்சேரி மாணவர்களுக்கு அரசு ஒதுக்கீட்டு இடங்களாக ஒரு சீட்டு கூட பெற முடியாத சூழல் நிலவுகிறது.

கடந்த காலங்களில் புதுச்சேரியில் உள்ள 4 நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் 600 எம்.பி. பி.எஸ்.,சீட்டுகள் இருந்த போது ஆண்டுதோறும் 137 சீட்டுகள் அரசு ஒதுக்கீடாக பெறப்பட்டன.

ஆனால் இந்த நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் தற்போது 800 சீட்டுகளாக உயர்ந்தபோதும் புதுச்சேரி அரசால் இந்த அரசு ஒதுக்கீட்டு இடங்களை கூட பெறமுடியவில்லை.

இந்த நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் புதுச்சேரி மண்ணில் அமைந்துள்ளன. இங்கு தண்ணீர், மின்சாரம் என சகல வசதிகளையும் அனுபவித்துக்கொண்டு புதுச்சேரி மாநில மாணவர்களுக்கு ஒரு இடங்களை கூட தர மறுக்கின்றன.

இப்படிப்பட்ட நிகர்நிலைப்பல்கலைகள்., புதுச்சேரி மாநிலத்திற்கு தேவையா என கேள்வி எழுந்து வருகின்றது.

நீட் தேர்வு குறித்து முன்பு அச்சம் இருந்தது.குறைவான எண்ணிக்கையில் தேர்ச்சி பெற்றனர்.இப்போது நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களின் எண்ணிக்கை கனிசமாக அதிகரித்துள்ளது.

எனவே மாநில மாணவர்களுக்கான நிகர்நிலை பல்கலைக்கழகங்களிலும் அரசு ஒதுக்கீட்டு இடங்களை பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

தற்போதுள்ள அரசு மருத்துவ கல்லுாரிகளில் 33 சதவீத வரை அரசு ஒதுக்கீட்டு இடங்கள் பெறப்படுகின்றன.

அப்படி நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் உள்ள 800 சீட்டுகளில் குறைந்தபட்சம் 33 சதவீத இட ஒதுக்கீடு பெற்றால் கூட 264 எம்.பி.பி.எஸ்., சீட்டுகள் அரசு ஒதுக்கீடாக கிடைக்கும்.இதன் மூலம் கூடுதலாக 264 மண்ணின் மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ்., படிக்க வாய்ப்பு கிடைக்கும்.

எனவே, நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் மீண்டும் அரசு பேச்சுவார்த்தை நடத்தி,அரசு ஒதுக்கீட்டு இடங்களை உறுதி செய்ய வேண்டும்.

புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் கீழ் தற்போது இயங்கும் மருத்துவக் கல்லுாரிகளில் இருந்து 50 சதவீத இடங்களை பெற முடிவதில்லை. எனவே, சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடியும், இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு (15) 4ன் கீழ், 50 சதவீத இடங்களை பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது.ஆனால் அரசாணையாக இல்லாமல் இது சட்டமாக இருக்க வேண்டும். சிறப்பு சட்டம் இயற்றி அதன் கீழ் நிகர்நிலை பல்கலைக்கழகங்களை கொண்டு வந்தால் மட்டுமே நிகர்நிலை பல்கலைக்கழக இடங்களை புதுச்சேரி மாணவர்களுக்கு பெற முடியும்.



புதுச்சேரி : மாநிலத்தில் உள்ள நான்கு நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் உள்ள 800 எம்.பி.பி.எஸ்., சீட்டுகள் பிற மாநில மாணவர்களுக்கு ஆண்டுதோறும் தாரை வார்க்கப்பட்டு வருகின்றது. எனவே மீண்டும்

மூலக்கதை